No icon

உங்களது இந்திய அடையாளத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்!

ஆயர்கள் பேரவையின் 16-வது பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கெடுக்க இத்தாலி உரோம் நகருக்குச் சென்றிருந்த இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினுடைய பிரதிநிதிகள், உரோமில் வசிக்கும் அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் மற்றும் அருள் சகோதரர்களைச் சந்திக்கும் வண்ணம் ஒரு சிறிய கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். கர்தினால் பிலிப் நேரி தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினுடைய துணைத் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் மறையுறை வழங்கினார். பிறகு இக்கூட்டத்தில் பேசிய கர்தினால் பிலிப் நேரி அவர்கள்இந்தியக் கத்தோலிக்கத் திரு அவையிலே நாம் அனைவரும் மிக அழகான கலாச்சாரங்களால், மொழிகளால் மற்றும்  சடங்கு முறைகளால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கின்றோம். பரந்து விரிந்த இந்த உலகில் நாம் நமது இல்லங்களைக் கடந்து வெகு தொலைவில் இருந்தாலும், நமது இந்திய நாட்டில் வேரூன்றியிருக்கும் நமது அடையாளத்தையும், தொடர்பையும் காக்க வேண்டியது முதன்மையானதாகும்என்று கூறினார். கர்தினால் அந்தோணி பூளா அவர்கள் செபம் செய்து இக்கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அனைவரையும் வாழ்த்தினார். இக்கூட்டத்தில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.

Comment