சுவாமி அனந்த்ஸ்வரூப்
வாரணாசியில் இந்துராஷ்டிர அரசமைப்பு வரைவு
- Author குடந்தை ஞானி --
- Thursday, 18 Aug, 2022
இந்தியாவை முழு இந்து நாடாக மாற்றவும், முழுமையான இந்து நாட்டின் தலைநகரை டெல்லியிலிருந்து வாரணாசியாக மாற்றவும், இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு மட்டுமே வாக்குரிமை, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இல்லை என அறிவிக்கவும், ஒரு வரைவு அறிக்கையை 30 பேர் அடங்கிய இந்து சாதுக்கள் குழு, வாரணாசியில் உள்ள சங்கராச்சார்யா பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி அனந்த்ஸ்வரூப் தலைமையில் தயாரித்துள்ளனர்.
இந்த வரைவு அறிக்கை 32 பக்க அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டி கையேடு 750 பக்க அளவில் தயாரிக்கப்பட உள்ளது. 2023 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் பிரயாக்ராஜ் தனம் சனாசத்தில் இந்த 32 பக்க வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
சுவாமி அனந்த்ஸ்வரூப் “நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நாதம் இந்தியாவை இந்துதேசமாக அறிவிப்பதுதான். இஸ்லாமிய தீவிரவாதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் நம் சகோதர இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். ஆதலால் இந்தியாவை இந்துதேசமாக அறிவிக்க இது சரியான நேரம். இந்த வரைவு அறிக்கையின்படி, டெல்லிக்கு பதில் வாரணாசி தலைநகராக அமைக்கப்படும். வர்ணாஸ்ரம முறை சேர்க்கப்பட்டு, குருகுலக் கல்வி கட்டாயமாக்கப்படும். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு வாக்குரிமை இருக்காது. ஆனால் மற்ற உரிமைகள் அவர்களுக்கு இருக்கும். இந்துக்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கும். வேண்டுமென்றால் சீக்கியர்கள், பௌவுத்தர்கள், ஜைனர்களின் வாக்குரிமை ஏற்றுக்கொள்ளப்படும். வாக்களிக்கும் உரிமை 16 வயதிலேயே வழங்கப்பட்டு, 25 வயதில் தேர்தலில் போட்டியிடலாம். மற்ற நாடுகளில் இவ்வாறு இருக்கும்போது ஏன் இந்தியாவிலும் இவ்வாறு இருக்க கூடாது? இஸ்லாமிய நாடுகள் இந்துக்களுக்கு வாக்குரிமை அளிக்கிறதா? எனவே அனைத்து இந்துக்களும் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
Comment