கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர்
தெலங்கானா: "பிரிவினையை உருவாக்குவதுதான் பாஜக-வின் அடையாளம்"
- Author குடந்தை ஞானி --
- Thursday, 27 Oct, 2022
கடந்த நான்கு ஆண்டுகளாக அவமானப்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டதாக தெலங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க தலைவரும், மாநிலங்களவையின் முன்னாள் எம்.பி-யுமான ஆனந்த் பாஸ்கர் ரபோலு இன்று அந்தக் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், "கட்சியிலிருந்து விலகும்போது, நான் குற்றம்சாட்டுவது கண்ணியமானதாக இருக்காது. ஆனால், நேர்மையாகச் சுயபரிசோதனை செய்துகொள்ள உங்கள் அனைவரையும் பணிவுடன் அழைக்கிறேன்.
ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம் என்பதைப் பிரதிபலிக்கும் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற கொள்கையை பா.ஜ.க பின்பற்றுகிறதா... ஏனெனில், இங்கிலாந்தில் வெறும் மூன்று சதவிகிதம் இருக்கும் இந்திய இனத்தைச் சேர்ந்தவர் இப்போது பிரதமராகியிருக்கிறார். அமெரிக்காவில் ஏற்கெனவே இந்திய வம்சாவளி துணை ஜனாதிபதியாகியிருக்கிறார். ஆனால் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக அவமானப்படுத்தப்பபட்டு, ஒதுக்கப்பட்டேன். அனைத்துக் கட்சிகள், அனைத்துத் பிரிவினருக்கும் அன்பான தலைவராக இருந்த மறைந்த வாஜ்பாயின் ராஜ தர்மத்தைப் பின்பற்றுங்கள்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களைத் தொடர்ந்து புறக்கணித்தது, அவர்களைக் கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது. ஆனால், மத்திய அரசு தயக்கமின்றி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த இறப்பும் இல்லை என்று கூறியது. அதைவிட கொரோனாவைக் கட்டுப்படுத்தியதாக தனது சாதனைகளைக் கொண்டாடியது. சமூகப் பாதுகாப்பு, நீதி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவை கட்சியின் பார்வையிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. தேர்தல் லாபத்துக்காக, அச்சுறுத்தலும், பிரிவினையை உருவாக்குவதும்தான் கட்சியின் அடையாளமாக இருக்கிறது.
தெலங்கானாவை மத்திய அரசு மாற்றாந்தாய் மனோபாவத்தில் நடத்துகிறது. சாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக்கூட கட்சியும், அதன் மத்திய அரசும் எதிர்க்கின்றன. தெலங்கானாவின் நியாயமான கோரிக்கையை வேண்டுமென்றே தொடர்ந்து மறுப்பதும், ஒற்றை மொழி மேலாதிக்கத்தை ஊக்குவிப்பதும், மாநிலத்தின் பெருமைகள் மற்றும் மொழி உணர்வுகளைச் சிறுமைப்படுத்துவதும் என்னை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
Comment