No icon

மதுபானக் கடைகளை ‘புனித வெள்ளி’ அன்று மூட தமிழ்நாடு அரசுக்குக் கிறிஸ்தவர்களின் வேண்டுகோள்

03.01.2012-ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி மிலாடி நபி, வள்ளலார் நினைவு நாள், மகாவீரர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் போன்ற சிறப்பு நாள்களில் மதுபானக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கிறிஸ்தவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறந்த தினமானபுனித வெள்ளிஅன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குச் சிறுபான்மை நலத்துறை தலைவர் திருமிகு. பீட்டர் அல்போன்ஸ் மூலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, தூத்துக்குடி, கோட்டாறு, குழித்துறை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய மறைமாவட்டங்களில் இயங்கி வரும் அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையானது அதன் செயலர் அருள்பணி. ஜெயநாதன் தலைமையில் அண்மையில் மூன்று முக்கியத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது: 1. புனித வெள்ளி அன்று தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகளை மூட வேண்டும். 2. அதற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். 3. கிறிஸ்தவச் சமூகம் மட்டும் அல்லாமல், தமிழ்நாடு மக்கள் கொண்டாடும் அனைத்துச் சமய விழாக்களிலும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளித்து விழாக்களைக் கொண்டாட தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

கேரளா மற்றும் டெல்லியில் புனித வெள்ளி அன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதுபோல கிறிஸ்தவர்களின் உணர்வை மதித்து, தமிழ்நாட்டிலும் புனித வெள்ளி அன்று மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதல்வரைக் கிறிஸ்தவச் சமுகம் மீண்டும் ஒருமுறை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Comment