No icon

யார் இவர்கள்?

மதவாதிகளா? அரசியல்வாதிகளா? ஆதாயவாதிகளா?

ஆன்மிக நெறியால் பல்வேறு குழுக்களாக, சமயங்களாக வேறுபட்டு நின்றாலும், இந்திய மக்கள் நாம் அனைவரும் அறவுணர்வால் ஒன்றுபட்டு, ‘இந்தியன்என்ற நாட்டுப் பற்றால் ஒன்றிணைந்தபல்வேறு தேசிய இனக்குழுக்களின் தொகுப்புஎன்பதை மட்டும் எவராலும் மறுக்க முடியாது. ‘வேற்றுமையில் ஒற்றுமை’ (Unity in Diversity) என்னும் நேருவின் தாரக மந்திரம் இந்தியாவை அடையாளப்படுத்தும் ஆகச் சிறந்த வரையறை. இந்தச் சொல்லாடல் மீண்டும் நாடெங்கும் எதிரொலித்து முழங்கும் நாள் வெகு தூரம் இல்லை என்பதே எமது நம்பிக்கை.

பல்வேறு மொழிகள், நம்பிக்கைகள், சாதிய சமூகக் கட்டமைப்பின் படிநிலைகள் மற்றும் சமயங்களின் பன்முகத் தன்மை இருந்தபோதிலும், அதன் குடிமக்களிடையே வலுவான ஒற்றுமை உணர்வை இந்தியா கொண்டிருக்கிறது என்பதையே பன்னெடுங்காலமாக இச்சொற்றொடர் உலகிற்கு உணர்த்தி வருகிறது. ஆனால், இந்தக் கோட்பாட்டில் கட்டமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு இன்று திட்டமிட்டுச் சரிக்கப்பட்டு வருகிறது என்பது பேரதிர்ச்சியைத் தருகிறது.

அண்மைக்கால பா... அரசு தன்னை இந்துமதக் காவலராக முன்னிறுத்திஇந்தியா இந்துகளுக்கேஎன்று மறைமுகமாகவும், அவ்வப்போது வெளிப்படையாகவும் மேடைகளில் முழங்கி வருகிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதையும் கடந்து, குடிமக்களின் உள்ளத்தில் பேராபத்தையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தும் என்பதால் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ‘குடிமக்கள் அரசுஎன்பது எல்லாருக்கும் சமவாய்ப்பையும், சமத்துவத்தையும், சுதந்திரத்தையும் வழங்கக்கூடியதாக இருக்க வேண்டாமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் நமது நாட்டைஇந்தியா ஒரு மதச்சார்பற்ற குடியரசு நாடுஎன்றே வரையறுக்கிறது. எல்லா மதத்தவர்களின் கோட்பாடுகளையும், அதைப் பின்பற்றும் வழிமுறைகளையும் எந்த வேற்றுமையும், விமர்சனமும் இன்றி, சமமாக மதிக்க வேண்டும் என்றும், மதத்தின் அடிப்படையால் ஏற்படும் வேற்றுமைகள் அனைத்தையும் இங்கு முற்றிலுமாகத் தடை செய்கிறது என்றும் வரையறுக்கிறது. குறிப்பாக, 1976 -ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசமைப்பின் 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம், நமது அரசியல் அமைப்பின் முகப்புரையில்இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடுஎன்ற வார்த்தை இணைக்கப்பட்டது. மேலும், 1994 -ஆம் ஆண்டு S.R. பொம்மை வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம்குடியரசு உருவானதிலிருந்தே இந்தியா மதச் சார்பற்ற நாடுஎன்பதை மீண்டும் உறுதிபட வலியுறுத்தியுள்ளது.

எந்த மதத்திற்கும் இங்குச் சிறப்புச்  சலுகை வழங்கப்படவில்லை; ‘மதச்சார்பின்மைஎன்பது முறையாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது, மக்கள் எம்மதத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றலாம். ஆனால், அரசும், அதன் நிர்வாகமும் எந்த ஒரு தனிப்பட்ட மதத்தையும் ஆதரிப்பதுமில்லை அல்லது எதிர்ப்பதுமில்லை. எவ்வித வேறுபாடும் இன்றி அரசு அனைத்து மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் அனுமதிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்கிறது என்பதே இதன் பொருள். இது எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும், பரப்புரை செய்யவும் குடிமக்களுக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்கிறது. ஆகவே, நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்காத வண்ணம் மத வழிபாடுகளும், அதன் செயல்பாடுகளும் அமைய வேண்டும். மதத்தின் அடிப்படையில் ஒருவர்மீது ஒருவர் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாகத் தடை செய்கிறது. மதத்தின் பெயரால் எங்கேனும் பாகுபாடு காட்டப்படுவதாக அரசு உணர்ந்தால், அரசு தலையிட இந்திய அரசமைப்புச் சட்டம் அரசுக்கு அனுமதியளிக்கிறது. ஆனால், இங்கு அரசே பாகுபாடு காட்டுகிறது. அதாவது, ‘வேலியே பயிரை மேய்கிறது.’

பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த பா... அரசு சாதனைகளைப் பட்டியலிட்டுக் கம்பீரமாக, கௌரவத்தோடு தேர்தலைச் சந்திப்பதற்குப் பதிலாக மலிவான பிரச்சாரத்தைக் கையில் எடுக்கிறது. 2014-இல் வளர்ச்சியையும், 2019-இல் புல்வாமா தாக்குதலையும் முழக்கமாக வைத்த பா... இந்தத் தேர்தலில் கைவசமிருந்த சரக்கு காலியாகி விட்ட நிலையில், ‘இனி எதைச் சொல்ல?’ என்று தவிக்கிறது. ‘சொல்ல உங்களிடம் என்ன இருக்கிறது?’  என்று எள்ளி நகையாடுகிறதுஇந்தியாகூட்டணி. இதனால்தான் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில்முஸ்லிம் பூச்சாண்டிகாட்டி இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க பா... முயல்கிறது. ஆனால், கள நிலவரமோ வேறாக இருக்கிறது. இந்த முறை மக்கள் பா...வின் பசப்புரைகளில் மயங்குவதாக இல்லை.

இந்தத் தேர்தலில் சொல்லும்படி சாதனைகள் ஒன்றுமில்லை என்பதால், மத ரீதியிலான பிரச்சாரத்தை மட்டுமே நம்பி அதை முன்னெடுத்து வருகிறது பா... குறைந்தபட்சம் மாநிலத்திற்கு மாநிலம் உள்ளூர் அரசியலாவது பேசியிருக்க வேண்டாமா? ஆனால், ‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வோம், அதைச் செய்வோம்என்று வாய் ஜாலம் பேசி வருகின்றனர். ‘கடந்த பத்தாண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ என்ற வாக்காளர்களின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.

மத்தியப் பிரதேசத்தில் தார் பகுதியில் பரப்புரை செய்த பிரதமர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோரின் இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடுவார்கள்; அயோத்தி இராமர் கோயிலுக்கு அக்கட்சியினர்பூட்டுபோடுவார்கள். அப்படி ஏதும் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால், பா... கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்; இந்தத் தேர்தலில் வெற்றி பெறப் போவதுவாக்கு ஜிகாத்தா?’, ‘இராம இராஜ்ஜியமா?’ என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்என்று, தான் ஒரு பொறுப்புமிக்க பதவி வகிக்கும் பிரதமர் என்பதையும் மறந்து நயவஞ்சகமாகச் சூளுரைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட இவர், “நாட்டில் காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தால் குறிப்பிட்ட தரப்பினரைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் 1985 -இல் இந்தூரைச் சேர்ந்தஷா பானுஎன்ற இஸ்லாமியப் பெண்ணின் ஜீவனாம்ச உரிமை சார்ந்த வழக்கின் தீர்ப்பைக் காங்கிரசார் மாற்றியது போல, அயோத்தி இராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மாற்றி விடுவர்என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “அயோத்தி இராமர் கோயிலில் நடைபெறும் சடங்குகளைக் கேலி செய்ததன் மூலம் இராமரையும், அவரது பக்தர்களையும்இந்தியாகூட்டணி அவமதிக்கிறதுஎன்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். கண்டிக்க வேண்டிய தேர்தல் கமிஷனோ, கண்களை மூடிக்கொண்டுள்ளது. மறுபுறம், மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பாக இராமர் புகைப்படத்தை ஏந்தியவாறுரோடு ஷோநடத்துகிறார் அமித்ஷா.

மொத்தத்தில், “சாதி, மதம், கோவில் - மசூதி இது மட்டுமே பா...வின் தேர்தல் பரப்புரை உத்தியாக உள்ளது. இதனைப் பயன்படுத்தாமல் அவர்களால் தேர்தல் பரப்புரை செய்ய இயலாது. மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து அக்கட்சி பேசுவதில்லைஎன்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா. யார் என்ன சொன்னாலும், மதம் சார்ந்த பரப்புரைதான் தங்களுக்குக் கைகொடுக்கும் என நம்புகிறது பா...

இன்றைய சூழலில் பா... அரசால் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பேராபத்து சூழ்ந்திருக்கிறது; அம்பேத்கர் வகுத்தளித்த அந்தச் சட்ட வரைவைப் புறந்தள்ளும் நோக்குடனே யாவும் நகர்த்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதற்காக சமய, வர்க்க, பொருளாதாரக் காரணிகளை உத்திகளாகக் கையாண்டு, மக்களைப் பிரித்தாளும் செயல்பாடுகள் அரங்கேறி வருகின்றன. வெறுப்பு அரசியலும், பொய்ப் பிரச்சாரங்களும் இதற்காகத்தான் நஞ்சாக விதைக்கப்படுகின்றன. இந்திய அரசியலின் தரம் மலிந்து போகும் அளவிற்கு இன்றைய காலகட்டங்களில் எல்லை தாண்டி, வரையறை கடந்து பொய்கள் பரப்பப்படுகின்றன. எதிர்கால இந்தியாவின் வரப்போகும் சந்ததி பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும். இவ்வேளையில், அரசமைப்புச் சட்டத்தையும், சனநாயகத்தையும் பாதுகாக்கவே காங்கிரசும், ‘இந்தியாகூட்டணிக் கட்சிகளும் உறுதி கொண்டு இருப்பதாகக் கூறும் சோனியா காந்தியின் கூற்றில் நம்பிக்கை பிறக்கிறது.

தொடரும் பா...வின் பிரச்சார வடிவங்களைக் காணும்போது, உண்மையில் இவர்கள் யார்? மதவாதிகளா? அரசியல்வாதிகளா? ஆதாயவாதிகளா? எனும் குழப்பமான கேள்விகளுக்கு ஒரே பதில், இவர்கள் மதத்தால் அரசியலில் ஆதாயம் தேடுபவர்கள் என்பதே! இவர்கள் மிதவாதிகளா? - அப்படி எண்ணத் தோன்றவில்லை. அப்ப, மதவாதிகளா? - அதுவும் முறையாகத் தென்படவில்லை. பிறகு, யார்தான் இவர்கள்? மதத்தை அரசியலாக்கி ஆதாயம் தேடும்மீதவாதிகள்’ (எஞ்சியவர்கள்). இவர்கள் சமூகத்தில் சனநாயகத்திலிருந்து, மதச்சார்பின்மையிலிருந்து எஞ்சியவர்கள். ஆனால், இன்று எங்கும் எதிலும் மிஞ்சியவர்கள்.

இவர்களைக் காணும் போது,

வேஷங்கள் போட்டுப் போட்டு அது

தோல் சதை எலும்புக்குள் இறங்கி

வேஷமே உங்கள் இயல்பாகி விட்டது

என்ற கவிஞர் புவியரசின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment