No icon

மத்திய பிரதேசம்

கலப்புத் திருமணம் செய்தோரை மாநில அரசு விசாரிக்கக் கூடாது

மத்திய பிரதேச மாநிலத்தின் உயர் நீதிமன்றமானது பிற மதங்களோடு கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் மாநில சட்டத்தை மீறினார்கள் என்ற பெயரில் மாநில அரசு விசாரிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 1968 ஆம் ஆண்டு குறைவான தண்டனைகளோடு, முதன் முதலில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2021 மார்ச் மாதத்தில் இச்சட்டமானது கடுமையான தண்டனைகளுடன் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி, மத்திய பிரதேச மத சுதந்திர சட்டம் பிரிவு 10 இன்படி ஏமாற்றுதல், மோசடிகள் மூலமா அல்லது திருமணத்தின் மூலமாக மதமாற்றுவது கிரிமினல் குற்றமாகும். மேலும் தன் மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாற விரும்புவோர் அதற்கான காரணங்களை மாவட்ட நீதிபதியிடம் குறைந்தது 60 நாட்களுக்கு முன்பாக எழுத்து வடிவில் அளித்திருக்க வேண்டும். அப்படி தவறினால் அதற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

நீதிபதிகள் சுஜாய் பால் மற்றும் பிரகாஷ் சந்திர குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வானது மத்திய பிரதேச மாநிலத்தின் மத சுதந்திர சட்டம் 2021 பிரிவு 10 மீறி யாராவது திருமணம் செய்திருந்தால் அவர்களை விசாரிக்க மாநில அரசு முனைய கூடாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளனர். ஒவ்வொரு குடி மகனுக்கும் தன்னுடைய மதப்பற்றை வெளிப்படுத்தவோ அல்லது வெளிப்படுத்தாமல் இருக்கவோ உரிமை உண்டு. அதேபோல தன்னுடைய மதத்திலிருந்து தான் விரும்பும் மதத்திற்கு மாறுவதற்கும் அவருக்கு உரிமை உண்டு. அரசாங்கம் கூட ஒருவரை இந்த மதத்தைதான் பின்பற்ற வேண்டும் என்று கூற முடியாது என்று நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கை குறித்து மூன்று வாரங்களில் மாநில அரசாங்கம் பதில் அளிக்க வேண்டுமென்று அவர்கள் கூறினார்கள்.

Comment