No icon

குடும்பத்தில் அருள்தந்தை ஆல்பர்ட் அவர்களின் உருவாக்கம்

“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலைத் தரும்.”

சரல் பங்கின் கிளையாக உருவெடுத்தது மணவிளை என்னும் சிறிய கிராமம். இக்கிராமத்தில் சாதாரண நடுத்தர எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள். அப்பா, அம்மா உள்பட மொத்தம் 9 பேர்களைக் கொண்ட குடும்பம். எங்கள் குடும்பத்தில் 5 ஆண்களும், 2 பெண்களுமாக மொத்தம் 7 பிள்ளைகள். இவர்களில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தவரே அருள்தந்தை ஆல்பர்ட் அவர்கள்.  இந்த ஏழு பிள்ளைகளையும் பக்தி, பற்றுதலோடு வளர்த்தவர்களே எங்கள் பெற்றோர். அண்ணன், தம்பி, தங்கை பாச உணர்வோடு துன்பங்கள், பிரச்சினைகள் மத்தியிலும், மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டியவர்கள். கள்ளம் கபடற்ற வெள்ளை மனம் கொண்டவர்கள். உண்மையும், நீதியும், நேர்மையும் உடையவர்கள். இந்த முன்மாதிரிகையோடு, சகோதரப் பாசத்தோடு ஒழுக்கமும், கீழ்ப்படிதலும் உடையவர்களாக நாங்கள் வளர்க்கப்பட்டோம்.

அ. மேரி ஜார்ஜ் ப்ளவர், ஆயரின் சகோதரி

பங்கில் ஈடுபாடு: அப்பா, அம்மா இருவருமே பக்தியும், பற்றுதலும் உடையவர்கள். அப்பா அனஸ்தாஸ், அம்மா றோணிக்காள், இருவருமே பங்கிற்காகக் கடினமாக உழைத்தவர்கள். அப்பா கத்தோலிக்க சேவா சங்கத்திலும், அம்மா மாதா சபையிலும் தலைவர்களாக இருந்து பங்கை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்கள். ஆரம்பக் காலத்தில் அதாவது 1948-இல் 20 குடும்பங்களைக் கொண்ட ஒரு கிளைப் பங்காக உதயமானது. அருள்தந்தை அகஸ்டின் பெர்னாண்டோதான் கிளைப் பங்காக உருவெடுக்கக் காரணமாய் இருந்தார். ஞாயிறு திருப்பலி விடியற்காலை 5.00 மணிக்கு நடைபெறும். அப்பா 4.00 மணிக்கு எங்களை எழுப்பி விடுவார். பின் கிராம மக்களைத் தட்டி எழுப்ப வீடு வீடாகச் செல்வார். அம்மா எங்களைப் புறப்பட வைத்து அழைத்துச் செல்வார். ஞாயிறு தவிர மற்ற நாள்களில் அப்பா இரண்டு கிலோ மீட்டர் நடந்து சரல் புனித பேதுரு-பவுல் ஆலயத்திற்குச் சென்று திருப்பலியில் பங்கேற்பார். இரவில் ஒவ்வொரு நாளும் குடும்பச் செபம் ஏழு மணி முதல் எட்டு மணி வரை நடைபெறும். அப்பாவே வழிநடத்திச் செல்வார். எல்லாருமே அந்தச் செபத்தில் பங்கேற்றுச் செபிப்போம். அதன்பிறகு இரவு உணவு. பின் படிப்பு என ஒரு வரையறைக்குள் வளர்க்கப்பட்ட நாங்கள் உண்மையான, நேர்மையான வழியில் வழிநடத்தப்பட்டோம். சிறு வயதிலிருந்தே குடும்ப செபமும், ஆலய வழிபாடுகளும் எங்களை விசுவாசத்திலும், பக்தியிலும் வளர வைத்தன.

கல்வியில் ஈடுபாடு: அப்பா Excise Guard-ஆக வேலை பார்த்தார். அம்மா நன்றாகப் படித்தவர். ஆனால், வேலைக்குச் செல்லவில்லை. பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டியவர். வீட்டுச் சுமைகளை எல்லாம் தாங்கிக் கொண்டு கரிசனையோடு பல்வேறு துன்பங்கள் மத்தியிலும் படிப்பில் கவனம் செலுத்தினார். கஷ்டப்பட்டுக் கடினமாக உழைத்துதான் படிக்க வைத்தார்கள். படிக்கும் நேரங்களைத் தவிர, மற்ற நேரங்களில் பீடி ஒட்டுதல், ஓலை முடைதல், காய்கறித் தோட்டம் போடுதல், பசு வளர்த்தல் போன்ற கைத்தொழில்களில் அம்மாவோடு இணைந்து ஈடுபட்டோம். இதில் அருள்தந்தை ஆல்பர்ட் அவர்களும் விதிவிலக்கல்ல. எட்டாம் வகுப்பு படிக்கும் வரை எங்களோடு இருந்ததால் குடும்பக் கஷ்டங்கள் எல்லாம் தெரிந்தே வளர்ந்தார். அப்பா விடியற்காலை வயலுக்கு வேலைக்குச் செல்வார். நாங்களும் உடன் சென்று வரப்பு வெட்டுதல், உரம் போடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், பயிறு பறித்தல் போன்ற சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு உழைத்தோம். வரவுக்கு ஏற்றபடி செலவு செய்து, குடும்பப் பாரத்தைத் தாங்கியவர்கள்தாம் எமது பெற்றோர்.

விருந்தோம்பலும், பிறர் நலம் பேணலும்: அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள் என்றால் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும், பாசத்தோடு விருந்தளித்து உபசரிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டோம். விருந்தினர்களாக யார் வந்தாலும் அவர்களை உபசரித்து, விருந்தளித்து அனுப்புவதும் மகிழ்ச்சியைத் தந்தது. எங்கள் நண்பர்களாக நாங்கள் அழைத்து வருபவர்களையும் நன்கு உபசரித்து அனுப்புவார்கள்.

அருள்தந்தை ஆல்பர்ட் அவர்களின் உருவாக்கம்: அப்பா, அம்மாவிடமுள்ள அனைத்துப் பண்புகளையும் கொண்டு வளர்ந்தவர். அப்பா, அம்மாவுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் உதவியாக இருந்தவர். குடும்பக் கஷ்டங்களைத் தெரிந்தவர். கஷ்டங்களின் மத்தியில் வளர்ந்தவர். கஷ்டங்களை உள்வாங்கியவர். கஷ்டங்களைப் பொறுமையோடு சகித்துக் கொள்பவர். எளிமையை விரும்புபவர். பாரபட்சமற்ற, பாகுபாடற்ற முறையில் எல்லாரிடமும் சகஜமாகப் பழகுபவர். அன்பாகப் பேசுபவர். இறை நம்பிக்கை, பெற்றோர் பெரியோரை மதித்து நடத்தல், பணிவு-பாசம் அனைத்திலும் சிறந்து விளங்கியவர்.

தவறாமல் திருப்பலிக்குச் செல்வது, பீடச் சிறாராகக் குருவுக்கு உதவுவது, நற்கருணை வீரன் சபை, விசுவாசப் பரம்புதல் சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து செயல்பட்டது, மறைக்கல்வி வகுப்புக்கு ஒழுங்காகச் செல்வது என எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டு வளர்ந்து வந்தார். இறை உணர்வும், தெய்வ பயமும், ஒழுக்க ஞானமும், அறிவு ஆற்றலும், அன்பு அமைதியும், செபதபமும், எளிமையும், பொறுமையும், கீழ்ப்படிதலும் கூடவே வளர்ந்தது.

பிறக்கும் போதே ஒரு தெய்வீகக் குழந்தையாகவே நான் பார்த்தேன். அப்பொழுது நான் உடல் நலக் குறைவு காரணமாகப் படுக்கையில் இருந்தேன். எழுந்து நடக்க முடியாததால் படுத்துக்கொண்டே விளையாடுவேன். அவர் சுறுசுறுப்பாக, துடுதுடுப்பாக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைவேன். விளையாட்டுப் பொருள்கள் வைத்து விளையாடும்போது அப்ப, இரச பாத்திர வடிவிலுள்ள பொருள்களை எடுத்து வைத்துப் பூசை செய்வது ஒரு தனிப் பண்பாகவே இருந்தது. பங்கேற்பாளராக என் தம்பி, தங்கை இன்னும் பல பிள்ளைகள் இருப்பார்கள். பெரியவர்கள் சிலரும் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். வெளியில் செல்லும் போது சிலர் ‘குழந்தைசாமி’ என்று கூப்பிடுவார்கள். சிலர் ‘பூசை முடிந்ததா?’ என்று கேட்டுச் சிரிப்பார்கள். இப்படியாகச் சிறு வயதிலேயே கடவுள் அவருடைய பணியைச் செய்ய அழைத்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

சிறு வயதிலேயே பேச்சுத் தெளிவு, செய்யும் செயல்களில் தெளிவு, விளையாடும் விளையாட்டில் தெளிவு என எல்லாமே எல்லாரையும் வியக்க வைப்பதாக இருந்தது. எனவே, ஒரு வருடத்திற்கு முன்னதாகவே பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஒன்று முதல் ஐந்து வரை மணவிளை அரசுத் தொடக்கப் பள்ளியிலும், ஆறு முதல் எட்டு வரை சரல் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியிலும் படிப்பை முடித்துவிட்டு, செமினரியில் சேர்ந்து ஒன்பது முதல் பன்னிரண்டு வரை கார்மல் மேல் நிலைப் பள்ளியிலும் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளியில் படிக்கும்போது படிப்பிலும் சரி, போட்டிகளிலும் சரி, தனது திறமையால் வெற்றி பெற்று, பரிசினைப் பெற்றுச் செல்வார்.

விடுமுறையில் ஊருக்கு வரும்போது பாடகர் குழுவினருக்குப் பாடல் சொல்லிக் கொடுப்பது, முதியவர்கள், நோயாளிகளைச் சந்தித்துச் செபிப்பது, விழாக்களுக்கு அழைப்புக் கொடுத்தோரின் இல்லங்கள் சென்று வாழ்த்துக் கூறி செபிப்பது, அன்பியத்திற்கு நன்கொடைகள் வழங்கி ஊக்கப்படுத்துவது, உதவி கேட்டு வந்தால் அவர்களுக்கு உதவுவது, உதவிகள் பெற்றுக் கொடுப்பது போன்றவை இவரின் தனிப்பெரும் தன்னார்வமாகும்.

மாற்றுத் திறனாளிகள் மீது தனிப்பிரியம் உண்டு. அவர்கள் முடங்கி விடக்கூடாது; ஏதாவது தொழில் கற்றுக்கொள்ள வேண்டும்; அவர்களும் மற்றவர்களைப்போல் உற்சாகமாக, மகிழ்ச்சியோடு ஆடிப்பாடி மகிழ வேண்டும்; படிக்க முடியுமானால் அவர்கள் படித்து முன்னேற வேண்டும் என்ற ஆவலோடு வருபவர்கள் அனைவரிடமும் உரையாடி உறவாடும் நல்ல பண்பு கொண்டவர்.

Comment