ரத்தன் டாடா: அறம் கூறும் ஓர் அடையாளம்!
உண்மையும் நேர்மையும் விடைபெற்ற இன்றைய வணிக உலகில் ஒழுக்கமும், மானுடநேயமும் இரு கண்களாகக் கொண்டு தனிமனித வாழ்விலும், சமூக மேம்பாட்டிலும், சமத்துவ நிலைப்பாட்டிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பவர் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா.
இந்தியப் பொருளாதார மேம்பாட்டில் எளிதில் கடந்து செல்ல முடியாத ஒரு பேராளுமை இவர். இன்று உலக அரங்கில் இந்தியா பொருளாதார ரீதியாக வலிமை பெற்றதற்கும், சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்கள் செயல்படுவதற்கும் பாதை வகுத்துக் கொடுத்த பெருமகனார் ரத்தன் டாடா என்றே வரலாறு பதிவு செய்திருக்கிறது. “அவரது மறைவால் இந்தியா, உலக அரங்கில் கொண்டிருந்த தனது பெரும் அடையாளங்களில் ஒன்றை இழந்துவிட்டது” என்கிறார் குடியரசுத் தலைவர் திருமதி. முர்மு. அவருடைய தொலைநோக்குப் பார்வையும், தனது நிறுவனத்தின் வளர்ச்சியை நாட்டு நலனின் கட்டமைப்போடு ஒன்றிணைத்ததும், கொடை பண்பால் மேற்கொண்ட சமூகப் பணிகளும் ஈடு இணையற்றவை.
சுயநலப் பேராசையால் தொழில்துறையிலும், வர்த்தகச் சந்தையிலும் அறநெறி பிறழ்ந்து பொருளைக் குவிக்கும் பல தொழில்துறை வணிக நிறுவனங்களின் மத்தியில், நேர்மையும் உண்மையும் வாய்மையும் கொண்டு, அறநெறி தவறாது கூரிய சிந்தனையால், தொலைநோக்குப் பார்வையால் மாபெரும் வளர்ச்சி கண்டு, பெரும் பொருள் ஈட்டி, தன் நிறுவனங்களில் வெற்றிக் கொடி நாட்டியவர் ரத்தன் டாடா. தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கணினி மென்பொருள் துறையிலும், வாகன உற்பத்தித் துறையிலும் இன்று டாடா நிறுவனம் முன்னிலையில் இருப்பதற்குக் காரணம் இவரே. தான் மட்டும் வளராமல், இளம் தொழில் முனைவோரும் பெருக வேண்டும், வர்த்தக நிறுவனங்கள் உயர வேண்டும் என்ற அவரது பெருந்தன்மையைப் பல இளையோர்கள் வியந்து போற்றுகிறார்கள். அவ்வாறே அன்பும் பரிவும் நிறைந்து, கருணை உள்ளம் கொண்டு ஈட்டிய பொருளால் மாபெரும் மானுடப் பணிகளை மேற்கொண்ட இவர், இன்றைய இளையோரால் தேடித்தேடி மீண்டும் மீண்டும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு பேராளுமை என்றால், அது மிகையாகாது.
பொருளாதார நிலைப்பாட்டில் முரண்பட்ட முகங்களைக் கொண்ட இந்திய மண்ணில், ‘அனைவரும் சமம்’ என்னும் சமதர்மச் சமுதாயத்தை உருவாக்க முயற்சி செய்தார் அண்ணல் காந்தி. இங்குக் குடிசைக்கூட இல்லாத குப்பனும், ஹெலிகாப்டர்கள் மாடியில் இறங்கும் வசதிகளோடு வாழும் அம்பானி அதானிகளும் இருக்கின்றபோது சமதர்மச் சமுதாயம் காண்பது எப்போது? ஆகவேதான் அவர், “நமது ஆசைகளைக் குறைத்துக் கொண்டு, எதுவுமற்ற ஏழைகளுக்கு ஓரளவு கிடைக்கும்படி செய்வது நம் முதல் கடமை” என்றார். அவ்வாறே, ரத்தன் டாடா கண்ட ‘கனவு இந்தியா’ என்பது ஏழை மனிதனின் பொருளாதார விடுதலை இந்தியா! ஒரு பணக்காரன் அனுபவிக்கும் சாதாரண வாழ்க்கை தேவைகளெல்லாம் ஏழைக்கும் கிடைத்தாக வேண்டுமென ஆசை கொண்டார். ஆகவே, மானுடநேயம் கொண்டு பசித்தவருக்கு உணவும், ஆடையின்றி இருப்போருக்கு உடையும், திறமைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியைப் பெறுவதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென இவர் கொண்ட முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதே.
எனவேதான், இந்திய ஆயர் பேரவை, “ரத்தன் டாடா என்பவர் தொழில்துறையின் அடையாளம் மட்டுமல்ல; மாறாக, இரக்கம் மற்றும் பெருந்தன்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார். டாடா அறக்கட்டளை வழியாக அவர் மேற்கொண்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகள் பல கோடி மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. சமூக நீதிக்கும், கல்விக்கும், மருத்துவத்துறைக்கும், கிராமப்புற மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய பங்கு, ஏழை எளியோரை மையம் கொண்ட கிறிஸ்தவத்தின் மேய்ப்புப் பணியைப் பிரதிபலிக்கிறது. தனித்துவமும், அர்ப்பணமும் கொண்ட தலைமைத்துவத்தில் அறவழி நின்ற ஆளுமையாய், சமூகத்திற்காக அவர் முன்னெடுத்த செயல்பாடுகள் இளையோர் மத்தியில் சமூகப் பொறுப்பை விதைத்திருக்கிறது” என்றே புகழாரம் சூட்டுகிறது.
இவர் உலகமே வியக்கும் அறவழி நின்ற ஓர் ஆளுமையே! ‘அறம் செய்ய விரும்பு’ என்றார் ஒளவையார். ‘அறம்’ என்பதற்கு ‘தானம்’ என்று மட்டும் பொருள் அல்ல; அதையும் தாண்டி அற வழியில் நிற்றல் என்றும் பொருள்படுகிறது. ஒழுங்கான, ஒழுக்கமான, அன்பு கொண்ட, மானுடநேயம் நிறைந்த அறநெறி வாழ்வியல் கூறுகளைக் கொண்டவை. மேலும், அறம் என்ற ஒற்றைச் சொல் கடமை, தியானம், புண்ணியம், ஞானம், நல்வினை, அறச்சாலை, நோன்பு என்னும் பல்வேறு பொருள் கொண்டிருக்கிறது. இந்தியத் தத்துவவியல் அறம்-பொருள்-இன்பம்-வீடு என்கிறது.
நிலையான உண்மையுடனும் உணர்வுகளுடன் இருப்பதுதான் ‘அறம்’ என்று அழைக்கப்படுகிறது. மேலும், அறம் என்பது ஒழுக்கத்தையும் பண்பாடுகளையும் ஒருசேரப் பெற்றது. தமிழ் இலக்கியம் அறம் பற்றிக் கூறும்போது... அன்பாய் இருப்பது அறம்; இனிமையாய் பேசுவது அறம்; கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்; நல்லதையே நாடுவது அறம்; தூய துறவியரைப் பேணுவது அறம்; மானத்துடன் வாழ்வது அறம்; உயிருக்கு ஊக்கம் தருவது அறம்; அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்; மனத்தில் குற்றமற்று இருப்பது அறம்; பொய்மையைத் தவிர்ப்பது அறம்; சினத்தைத் தவிர்ப்பது அறம்; பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்; பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்; பிறருடன் பகிர்ந்து வாழ்வது அறம்; பிற உயிர்களைக் கொல்லாமை அறம்; தீமை இல்லா வழியில் பொருளீட்டுவது அறம்; இறுதியாக, அற நூல்களைக் கற்று அடக்கமுற இருப்பது அறம் என்கிறது. எனவேதான், ஐயன் வள்ளுவரும்,
‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்’ என்கிறார்.
அதாவது, தன் வாழ்வில் கடுமையான சொற்கள், பொறாமை, தீயகுணங்கள் போன்றவற்றை முழுமையாக நீக்கிவிட்டு வாழ்வதே அறம் என வள்ளுவர் வகுத்துக் கொடுக்கிறார். ரத்தன் டாடாவின் வாழ்வியல் நெறி இவ்வாறே அமைந்திருந்தது.
ஆறு கண்டங்கள், 115 நாடுகள் எனப் பரந்து விரிந்த டாடா வணிகக் கட்டமைப்பின் மொத்தச் சொத்து மதிப்பு 16,500 கோடி ரூபாய் எனக் கணிக்கப்படுகிறது. பெரும் தொழில் அதிபராக வலம் வந்த ரத்தன் டாடா ஒருமுறை கூட பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றதில்லை. உலகம் முழுவதிலிருந்தும் டாடா நிறுவனங்களின் வழியாகக் கிடைக்கும் வருவாயில் 66 விழுக்காடு வருமானத்தை அறக்கட்டளைக்கு அனுப்பி, அறக்கட்டளை வழியாக மாபெரும் மானுடப் பணிகளை மேற்கொண்டவர் ரத்தன் டாடா. கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் பல சமூகநலப் பணிகளை முன்னெடுத்து பலருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர் இவர். டாடா குடும்பத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், இறுதி மூச்சுவரை டாடா அறக்கட்டளையின் தலைவராக இருந்து பணிகளை மேற்கொண்டவர். உலகப் பணக்காரர் பட்டியலில் அவர் இடம்பெறத் தவறினாலும், தனது இறுதி மூச்சுவரை எளிமையாய் வாழ்ந்து தன்னுடைய அளப்பரிய சேவைகளால் பல கோடி மக்களின் உள்ளங்களில் அவர் இடம் பிடித்திருக்கிறார்.
இந்திய மக்களாலும், உலகத் தொழில்துறையினராலும் இவர் எளிதில் மறந்து போகக்கூடிய ஆளுமை அல்ல. எல்லாத் தளங்களிலும் இவருடைய நினைவுகள் நீங்கா இடம்பெற்றிருக்கின்றன. ஆகவேதான் ஓர் அரசியல் தலைவருக்கு, திரையுலக நட்சத்திரத்திற்கு, வசீகரப் பேச்சாளருக்கு, ஓர் ஆன்மிகத் தலைவருக்குக் கிடைக்கும் அஞ்சலியைவிட, ஒட்டுமொத்த இந்தியாவும், ஏன் உலகமே அவரது மறைவுக்காக மனத்திற்குள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
‘போதும்’ என்ற நிறைவில்லாமல், முறையற்ற வழியில் பொருளை அள்ளிக் குவிக்கும் இன்றைய வர்த்தக உலகில், பொது வாழ்வில் புனிதம் காத்த பெருமக்களின் பட்டியலில் முன்னிற்கிறார் ரத்தன் டாடா. தொழிலதிபர்கள் தான் உண்டு, தன் தொழில் உண்டு என்றுதான் இயங்குவார்கள். பெரும்பாலான தொழில் அதிபர்களின் ஒவ்வொரு நகர்வும் தொழில் ரீதியானதாகவே இருக்கும். ஆனால், ரத்தன் டாடா அதற்கு விதிவிலக்கு. தொழில்துறையையும் கடந்து தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர். தன்னடக்கமும், தனி வழியும் இவரது தாரக மந்திரமாக இருந்தது. “சரியானதைச் செய்யுங்கள்; முடியாது என்று எதுவும் இல்லை” என்பதும், “சவால்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் இருங்கள். ஏனென்றால் அவைதான் வெற்றிக்கான படிநிலைகள்” என்பதும், டாடாவின் வாழ்வியல் தத்துவம். இத்தகையோரின் ஈதலைப் பற்றி குறிப்பிடும் வள்ளுவர்,
‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு’ (குறள் 231).
அதாவது, வறியவருக்கு ஈதல் வேண்டும்; அதனால், புகழ் உண்டாக வாழ வேண்டும்; அப்புகழ் அல்லாமல் உயிருக்கு ஊதியம் ஆனது வேறொன்றும் இல்லை என்கிறார். இவ்வேளையில், ‘ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்’ என்னும் கவிஞர் கண்ணதாசனின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர்
Comment