No icon

அருள்பணி. P. ஜான் பால்

தமிழ்நாட்டில் புனித தோமையார் திருத்தலங்கள்

சாந்தோம் பேராலயம்

இது செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா என்றும், புனித தோமையாரின் தேசியப் பேராலயம் என்றும் அழைக்கப்படுகிறதுசாந்தோம் பேராலயம் கி.பி. 1523 ஆம் ஆண்டு, போர்த்துகீசியர்களால், புனித தோமையாரின் கல்லறையின் மீது கட்டப்பட்டது. இது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை பெருநகரின் சாந்தோம் சுற்றுப்புறத்தில் உள்ளது. போர்த்துகீசியர்களுக்குப் பிறகு 1896 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களால் விரும்பப்பட்ட நியோ-கோதிக் பாணியின் படி மீண்டும் பேராலயமாக கட்டப்பட்டது. ஆண்டவர் இயேசுவின் திருத்தூதர்களின் கல்லறைகளின் மீது கட்டப்பட்ட மூன்று ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற இரண்டு வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மற்றும் ஸ்பெயினின் கலீசியாவில் உள்ள சாண்டியாகோ டி காம்போஸ்டெலா கதீட்ரல்.

கி.பி 52 இல் புனித தோமையார் இயேசுவைப் பற்றி அறிவிக்க இந்தியாவின் கேரளாவிற்கு வந்தார். பின்னர் சென்னைக்கு சென்றார். கி.பி 72 இல் புனித தோமையார் பெரியமலையில் கொல்லப்பட்டார். அவரது சீடர்களால் அவர் மயிலாப்பூரில் உள்ள சாந்தோமில் அடக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர்கள் அவரது கல்லறையைக் குறிக்க ஒரு சிறிய ஆலயத்தை கட்டினார்கள். பின்னர் புனித தோமாவின் கல்லறை முஸ்லீம்களால் மதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த பிறகு கைவிடப்பட்டது.

1521 ஆம் ஆண்டில், கோவா மற்றும் பாம்பே-பேஸ்சின் போர்த்துகீசியர்கள் மெட்ராஸ் (சென்னை) க்கு மிஷனரிகளை அனுப்பி, முஸ்லீம்களால் பெயரளவில் பராமரிக்கப்பட்டு வந்த புகழ்பெற்ற புனித தோமையாரின் கல்லறையைத் தேடி, கல்லறைக்கு மேல் ஆலயத்தைக் கட்ட முடிவு செய்தனர்போர்ச்சுகலின் மூன்றாம் ஜான் அரசரின் உத்தரவு மற்றும் நிதியுதவியுடன் அவர்கள் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினர். 1523 ஆம் ஆண்டில், இவ்வாலயம் புனிதப்படுத்தப்பட்டு வழிபாடுகள் தொடங்கின. பின்னர் இந்த ஆலயம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கோதிக் மறுமலர்ச்சி கட்டிடக்கலை பாணியில் ஆங்கிலேயர்களால் 1896 இல் பேராலயமாக மீண்டும் கட்டப்பட்டது

லிட்டில் மவுண்ட்

லிட்டில் மவுண்ட் (சிறிய மலை) என்று அழைக்கப்படும் இடம் சென்னையில் உள்ளது. உள்ளூரில் சின்னமலை என்று அழைக்கப்படுகிறது. 1551 இல் போர்த்துகீசியர்களால் இம்மலையில் கட்டப்பட்ட ஆலயம் இன்றும் உள்ளது. நுழைவாயிலில், ஒரு போர்த்துகீசிய கல்வெட்டுடன் புனித தோமையாரின் உருவப்படம் உள்ளது. மலையின் உச்சியில் உள்ள சிலுவை புனிதர் அவர்கள் வழக்கமாக நின்று நற்செய்தி போதிக்கும் இடமாகும். மேலும் 1880 களில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட அற்புதமான புனித தோமையார் கேரிசன் ஆலயம் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

இச்சின்னமலையில் ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இது சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது. பிராமணர்கள் புனித தோமையாரை கொல்ல திட்டம் தீட்டியபோது இச்சின்னமலைக்கு வந்து தங்கியதாக நம்பப்படுகிறது. ஆலயத்துடன் இணைக்கப்பட்ட ஒரு நிலத்தடி இடமாக இக்குகை உள்ளது. புனிதரின் கைத்தடமும், கால்தடமும் தாங்கிய ஒரு பெரிய பாறை உள்ளது. புனித தோமையார் காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஒரு நீரூற்று உள்ளது. பல பக்தர்கள் இந்த தண்ணீரை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். ஆலயத்தைச் சுற்றி சிலுவைப்பாடு நிலைகளின் சித்தரிப்புடன் ஒரு சிறிய தோட்டம் உள்ளது.

1972 ஆம் ஆண்டில் புனித தோமையாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக இந்திய அரசின் அஞ்சல் மற்றும் தந்தித் துறை, புனித தோமையாரின் மலையில் இரத்தம் வடிந்த சிலுவையின் படத்தை சித்தரிக்கும் தபால்தலையை வெளியிட்டது.

செயின்ட் தாமஸ் மவுண்ட்

செயின்ட் தாமஸ் மவுண்ட் அல்லது புனித தோமையார் மலை என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான, சென்னையில் கிண்டிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று ஆகும். இந்த மலை சென்னைவாசிகளால் "பெரிய மலை" என்றும், பரங்கியர்கள் தங்கியதால் "பரங்கி மலை" என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டவர் இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா, இந்தியாவிற்கு பயணம் செய்து, இந்திய மக்களுக்கு ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியைக் கொண்டுவந்தார். வரலாற்றின்படி புனித தோமையார் இந்தியாவை வந்தடைந்த முதல் கிறிஸ்தவராகக் கருதப்படுகிறார். அவர் கி.பி. 52 இல் தென்னிந்தியாவிற்கு வந்ததாக நம்பப்படுகிறது. அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை மலையில் உள்ள ஒரு குகையில் கழித்தார். இவர் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை போதிக்க, அதன்பால் பலர் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவர்களாக மாறினர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத பிராமணர்கள் புனிதரை கொல்ல திட்டம் தீட்டினர். கூர்மையான ஈட்டியினால் புனிதரின் பின்பக்கமாய் வந்து அவரை குத்தி கொலை செய்தனர். அப்போது அவர் ஒரு கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு சிலுவையை இறுக்கமாக  பிடித்தார். அதில் அவரின் இரத்ததம் பட்டதால், அந்த சிலுவையில் இரத்த ஓட்டம் ஏற்பட்டது. இதனால் அச்சிலுவைபிளீடிங் கிராஸ்என்று அழைக்கப்படுகிறது. 1558 ஆம் ஆண்டு திருப்பலியின்போது முதன்முதலில் "இரத்தம்" வடிந்தது. கடைசியாக பதிவு செய்யப்பட்ட நிகழ்வு 1704 இல் நடந்தது.

போர்த்துகீசியர்கள் 300 அடி உயர செயின்ட் தாமஸ் மலையின் உச்சியில் 1523 ஆம் ஆண்டில் அன்னை மரியாவிற்கு ஆலயம் ஒன்றைக் கட்டினார்கள். இரத்தம் வடிந்த சிலுவை பலிபீடத்தோடு இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் புனித லூக்காவால் வரையப்பட்ட புகழ்பெற்ற அன்னை மரியாவின் எண்ணெய் ஓவியம், தோமையாரால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் பலிபீடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. 1986, பிப்ரவரி 5 ஆம் தேதி, புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவிற்கு வந்திருந்த போது இப்புனித தலத்தை பார்வையிட்டு செபித்தார்.

Comment