No icon

தமிழ்நாடு ஆயர் பேரவையின் இரங்கல் செய்தி

பெருந்துயரில் துணை நிற்போம்

அனைவருக்கும் வணக்கம். 18.06.2024 அன்று தமிழ்நாடு மக்களுக்கு ஓர் அதிர்ச்சி அளிக்கும் நாளாக அமைந்துவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் ஒவ்வொருவராக இறக்கத் தொடங்கி, இன்றைய தினம் வரையில் 58 பேர்  பலியாகி உள்ளனர் என்பது நமக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. தமிழ்நாடெங்கும் இது பேரதிர்ச்சியையும், பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம் அருந்திய 144 பேர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் 30 பேர் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த அதிர்ச்சியான நிகழ்வில் உயிரிழந்த உறவுகளின் குடும்பங்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், இறை வேண்டலையும் சமர்ப்பிக்கிறோம். உயிருக்குப் போராடும் நோயாளிகள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறோம். தமிழ் மண்ணில் இத்தகைய மரணங்கள் இனிமேல் நடைபெறாதவாறு அரசு முழுக் கவனம் செலுத்தி, இப்படிப்பட்ட இழி செயலில் ஈடுபடுகிறவர்களை, அவர்களுக்குத் துணையாகச் செயல்படுவோரை, கடமை தவறும் அதிகாரிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி தமிழ்நாட்டைக் காப்பாற்ற அரசினைக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு சந்திக்கும் இந்தப் பெருந்துயரத்தில், துயரமான வேளையில் அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் இலாபத்திற்காக இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தமிழ்நாடு முழுவதும் இத்தகைய அநியாய மரணங்கள் இனியும் நிகழாதவாறு விழிப்போடு செயல்படவும், இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குச் சட்டத்தின் வாயிலாகத் தகுந்த தண்டனை வழங்க ஏற்பாடு செய்யவும், ஆளும் அரசுக்கு உதவவும், உறுதுணையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிலையில் பொதுமக்கள் நாமும் போதைக்கும், மதுவுக்கும் எதிரான தீவிரச் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டிய கடமையை உறுதிப்படுத்துவோம். மக்களுக்கான விழிப்புணர்வைச் சிறந்த முறையில் வழங்கி நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் உருவாக்க விரும்பிய மது, மற்றும் போதையற்ற இந்தியாவும் - தமிழ்நாடும் உருவாக, அதற்காகத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் என அன்போடு வேண்டி, மீண்டும் ஒருமுறை தங்கள் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவர் என்ற முறையில் தமிழ்நாடு திரு அவையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், இறை வேண்டலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comment