No icon

(காலைத் திருப்பலி) திப 10:34,37-43; கொலோ 3:1-4; யோவான் 20:1-9

ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா (31-03-2024)

திருப்பலி முன்னுரை

இன்று நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ‘கிறிஸ்து மரித்தார், கிறிஸ்து உயிர்த்தார், கிறிஸ்து மீண்டும் வருவார்’ என்பது நம் நம்பிக்கையின் மறைபொருள். இன்றைய நற்செய்தியில் யோவான், துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் அங்கே கண்டதாகவும், அத்துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் வாசிக்கிறோம். திருவிவிலியத்திலே இதற்குப் பொருள் இருக்கிறது. பாலஸ்தீனப் பகுதியில் வீட்டின் தலைவர் சாப்பிடும்போது, கை துடைப்பதற்கான துணி மேசையின் மீது வைக்கப்பட்டிருக்கும். அவர் சாப்பிட்டவுடன் துணியால் கையைத் துடைத்து, அதை மீண்டும் மடித்து வைத்து விட்டுச் செல்வார். ஒருவேளை, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது யாராவது வந்தால், அந்தத் துணியை அப்படியே மடிக்காமல், சுருட்டிப் போட்டு விட்டுச் சென்று விடுவார். இதனுடைய பொருள், அவர் மீண்டும் வருவார் என்பதே. இங்கே இயேசுவின் கல்லறையில் துணி சுருட்டி வைக்கப்பட்டிருந்தது என்றால், அதனுடைய பொருள் உயிர்த்த இயேசு மீண்டும் வருவார் என்பதை உணர்த்துகிறது. ‘இயேசு உயிர்த்து விட்டார், அவர் மீண்டும் வருவார்’ என்கிற செய்தி நமக்கு மிகப் பெரிய ஆறுதல் தரும் நற்செய்தி. எனவே,  இதரக் காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல், உயிர்த்த இயேசு மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையோடு இந்த ஞாயிறு திருப்பலியில் பக்தியோடு பங்கு கொள்வோம்.

முதல் வாசக முன்னுரை

இயேசுவின் உயிர்ப்புக்கு அவரது சீடர்களே சாட்சி. ஏனெனில், ‘அனைவருக்கும் அல்ல; தெரிந்துகொள்ளப்பட்ட அவர்களுக்கே அவர் காட்சியளித்தார்’ என்றுரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நாம் அனைவரும் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்கள். அதனால் மேலுலகு சார்ந்தவற்றையே நாட வேண்டும். ஏனெனில், கிறிஸ்து மேலுலகைச் சார்ந்தவர் என்றுரைக்கும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

எங்களுக்கு உயிரளிப்பவரே! பாஸ்கா காலத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் உமது திரு அவையும், அதன் திருப்பணியாளர்களும் உம் திருமகன் இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்புச் செய்திக்குச் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்களை வழிநடத்துபவரே! இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், போரினால் அமைதியைக் குலைக்கும் நாடுகள், அமைதியை விரும்பி அரவணைத்து வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்களைக் காப்பவரே! உமது திருமகனின் உயிர்ப்புப் பெருவிழாவினால், நாங்கள் அனைவரும் வேற்றுமைகளைக் களைந்து, ஒரே குடும்பமாய், ஒரே மந்தையின் ஆடுகளாய் வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

எங்களைத் தாங்கிச் சுமப்பவரே! இன்று திருமுழுக்கு அருளடையாளத்தைப் புதுப்பித்துக் கொண்ட நாங்கள், அதற்கேற்றவாறு வாழவும், எங்கள் குழந்தைகளை அவ்வாறே வளர்த்திடவும் இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment