No icon

வியப்பூட்டும் ஊடக உலகம்!

ஊடகம்என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடங்கி இருக்கிறது இன்றைய உலகம். நவீன உலகின் வியப்புக்குரிய பலவற்றில் தனி இடம் பிடித்திருக்கிறது ஊடகம். இன்று ஊடகத் தொழில்நுட்பத்தால் உலகம் மாபெரும் அறிவியல் புரட்சியையே கண்டிருக்கிறது; இன்றும் கண்டுகொண்டிருக்கிறது! மானுட வாழ்வியலின் எல்லாத் தளங்களிலும் இந்த ஊடகம் இன்று இரண்டறக் கலந்திருக்கிறது. எனவே, ஊடக வளர்ச்சி என்பது காலத்தால் இன்று கணிக்க முடியாதது; அதன் பயன்பாடு என்றும் தவிர்க்க இயலாதது.

ஆகவேதான் திரு அவை, இவ்வூடகத்தின் சிறப்புகளைக் கண்ணுற்று, இதுஇறைவனின் மாபெரும் கொடைஎனக் கருதுகிறது. அவ்வாறே, சமூகத்தில் வாழும் மானுடத்தின் ஒற்றுமையையும், முன்னேற்றத்தையும் பேணி வளர்க்கக் கூடிய உயர்ந்த நோக்கத்தையும் அவை கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. மானுடமும், அதன் தொடர்பியலும் பூமிப்பந்தில் ஒருபோதும் பிரிக்க முடியாததே! ஒருவருக்கொருவர் நாம் தொடர்பு கொண்டிருப்பது என்பது மானுடத்தின் அடிப்படைப் பண்பு. அது மிக அவசியமானதும் கூட.

ஊடகங்களின் வருகை உலக மக்களின் அறிவு வளர்ச்சியிலும், பண்பாட்டு வளர்ச்சியிலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன. அன்று அறியாமை இருட்டில் மூழ்கிக் கிடந்த மக்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டிய பெருமை ஊடகங்களையே சாரும்! அச்சு இயந்திரங்கள், பத்திரிகைகள், நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, கணினி, எண்ணிம தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என இன்று ஊடகம் உச்சம் தொட்டு இருக்கிறது. இவை சமூகம், பண்பாடு, கலை, அறிவியல், பொருளாதாரம், அரசியல், வணிகம், மருத்துவம், விவசாயம் என மக்கள் வாழ்வில் ஒன்றித்த பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவையும், தெளிவையும் நாளுக்கு நாள் சுமந்து வருகின்றன.

இத்தகைய ஊடகங்கள்பொதுமக்களின் எண்ணங்களைத் தெளிவாக அறிந்து அதை வெளிப்படுத்துவது; மக்கள் மனங்களில் விரும்பத்தக்க நல்லுணர்வை வளர்த்தெடுப்பது; மற்றும் மக்களின் குறைகளை எந்த அச்சமும் இன்றி எடுத்துரைப்பதுஎன அடிப்படையில் மேலான மூன்று நோக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

இப்பேருண்மையை ஆழமாக உணர்ந்த திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் 2005-ஆம் ஆண்டு, ஜனவரி 24-ஆம் நாள் வெளியிட்ட தனது இறுதி திருத்தூது மடலானஅதிவேக வளர்ச்சி’ (The Rapid Developmentஎனும் மடலில், ‘புதிய தொழில்நுட்பம் கண்டு அஞ்சாதீர்கள்! புதியவைகளைக் கண்டுபிடிக்க அதைப் பயன்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம்உண்மையை’ (Truth) உலகிற்கு அறியச் செய்யவும், தமது வியத்தகு கொடைகளில் ஒன்றான ஊடகத்தைக் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார்என்று குறிப்பிடுகிறார் (எண்:14). அத்தகைய ஊடகம் சமூகத்தில் இன்று பல தளங்களில், பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதோடு, சமயம் சார்ந்த பல செயல்பாடுகளிலும் குறிப்பாக, நமது தலத் திரு அவையிலும், உலகளாவிய திரு அவையிலும் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன என்பது பெரும் மகிழ்ச்சிக்குரியதே!

இந்த ஊடகப் பயன்பாட்டைத் திரு அவை பெரிதும் வரவேற்பதுடன், அதன் பயன்பாடு படைத்தவரின் திட்டத்திற்கு மாறாகச் செல்லும்போது சமூகத்திற்குப் பெரும் அழிவை ஏற்படுத்தும் எனத் தம் மக்களை எச்சரிக்கவும் தவறவில்லை. மேலும், தனது மக்களைச் சிறந்த ஊடகங்களாகத் திகழ திரு அவை உற்சாகப்படுத்துவதுடன், அனைத்து ஊடக வழிமுறைகளையும், கருவிகளையும் சமூக மேம்பாட்டிற்காக நேரிய வழியில் பயன்படுத்த வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

நாகரிகம் வளர வளர மனிதன் செய்யும் குற்றங்களும், பாவங்களும் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. வணிகக் கலாச்சாரத்தில் மூச்சுத்திணறும் இன்றைய சமூகச் சூழலில் பிரச்சினைகள் தீர்க்க முடியாத வண்ணம் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவை குறித்துச் சரியான புரிதலும், அவற்றைத் தெளிவுபடுத்தும் செய்திகளும், தீர்வை நோக்கிய முறையான வழிகாட்டுதலும் ஊடகங்களால்தான் வழங்க முடியும் என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளில் துல்லியமாகவும், முழுமையாகவும், உண்மையாகவும், விருப்பு-வெறுப்புக்கு இடமில்லாமலும் நடுநிலைக் காத்து, ஊடகங்கள் உண்மையை உரைக்க அறிவுறுத்தப்படுகின்றன.

தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம், குடிசைகளையும் எரிக்கலாம்என்பது ஊடகத்திற்கு முற்றிலும் பொருந்தும். வான்மேகம் பொழிகின்ற நீர் தூயது; ஆனால், நிலத்தின் தன்மைக்கேற்ப, மண்ணின் நிறத்திற்கேற்ப ஓடுகின்ற நீர் நிறம் மாறுவது போல, ஊடகங்கள் இன்று உண்மையை வழங்குவதில் தளத்திற்குத் தளம் மாறுபட்டு நிற்கின்றன.

இந்திய மண்ணில் விடுதலை கண்விழித்த தொடக்கக் காலங்களில் ஊடகம் பெரிதும் மதிக்கப்பட்டது; அதன் தேவை உணரப்பட்டது; தனித்துவம் போற்றப்பட்டது; தனிச்சுதந்திரம் வழங்கப்பட்டது; சிறப்பாக அரசியலமைப்பைத் தாங்கும் தூணாக உயர்த்தப்பட்டது. ஆகவே, அவ்வேளையில் ஊடகங்களின் உரிமைக்குப் பங்கம் ஏதும் பெரிதாக நேர்ந்துவிடவில்லை. ஆனால், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊடகச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், அண்மைக் கால பா... ஆட்சியில் ஊடகச் சுதந்திரம் பெரிதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது; ஊடக உரிமை மறுக்கப்படுகிறது; குரல்வளை நெரிக்கப்படுகிறது; உண்மை மறைக்கப்படுகிறது; ஊடகவியலாளர்கள் மரணிக்கப்படுகிறார்கள். பொய்மையும், போலிகளுமே இங்கே இன்று கட்டமைக்கப்பட்டு உலா வருகின்றன.

கருத்துகளைச் சுதந்திரமாக எடுத்துச்சொல்லும் பேச்சுரிமை நமக்கு மறுக்கப்பட்டால், வெட்டப்படுவதற்காக இழுத்துச் செல்லப்படும் ஆடுகளைப் போல நாம் ஊமையாக, அமைதியாக இருக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என்றே பொருள்என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன். ஆகவே, ‘நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வுக்குச் சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு ஒவ்வோர் ஊடகத்தாரின் சுதந்திரம் என்பதும் மிகவும் முக்கியம்என்கிறார் அவர். அவ்வாறேகருத்துகளை ஆக்கவும், அறியவும், வெளிப்படுத்தவும், கற்பிக்கவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டுஎன்றும், ‘இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றுஎன்றும் எடுத்துரைக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் - 19 (1.a). மேலும், ‘கருத்துகளைத் தேடவும், பெறவும், பகிர்ந்து கொள்ளவும் அனைவருக்கும் உரிமை உண்டுஎன  1948-ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பு தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆகவேதான், இன்று ஆட்சியாளர்கள் ஊடகங்களைக் கண்டு அஞ்சுகின்றனர். அவர்கள் நேரிய வழியில் ஆட்சி செய்தால், ஊடகங்களைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்? அச்சு ஊடகங்களும், புத்தகங்களும், பத்திரிகைகளும் பிரஞ்சு புரட்சிக்கும், அமெரிக்க விடுதலைப் போருக்கும் அடித்தளம் அமைத்தன என்ற உண்மையை அவர்களால் மறுக்கவும் முடியாது; மறக்கவும் முடியாதல்லவா! அதுபோலவே சர்வாதிகாரர்களுக்குச் சாவுமணி அடித்த சரித்திரமும் ஊடகங்களுக்கு உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள் அல்லவா! ஊடகம் என்பது குறைகளை மட்டுமே காண்பதல்ல; குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், நிறைகளைத் தட்டிக் கொடுப்பதிலும் தனி இடம் பிடிப்பவை. ஆகவேதான், ‘ஊடகம் என்பது மக்களைக் கவர்வதற்கு உருவாக்கப்பட்டது அல்ல; மாறாக, அவர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதற்கே!’ என்கிறார் தேவ் வில்லிஸ் என்னும் எண்ணிம தொழில்நுட்ப ஊடகவியலாளர்.

கற்காலம் தொடங்கி, கணினி காலமான இன்று வரை மனித வாழ்வில் ஊடகத்தின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கின்றது. மனித குலத்தின் நன்மைகளுக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் இன்று மனித குலம் சிதைந்து கிடப்பது வேதனையளிக்கிறது.

அதிநவீன தொழில்நுட்பத்தில் ஊடகம் என்ற வார்த்தையின் எல்லை விரிந்து இருக்கிறது. ஆகவே, பரந்து விரிந்த இந்த ஊடகத் தளத்தில் மேன்மையான சமூகக் குடும்ப மற்றும் தனிமனித வாழ்வியல் தரம் உயர்ந்திருக்க வேண்டும்.

ஊடகம் முறையாகப் பயன்படுத்தப்படுமாயின், அது மனிதகுலத்திற்கு மாபெரும் பயனளிக்கக் கூடியதாக அமையும். மேலும், பொழுதுபோக்கிற்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் ஊடகம் பங்காற்றுவது போல, இறையரசைப் பறைசாற்றும் பணிக்கும் பெரிதும் உறுதுணையாக இருக்கும்எனக் குறிப்பிடும் இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏட்டின் (Inter Mirifica, 2) வழிநின்று இளையோர் எண்ணிம நற்செய்திப் பணியாளர்களாக (Digital Evangelizers) மாறவேண்டுமென அழைப்பு விடுக்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகவே, அழிவுக்குரிய வாசல் விரிந்திருந்தாலும், வாழ்வுக்குரிய குறுகிய பாதையை இனம் கண்டு இளையோர் புலனம், வலையொளி, படரி, கீச்சகம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும், எண்ணிம தொழில்நுட்ப ஊடகங்களிலும் பயணித்து ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மனிதகுலத்தின் பயன்பாட்டிற்காகவும், உலகின் மீதான கடவுளின் திட்டம் நிறைவேறவும், புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்நுட்பங்களையும் நாமும் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோம்! தீயவை களைந்து, நல்லவை பெருக்குவோம்!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment