No icon

தமிழ்நாடு-புதுவை அருள்பணிப் பேரவையின் பொதுக்குழு கூட்டம்

பரிந்துரைகளும், செயல்திட்டங்களும்!

தமிழ்நாடு திரு அவையின் உயர்ந்ததோர் அமைப்பான தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டமானது நிகழ் ஆண்டில் ஜூலை மாதம் ஏழாம் நாள் தஞ்சாவூர் மறைமாவட்டத்தில், அன்னை வேளாங்கண்ணி பசிலிக்கா திருத்தலத்தில் அமைந்துள்ள மரியன்னை தியான இல்லத்தில் இடம்பெற்றது. தமிழ்நாடு ஆயர்கள், தமிழ்நாடு துறவியர் பேரவைப் பிரதிநிதிகள், தமிழ்நாடு அருள்பணிக் குழுக்களின் செயலர்கள், மறைமாவட்ட அருள்பணிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மறைமாவட்ட அருள்பணிக் குழுக்களின் உறுப்பினர்களாகிய பொதுநிலையினர் என ஏறத்தாழ 250-க்கும் மேலான நபர்கள் பங்கேற்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஒரு சிறப்புத் தலைப்பை முன்னிலைப்படுத்தி ஆண்டுக் கூட்டம் நடைபெறுவதைப் போன்று, இந்த ஆண்டும்செயற்கை  நுண்ணறிவும், திரு அவையின் கரிசனைகளும்என்ற தலைப்பின் அடிப்படையில் சிறப்பு உரையாளர்கள் வழிநடத்தினர்.

இன்றைய காலத்தில் மனிதரின் அன்றாட வாழ்வில் எல்லா நிலைகளிலும் ஏதாவது ஒரு வகையில் பின்னிப் பிணைந்து இருப்பது செயற்கை  நுண்ணறிவு என்னும் தொழில்நுட்பம். மனிதத் திறன்களை மேம்படுத்துதல், பணிகளைத் தானியங்கமாக்குதல், முடிவு எடுப்பதை மேம்படுத்துதல், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துதல், புதுமை நோக்கு எனப் பல பரிமாண இலக்குகளைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மனித மேம்பாட்டிற்குரிய எல்லாத் துறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

அதிகரித்த செயல்திறன், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், அதிகரித்த புதுமை என நன்மைகள் பல இருந்தாலும், இத்தொழில்நுட்பம் பல கவலைகளையும், ஒருவித அச்சத்தையும் மனித மனங்களில் எழுப்புகின்றது. செயற்கை நுண்ணறிவு பற்றிய திரு அவையின் கரிசனைகளைத் திருத்தந்தை பிரான்சிஸ் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்தஜி7’ மாநாட்டிலும் திருத்தந்தை தன் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.

எச்சூழலிலும் தரவுகள் (Data) மனித மாண்பை அளவிடும் அளவுகோலாக இருக்க முடியாது என்பது அடிப்படையானது. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துகின்றஅல்காரிதம்நடுநிலையானது அல்ல; அது சமுதாயத்தில் முன்சார்பு எண்ணங்களை உருவாக்கும் தன்மை உடையது மட்டுமல்லாமல், இத்தொழில்நுட்பம் தருகின்ற முடிவுகள், மனித முடிவுகளையும், ஞானத்தையும் புறந்தள்ள முடியும். அதனால் இது மனித குலத்திற்கும், அதன் அமைதிக்கும் ஊறு விளைவிக்க முடியும் என்பதன் அடிப்படையில் உலகச் சமூகமும், அதன் தலைவர்களும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதிலும், எல்லாத் துறைகளில் ஈடுபடுத்துவதிலும் கவனம் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செயற்கை நுண்ணறிவினால் பயன்கள் பல இருப்பதுபோல, வேலை நீக்கம், சார்புத்தன்மை, தனி உரிமை விளக்கம் அளிக்கும் தன்மை, பொறுப்பு ஏற்றல், ஆள் மாறாட்டம், உண்மைக் குறைபாடு போன்ற சிக்கல்களும் அதில் அடங்கியுள்ளன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. அன்றைய நாளின் கருத்துகளின் வெளிச்சத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் சில முடிவுகள் எட்டப்பட்டு, தமிழ்நாடு திரு அவைக்குக் கீழ்வரும் 22 மறைமாவட்டங்களில் நடைமுறைப்படுத்தும் வகையில் இவ்வாண்டுக்கென ஓரிரு செயல்திட்டங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

செயல்திட்டங்கள்

1. அருள்பணியாளர்கள், துறவிகள், இறைமக்கள் என அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு பற்றிய தெளிவையும், புரிதலையும், அதன் அறநெறி சார்ந்த விளைவுகளையும் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள் வழியாக விழிப்புணர்வு தருதல்.

2. செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடன் பயன்படுத்தி நம் அருள்பணிகளைக் குறிப்பாக, நற்செய்தி அறிவிப்புப் பணியினையும் பங்கு, மறைமாவட்ட நிர்வாகச் செயல்பாடுகளையும் மேம்படச் செய்தல்.

3. மறைமாவட்டத்தில்செயற்கை நுண்ணறிவு ஆய்வு மற்றும் வழிகாட்டுதல் குழுஒன்றை உருவாக்கி, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயன்பாட்டைத் தக்க விதத்தில் ஆய்வு செய்யவும், அதன் பயன்களை அறிந்து செயல்படுத்தவும் வழிகாட்டுதல் தருதல்.

மேற்கண்ட செயல்திட்டங்களைக் கவனத்தில் கொண்டு, நிகழும் இவ்வாண்டில் அருள்பணி இயக்குநர்களும், பிற பங்கேற்பு அமைப்புகளும் மறைமாவட்ட அளவில் இந்தச் செயல்திட்டங்களை நன்முறையில் செயல்படுத்தி, திரு அவையின் வளர்ச்சிக்கும், இறைமக்களின் முன்னேற்றத்திற்கும் உதவிடக் கேட்டுக் கொள்ளப்பட, தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவையின் நிகழ்வாண்டிற்கான பொதுக்குழுக் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 + மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்

தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர்

Comment