No icon

எப்போது நிகழும் மக்கள்தொகை கணக்கெடுப்பு?

இந்தியா பல்வேறு சமய, சமூக, மொழி மற்றும் பண்பாட்டு உட்கூறுகளைக் கொண்டாலும், ‘வேற்றுமையில் ஒற்றுமைகாணும் மிகப்பெரிய சனநாயக நாடு. ஆகவேதான், “பண்பாட்டு ஒற்றுமையில்... இப்பூமிப்பந்தில் இந்தியாவுக்கு ஈடு இணை இல்லை. இந்தியா புவியியல் ஒற்றுமையோடு அதனினும் ஆழமான ஐயத்துக்கு இடமில்லாத பண்பாட்டு ஒற்றுமையையும் நாடு முழுவதும் பெற்றுள்ளது. இந்த இயல்பினால்தான் சாதி என்பது விளங்குவதற்கு அரிய பிரச்சினையாக விளங்குகிறதுஎன்றார் அண்ணல் அம்பேத்கர்.

இங்குத் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட சாதியம், துடைத்து எறியப்பட முடியாத சவாலாகவே தொடர்வது வேதனை. சாதிய அமைப்பு இந்தியாவின் சாபக்கேடு! பொருளாதார வர்க்க வேற்றுமையைவிட, சாதி வேற்றுமையே இங்கு மனித சமூகத்தை இன்றும் மோசமாக இழிவு படுத்துகிறது.

ஆயினும், ‘நோய் நாடி நோய்முதல் நாடி...’ எனச் சீரமைப்பிற்கு வழிகாட்டும் ஐயன் வள்ளுவரின் வழியில், சாதியக் கட்டமைப்பே சமூக அழிவின் ஆதாரம் என்பதை அறிந்து, அதைச் சீரமைக்கும் பணிதான்இட ஒதுக்கீடு.’ வேதகாலம் தொட்டே இந்தியச் சமூக அமைப்பில் ஏதோ ஒரு வகையில் இட ஒதுக்கீடு இருந்தே வந்திருக்கிறது என்பதே உண்மை. தொழிலை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சாதியப் பிரிவுகள் பின்னாளில் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டபோது, சாதிகளின் ஏணிப்படியில் மேல்தட்டில் அமர்ந்திருப்பவனை எட்டிப்பிடிக்க, அடித்தட்டில் அமர்ந்திருப்பவனுக்குக் காலம் தந்த பரிசுதான் இந்த இட ஒதுக்கீடு.

சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடு குறித்து அறிவிலிகள் எழுப்பும் எதிர் விமர்சனங்கள் இன்றும் தொடர்கின்றன. அவர்களின் புரிதல் அவ்வளவுதான். ‘எந்த நாட்டிலும் கல்வித் துறையிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு இல்லை; இங்கு மட்டும் ஏன்?’ என்னும் அவர்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது? இங்கு மட்டும்தானே வர்ணாசிரமம் வடிவெடுத்த சாதிமுறை பல நூற்றாண்டுகளாக மத அடிப்படையிலும், சமூக அமைப்பு முறையிலும், தத்துவக் கோட்பாட்டு வகையிலும், சமூகக் கட்டமைப்பாகவும், எழுதப்படாத சட்ட நடைமுறையாகவும், மாறவும் முடியாமல், மாற்றவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

இன்று யாவும் சாதிய அடிப்படையிலேயே சமூகத்தை முற்றுகையிடுகின்றபோது பொருளாதார ஏற்றத்திற்கான, சமூக மாற்றத்திற்கான, வாழ்வியல் மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல்களை, ஏன்  சாதியத்தை மையம் கொண்ட இட ஒதுக்கீடு வாயிலாகத் தொடங்கக்கூடாது? ஒருசிலரின் சாதியத் திமிரும் அதன் கோரப் பிடியும்தான் இக்கட்டமைப்பை இன்றும் இறுகக் கட்டிப் போட்டிருக்கிறது. இவை தகர்க்கப்படும்போதுதான் அரசியல், பொருளாதார, சமூகச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரக்கூடும்.

இன்று பொது உணர்வை சாதியம் கொன்றுவிட்டது. மானுட நேயத்தை, அறம் கூறும் தர்மத்தை அது அழித்து விட்டது. சமுதாயத்தின் கடைக்கோடியில் தள்ளப்பட்டவர்களைக் கண்கொண்டு பார்க்க முடியாத அளவிற்குப் பொதுநலச் சிந்தனை செத்தவர்களாக இச்சமூகம் பலரை உருவாக்கி இருக்கிறது.

சமூகத்தின்ஒட்டுமொத்த வளர்ச்சிஎன்னும் இலக்கை அடைவதற்கான தடையற்ற சூழல் வரலாற்றில் ஒருபோதும் இருந்ததில்லை. பலர் எளிதாக உரிமைகளைப் பெற்று மகிழும்போது, அடிப்படை உரிமைகளுக்காகப் போராட வேண்டிய குழுவாக ஒருசாரார் வஞ்சிக்கப்பட்டு இருப்பது காலத்தின் கோலம். இந்தத் தடைகள் நீக்க முடியாதவை அல்ல; ஆனால், இவை நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்பதையும், அவற்றை நியாயப்படுத்த பெரும்பான்மைக் கருத்தியல்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த முரண்களைத் தகர்க்க அரசியல் மட்டங்களில் ஒலிக்கத் தொடங்கிய பல்வேறு குரல்களின் சாத்தியத்தால் உருவானதுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு. இது ஏதோ சாதாரண புள்ளி விவரம் என்று எண்ணுவது மடமை. மக்களின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்வி, சமூக முன்னேற்றம், வேலைவாய்ப்பு, மனித வளம், நாகரிக முன்னேற்றம் எனப் பல்வேறு தன்மைகளை அறிவதற்கான அடிப்படை நோக்கம் கொண்டதாக இது அமைந்திருக்கிறது.

ஆகவேதான், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்று, மக்களின் பொருளாதார நிலையும், சமூக மேம்பாடும், வாழ்வாதாரமும் கணிக்கப்படுகின்றன. 2021-ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஒன்றிய பா... அரசால் இன்னும் நடத்தப்படவில்லை. நிலுவையில் உள்ள இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசியல் மட்டத்தில் குரல்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி, பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பில் சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் கொள்கைகளை வகுப்பதற்கு இந்தச் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானதாகிறது.

எனவேதான், சாதிய அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அழைப்பு தேசிய அரசியலில் பேசுபொருளாக எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. இது பல்வேறு மாநிலங்களில் நிலவும் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைச் சீர்செய்வதற்கான வழிகாட்டுதலாக அமையும் என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி இயக்கங்களின் தாக்கம் மற்றும் அவைகளின் வீரியமிக்க செயல்பாடுகளால் இக்கோரிக்கை வலுவாகவே எழும்பிக் கொண்டிருக்கிறது. ஆகவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, கடந்த ஜூன் 26 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிக்கை அக்டோபர் 18 - ஆம் தேதி கர்நாடக அமைச்சரவை முன் வைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் முதல்வர் சித்தராமையா. 2015 -ஆம் ஆண்டே அங்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். அவ்வாறே, ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 15 முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடங்க இருப்பதாகத் தெரிகிறது. பின்தங்கிய சமூகங்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பிற மாநிலங்களிலும் இது எதிரொலிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் பல்வேறு சாதிகள், சமூகங்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வதால் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலை தொடர்பாக அளவிடக் கூடிய தரவுகள் தேவைப்படுகின்றன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வகைப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியமானதாகிறது.  1901 -ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளில் ஒருவரான ரிஸ்லி, தான் எழுதியஇந்திய இனவியல் குறித்த ஆய்வு’ (The Study of Ethnology in India) என்னும் கட்டுரையில்பழங்குடியினருக்கான தேவைகள் குறித்த கேள்விகளையும், அதற்குப் பழங்குடியினரிடமிருந்து கிடைத்த பதில்களையும் விமர்சனக் கோணத்தில் அணுகியிருந்தால் அவர்களின் வாழ்வில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க முடியும்என்று குறிப்பிட்டது நினைவு கூரத்தக்கது. இந்தக் கூற்றை இன்றைய சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான அவசியமானதாகப் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இன்றைய சூழலில், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் ஒருமித்த வளர்ச்சிக்கான, சமூக நீதிக்கான போராட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய வர்க்க முரண்பாட்டின் அடித்தட்டில் இருக்கும் ஒரு சமூகம் மேன்மை அடைவதற்கும், சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், அச்சமூகம் தன்னிறைவு அடைவதற்கும் இது காலத்தின் கட்டாயமாகிறது. காலத்திற்கேற்ற சமூக நீதிக்கான வரையறை இன்று மீண்டும் மீள்பார்வை செய்யப்பட வேண்டும்.

இன்றைய அரசியல், சமூக, ஆன்மிகத் தளங்களில்பிரதிநிதித்துவம்என்பது வலுவான கருத்தியலாக எங்கும் எதிரொலிக்கிறது. மக்கள்தொகையும், வேலைவாய்ப்புகளுக்கான தகுதி படைத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில், சமூக நீதியை மையம் கொண்ட வாழ்வியலுக்கான இந்த இட ஒதுக்கீடும், அதை நடைமுறைப்படுத்த சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பும் இன்று மிகவும் அவசியமானதாகிறது.

இது எப்போது நிகழும்? அது சாதிவாரிக் கணக்கெடுப்பாக அமையுமா?

பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட சாதியப் பாகுபாட்டைப் போக்குவதற்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பு பயனுள்ள கருவிகளை வழங்கும்என்று பேராசிரியர் கெயில் ஓம் வெட், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிஎன்னும் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது இங்கே நினைவு கூரத்தக்கதே!

அன்புத் தோழமையில்,

முதன்மை ஆசிரியர்

Comment