பொன்விழா காணும் ‘நம் வாழ்வு’
என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!
‘மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்!’
என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. மனத்தில் உறுதியும், வார்த்தையில் இனிமையும், சிந்தனையில் நல்லவையும் சங்கமித்தால் எண்ணிய பொருள் கைகூடுவது சாத்தியமே. பாரதியின் இந்த வாழ்வியல் தத்துவம் ‘நம் வாழ்வின்’ இதழியல் தத்துவமாய் அமைந்திருக்கிறது. நேர்கொண்ட பார்வை, தெளிந்த சிந்தனை, உறுதியான நிலைப்பாடு, அறம் பேசும் வாழ்வியல் கோட்பாடு, சமூக நீதிக்கான அறைகூவல், சமத்துவத்திற்கான விடியல், உரிமைக்கான முழக்கம், குரலற்றவர்களின் குரல் எனப் பன்முக நோக்கம் கொண்டு தமிழ்க் கூறும் நல்லுலகில் 50 ஆண்டுகளாக வீரநடை போட்டு, சமூக-ஆன்மிக-அரசியல்-வாழ்வியல் வழிகாட்டியாக மாபெரும் புரட்சி செய்து வரும் தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழ் ‘நம் வாழ்வு’ தனது 50-வது அகவையை எட்டிப்பிடித்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
இழப்புகளும் வலிகளும் இல்லாமல் சாதனைத் தடம் காண்பது சாத்தியமாகாது. வார்த்தை வளமானது; எழுத்து கூர்மையானது... ஆகவே, இதழியல் பணி இருபுறமும் கருக்கு வாய்ந்த கூரிய வாள் போன்றது. எனவேதான் மார்க்சிம் கார்க்கி, “என் கையில் பேனா இருக்கிறது; என் வாக்கில் உண்மை இருக்கிறது; ஆகவே, சமூகத் தீமைகளுக்கு எதிரான என் பயணம் என் இறுதி நாள்வரை தொடரும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களே வழிதேட முன்வருவார்கள். அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால் தங்களுடைய வழியைத் தாமே கண்டுகொள்வார்கள்; அவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதுதான் என் வேலை” என்றார். பேனாவின் கூரிய வலிமை பெரிது அன்றோ!
அத்தகைய பயணத்தில் அரை நூற்றாண்டு காலம் துணிவு-தெளிவு-விடிவு என்னும் மதிப்பீடுகளில் அச்சமின்றி, துணிவுடன் உரத்த குரலில் உண்மையை எடுத்துச் சொல்லி, தெளிவுடன் சிந்தனைகளை முன்வைத்து, மாற்றத்திற்கான விடியலைச் சுட்டிக்காட்டி இவ்விதழ் பயணித்து வருவது பாராட்டுக்குரியது.
‘உண்மையைப் பேசு’ என்றும், ‘வாய்மையே வெல்லும்’ என்றும் அறநெறி கூறுகின்றன இலக்கியங்கள். ‘சிறந்த சிந்தனைகள் எட்டுத்திக்குமிருந்து நம்மை வந்துசேர வேண்டும்’ என்கின்றன வேதநூல்கள். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய காந்தி, தன் கருத்துகளைப் பரப்ப ‘இந்தியன் ஒபினியன்’ என்ற இதழைத் தொடங்கியபோது, “இவ்விதழின் ஒரே நோக்கம் மக்கள் சேவையே’ என்றார். ‘மக்கள் பணியே இறைத்தொண்டு!’ என்னும் நோக்குடன் மக்களை, சமூக-ஆன்மிக-அரசியல் மற்றும் வாழ்வியல் தளத்தில் நேரிய சிந்தனைகளோடு, உயர்ந்த எண்ணங்களோடு, விடியல் இலக்கோடு, சகோதர வாஞ்சையோடு ஒன்றிணைக்கப் பயணித்து வரும் ‘நம் வாழ்வு’ வார இதழ் இப்பொன்விழா ஆண்டைப் பெருமையோடும், மகிமையோடும் கொண்டாட விளைகிறது.
தனிமனித நலனை உள்ளடக்கிய சமூக நலனை முன்னிறுத்தி சமூகப் பொறுப்புணர்வுடன் சமூக நலனைப் பாதுகாக்கும் எண்ணத்தில் சரியான, முறையான, தரமான, நிறைவான கருத்துகளை வழங்கி, மக்களை நெறிப்படுத்தும் பண்புகளைப் பயிற்றுவித்து, பார்போற்ற உயர்ந்து நிற்கிறது ‘நம் வாழ்வு.’
‘வானம் மண்ணில் வசப்படும்’ என்றும், ‘எழுச்சிமிகு எழுத்துகளால் ஏற்றமிகு உலகு காண முடியும்’ எனவும், ‘கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகு சாத்தியமே’ என்னும் ஆழமான நம்பிக்கைகளோடு தடம் பதித்து, வாழ்க்கையின் மேலான விழுமியங்களை முன்வைத்து இவ்விதழ் கடந்து வந்த பாதை பெருமைக்குரியது. இப்பயணத்தில் அடியேனும் இவ்விதழின் தலைமைப் பொறுப்பேற்று இப்பொன்விழா ஆண்டில் பயணிப்பது இறைவன் தந்த பேரருளே! இப்பொன்விழா நிகழ்வுகளையும், அதற்கான முன்னெடுப்புகளையும் முன்கூட்டியே உங்களுக்கு வழங்கும் வண்ணம் இந்த ஆசிரியர் பக்கத்தை வரைய விரும்புகிறேன்!
மதுரை உயர் மறைமாவட்டத்திலிருந்து வெளிவந்த ‘கத்தோலிக்கு சேவை’ என்னும் மாத இதழை இடைநிறுத்தம் செய்து, அதன் மறுபிறவியாக 1975-ஆம் ஆண்டு பிறப்பெடுத்ததுதான் ‘நம் வாழ்வு’ என்னும் இந்த வார இதழ்! ஆகவே, இக்குழந்தை பிறந்த இடத்திலேயே இதற்குப் பொன்விழா எடுப்பது சாலச்சிறந்தது என நிர்வாகம் எண்ணியது. ஆயர் பேரவையின் அனுமதியுடன் இப்பெருவிழா வரும் 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ஆம் நாள் மாலை 5 மணிக்கு, ‘நம் வாழ்வு’ பிறந்த முத்தமிழ்ச் சங்கம் கண்ட மதுரை மண்ணிலே ஞானஒளிவுபுரம், தூய பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. தமிழ்நாடு திரு அவையின் அனைத்து ஆயர் பெருமக்களின் முன்னிலையில் நிகழவிருக்கும் இந்நிகழ்விற்கு ‘நம் வாழ்வு’ சந்தாதாரர்கள், வாசகர்கள், வர்த்தக நிறுவனத்தார், புரவலர்கள், எழுத்தாளர்கள், நலவிரும்பிகள் என எங்களோடு பயணிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றேன்! இத்தேதியை முன்குறித்து வைத்து பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறேன்.
இவ்விதழ் தொடங்கப்பட்ட ஆண்டில் ஒவ்வொரு மறைமாவட்டமாக ‘நம் வாழ்வு’ அறிமுகம் செய்யப்பட்டிருப்பது வரலாறு கூறும் உண்மை. அவ்வாறே, மதுரை மாநகரில் நிகழவிருக்கும் இப்பெருவிழாவைத் தொடர்ந்து, ஒவ்வொரு மறைமாவட்டமாக 2025-ஆம் ஆண்டில் ‘நம் வாழ்வு’ பொன்விழா அந்தந்தத் தலத் திரு அவையின் ஆயர் தலைமையில் இறைமக்களோடு ஒன்றிணைந்து சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆயினும், அதன் முன்னோட்டமாக இப்பெருவிழாவிலே தமிழ்நாடு முழுவதும் இருந்து அனைத்து வாசகர்களும், சந்தாதாரர்களும் கலந்துகொள்ள அன்போடு அழைக்கின்றேன்!
இவ்விழாவை எதிர்நோக்கி மதுரை மண்டலப் பகுதி பங்குகளில் இறைமக்களை ஞாயிறு வழிபாடுகளில் சந்தித்து நேரடியாக அழைப்பு கொடுக்கவும், பள்ளிகளில் ஆசிரியப் பெருமக்களைச் சந்தித்து அழைப்பு விடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் ‘நம் வாழ்வு மண்டல அலுவலகம்’ இவ்விதழ் பிறந்த இடமான மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் இல்ல வளாகத்தில், நொபிலி மேய்ப்புப் பணி நிலையத்தில் செயல்பட அனுமதியும் பேராதரவும் நல்கிய மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர் மேமிகு முனைவர் அந்தோணி பாப்புசாமி ஆண்டகை அவர்களை ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் சார்பாக, குறிப்பாக அதன் தலைவர், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் ஆண்டகை பெயரால் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மண்டல அலுவலகத்தில் ‘நம் வாழ்வு’ துணை ஆசிரியர் அருள்பணி. அருண் பிரசாத் தங்கியிருந்து விழா தயாரிப்புகளை முன்னெடுக்கவும், அவ்வாறே முதன்மை ஆசிரியரும் இரு துணை ஆசிரியர்களும் ஞாயிறு திருப்பலிக் கொண்டாட்டங்களில் மதுரையில் மக்களைச் சந்தித்து அழைப்பு விடுக்கவும் திட்டமிடப்பட்டு கடந்த இரு வாரங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சூழலில், மக்கள் தங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக்கொள்ளவும், புதிய சந்தாதாரர்களை அடையாளப்படுத்தவும் ‘நம் வாழ்வு’ புரவலர் திட்டத்திற்குத் தாராள பொருள் உதவி தந்து பங்களிப்புச் செய்யவும் அன்போடு வேண்டுகிறேன். முதன்மை ஆசிரியரும், துணை ஆசிரியர்களும் தங்களைச் சந்தித்து விடுக்கும் அழைப்பினை ஏற்று, தாங்கள் இப்பெருவிழாவில் கலந்துகொள்ளவும் வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வேளையில், இப்பெரும் முயற்சிக்குப் பங்குப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் பேராதரவு நல்கி மக்களைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பளிப்பதுடன், தங்கள் பங்குமக்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அவ்வாறே, நமது கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பெருமக்களை நாங்கள் சந்திக்கவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் மறைமாவட்ட மற்றும் இருபால் துறவற சபைகளின் பள்ளி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு நல்கிடவும் அன்போடு வேண்டுகிறேன்.
இத்துடன் ‘நம் வாழ்வு’ பொன்விழா மலருக்கான உங்களுடைய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்புற வெளிவர இருக்கும் இம்மலருக்கு துறவற சபைகள், மறைமாவட்ட நிர்வாகத்தினர், கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தார் விளம்பரங்கள் தந்து உதவிடுமாறும் அன்போடு வேண்டுகிறேன்.
வரலாறு பேசும் நம் வாழ்வின் இப்பொன்விழா நிகழ்விற்கு வாஞ்சையோடு உங்களை அழைக்கின்றேன்! வாருங்கள்... இது நமது விழா!
‘நம் வாழ்வு’ - நமது இதழ்! நமது குரல்!
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்
Comment