வித்தியாசமான தவக்கால ஒறுத்தல் முயற்சி
தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் பலவிதமான ஒறுத்தல் முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. அவ்வகையில் மங்களூரு மறைமாவட்டம் கடந்த மூன்றாண்டுகளாக வீடற்றோருக்கு வீடுகள் கட்டித் தருவதைத் தவக்கால முயற்சியின் ஒரு பகுதியாகக் கடைப்பிடித்து வருகிறது. 2019-ஆம் ஆண்டு மங்களூரு மறை மாவட்டம் நடத்திய ஆய்வின்படி, ஏறக்குறைய 500 கிறிஸ்தவர்கள் சொந்த வீடுகளின்றி வாழ்ந்து வருவதாக அறிந்ததைத் தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரவேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் இதற்கெனவே நிதி திரட்டப்படுகிறது. கடந்த ஆண்டில் 75 புதிய வீடுகளைக் கட்டி வீடற்றோருக்கு வழங்கியுள்ளது. கத்தோலிக்க மக்களின் நன்கொடைகளுடன் கட்டப்படும் இந்த வீடுகள், 8 இலட்சம் மதிப்புடையதாகவும், 650 முதல் 700 சதுர அடி கொண்டதாகவும் இருக்கின்றன. வீடற்றோரின் நிலத்தில் கட்டிக் கொடுக்கப்படும் இந்த வீட்டுக்கான செலவில் 51 விழுக்காட்டை மங்களூரு மறைமாவட்டமும், ஏனைய தொகையை அவ்வீடு கட்டப்படும் பகுதியின் பங்குத்தளமும், உரிமையாளரும் வழங்கி வருகின்றனர். கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல, வீடற்ற பிற மதத்தினரும் விண்ணப்பித்தால் அவர்களுக்கு உதவவும் மறைமாவட்டம் தயாராக இருக்கின்றது என்று ஆயர் மேதகு பீட்டர் பால் சல்தான்ஹா கூறியுள்ளார்.
Comment