தலையங்கம்
நாம் எங்கே போகிறோம்?
- Author குடந்தை ஞானி --
- Monday, 31 Oct, 2022
இந்திய ஜனநாயகத்தின் பொதுவெளி நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே வருகிறது. சுருங்கிக் கொண்டே வருகிறது என்பதைவிட சுருக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதவாதத்தின் அபார வளர்ச்சியில் இந்தியாவின் ஜனநாயகம் செல்லரித்துப்போன நிலையில் உள்ளது.
மதவாதத்தின் கத்திமுனையில் ஜனநாயகம், இறையாண்மை, பன்முகத்தன்மை அனைத்தும் சிதைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட ஜனநாயகப் பாதுகாப்பு அமைப்புகள் அனைத்திலும் வெந்நீர் ஊற்றியாயிற்று. அரசியல் சாசனத்தின் பாதுகாப்பு வளையங்களில் ஆங்காங்கே நெளிக்கப்பட்டு நெகிழ்வுத்தன்மையுடன் வைக்கப்பட்டுள்ளன.
உலகமே கொண்டாடும் காந்தியம், அம்பேத்கரியம் தீண்டத்தகாததாக பொதுபுத்தியில் திணிக்கப்படுகிறது. ஊடகம் முதல் ரூபாய் நோட்டுவரை இந்துமயமாக்கப்படுகின்றன; இஸ்ரோ ஏவும் ராக்கெட் முதல் இரபேல் போர்விமானம் வரை அனைத்தும் புரோகிதத்தன்மை நிறைந்த பூஜை புனஸ்காரங்களுடன் நிலைநிறுத்தப்படுகின்றன.
எதிர்ப்பவர்கள் அனைவருமே ஆன்டி இந்தியன்கள், தேச விரோதிகள், அர்பன் நக்சல்கள், பாவாடைகள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்று அந்நியப்படுத்தப்படுகின்றனர். பிரதமரின் ஆன்மீகமும் கோயில்தரிசனமும் லைவ் முறையில் தேசியமயமாக்கப்படுகின்றன. அனைத்தும் அடையாளப்படுத்தப்படுகின்றன் அனைவருமே அடையாளப்படுத்தப்படுகின்றனர். சிறுபான்மை- பெரும்பான்மை என்பதைக் கடந்து, இடது - வலது என்று பிரிக்கப்படுகின்றன. மதநீர் சுரக்கும் மதயானையாக, மதம் காவிப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்குசங்களுக்கும் பாகன்களுக்கும் கட்டுப்படாது திரியும் இந்த மதயானையை, கட்டுப்படுத்த உதவும் கும்கியானையும் தற்போது முரண்டுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கையறுநிலைதான் இந்தியாவெங்கும் உள்ளது. ஒரே உரம் முதல் ஒரே காவல் சீருடை என்று ‘ஒரே’ நம்மை நித்தம் தின்று சீரழிக்கிறது. இந்த நிலையில்தான் உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு தீர்ப்பு, அங்குசம் இன்னும் மழுங்கவில்லை, பாகன்கள் யாரும் ஓடி ஒளியவில்லை என்று நம்பிக்கைப் பாய்ச்சுகிறது.
ஆம். கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷாகின் அப்துல்லா என்பவர், நாட்டில் இஸ்லாமியர்களைச் குறிவைத்து அச்சுறுத்தப்படும் வெறுப்பு பேச்சு சம்பவங்களைத் தடுக்கவும் அவைத் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதேபோன்று வேறு சில மனுக்களையும் ஒன்றாக சேர்த்து நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஷாகின் அப்துல்லா சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். இந்து மதத் தலைவர்கள் தர்ம சன்சாத், விராட் ஹிந்து சபா நிகழ்ச்சிகளில் பேசியதைக் குறிப்பிட்டார். கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் டெல்லியில் நடந்த தர்ம சன்சத் நிகழ்வில் இந்து ராஷ்டிரத்தை உருவாக்க தேவைப்பட்டால் கொலையும் செய்ய வேண்டும் என்ற பேசினர். ‘முஸ்லீம்களின் கடைகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்’ என்று பாஜகவின் பர்வேஷ் சர்மா பேசியதையும் குறிப்பிட்டு வாதாடினார்.
பாஜக தலைவர்களும் சாதுக்களும் குல்லாவையும் குறுந்தாடியையும் சிலுவையையும் பர்தாவையும் குதறி வைக்க தவறுவதில்லை. மதத்தின் பெயரால் மட்டுமல்ல; சாதியின் பெயராலும் இனத்தின் பெயரலாலும் வெறுப்பு பேச்சுகள் எல்லை மீறுகின்றன. சமூக ஊடகங்களின் பெருக்கத்தில் இந்த வெறுப்பு பேச்சுகளின் விளம்பரம் மின்னலையும் விடவும் விரைவாக கடத்தப்படுகின்றன. தினம் தினம் புதிது புதிதாக எதிரிகள் கட்டமைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர். எல்லா சமயங்களிலும் சகிப்புத்தன்மை என்பது ஒப்புக்குக்கூட இல்லை. இந்த நிலையில்தான் இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த வழக்கில் நீதிபதி கே.எம். ஜோசப் அவர்களும் முஸ்லீம்கள் சிலரும் வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்ட தவறவில்லை. இரு தரப்பினருமே வெறுப்புப் பேச்சில் பேசுவதைக் குறித்த கவலை தெரிவித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் டெல்லி, உத்தரகாண்ட, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
எந்த மதத்திற்கு எதிராகவும் வெறுப்பு விதைக்கும் வகையிலும் யார் பேசினாலும் மாநில அரசும் அதன் காவல்துறை தாமாகவே முன்வந்து வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறுப்புணர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
மேலும் நீதிபதிகள் மிகுந்த கரிசனையோடு சொன்ன வார்த்தைகள்: ஜனநாயக மதச்சார்பற்ற நாட்டில் வெறுப்பு பேச்சுகள் உண்மையிலேயே கவலைக்கொள்ள செய்கின்றன. வெறுப்புப் பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை. இது 21 ஆம் நூற்றாண்டு. அரசிலமைப்புச் சட்டத்தின் 51ஏ பிரிவு அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. இன்று நாம் மதத்தின் பெயரால் எங்கே போய் நிற்கிறோம்? இது வேதனை தருகிறது.
எனவே, வாயைத் திறந்தாலே வம்பளக்கும் வாயர்கள், ராஜாக்கள், சம்பத்கள், மலைகள் நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி நடக்க வேண்டும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மதவெறியால் வாழ்ந்தவர்களைவிட வீழ்ந்தவர்கள்தான் அதிகம். இது வரலாறு.
குஜராத்தி கவிஞர் நரசி மேத்தாவின் கவிதை மகாத்மா காந்திஜியையே புரட்டிப்போட்ட புரட்சி கவிதை ஆகும். இக்கவிதை மதவெறியர்கள் ஒவ்வொருவருக்கும் தெளிவைத் தரும்.
‘இறைவா! நான் அன்றாடம் தவறாமல் சமய நெறிகளைப் பின்பற்றினாலும், ஒவ்வொரு நாளும் ஒருவேளை மட்டுமே உணவு உண்டாலும், கோபம், காழ்ப்பு, பழிதீர்க்கும் வெறி என் நெஞ்சிலிருந்து நீங்காமற் போனால் இந்த சமய வாழ்க்கை எந்தப் பயனுமற்றுப் போகும்.
நாள்தோறும் நான் ஆலயம் சென்று ஆண்டவனைத் தொழுதாலும், மலரும் ஊதுபத்தியும் கொண்டு வழிபட்டாலும், சுயநலம், பேராசை, பற்று, ஆணவம் அனைத்தும் நீங்காமற்போனால், இந்த வழிபாடு அனைத்தும் என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும் தந்திரமாகும்.
எந்த நேரமும் நான் பிரார்த்தனை செய்தாலும், சான்றோர் அவையில் பங்கேற்றாலும் நீண்ட நேரம் தியானத்திலும் ஈடுபட்டாலும் அன்பு, கருணை, இரக்கம், எனது இயல்பாக இல்லையெனில் என் ஆன்மீகம் உண்மையானது இல்லை: நான் தனித்திருந்து மௌனத்தில் ஆழ்ந்தாலும், எளிமையும் தவமும் ஏற்று, அகிம்சை வழியில் துறவை அறிவித்தாலும், என் தவறான ஆசைகளும் எண்ணங்களும் அழிக்கப்படாவிடில், என் உடல் உணர்விலிருந்து விடுபடாவிடில், எல்லாவுயிர்களிலும் இறைவன் இருப்பதை நான் அறிந்து கொள்ளாவிடில் என் வாழ்க்கை முழுவதும் வீணாகும்’.
நாம் எங்கே போகிறோம்?
Comment