03 நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு)
ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு-இச 6:2-6; எபி 7:23-28 மாற்கு 12:28-34
திருப்பலி முன்னுரை
மனித குலத்தை அன்புதான் ஆள்கிறது. ‘எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது’ என்கிறார் காந்தியடிகள். முழுமையான அன்பு இல்லையேல், முழுமையான அழகு இருக்க முடியாது. அழகு முழுமையாக இல்லாத இடத்தில் முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது. வாழ்க்கை என்பது அழகானது, அற்புதமானது. அப்படிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதுதான் இறைவிருப்பமாக உள்ளது. சமூகத்தில் அன்பிழந்து வாழ்ந்த சமாரியர்தான் அடிபட்டு காயத்தோடு இருந்தவருக்கு உதவி செய்தார். சட்டத்தின்படி தண்டிக்க வேண்டுமென்று விபச்சாரப் பெண்ணைச் சுற்றிக் கற்களோடு இருந்த கூட்டத்தில், அன்போடு மன்னித்த இயேசுவின் அன்பு மிகப்பெரியது. அப்படிப்பட்ட அன்பின் கட்டளைகளோடு வாழ இறைவன் அழைப்புக் கொடுக்கின்றார். பலவிதமான சட்டங்களைச் சொல்லி நம்மைக் குழப்பாமல், இரு பொன்னான சட்டங்களைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றார். இறைவனை அன்பு செய்வது, அடுத்திருப்பவரை அன்பு செய்வது என்று அனைத்துக் கட்டளைகளையும் இவ்விரு கட்டளைகளில் சுருக்கியுள்ளார். எனவே, இறைவனுக்குச் செலுத்தும் பலியைவிட அன்பே மிகச் சிறந்தது. எனவே, இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை அன்போடும் மகிழ்வோடும் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக முன்னுரை
இறைநம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் நமக்குத் துணையாக இருப்பவை கட்டளைகள். இக்கட்டளைகள் நமக்கு நன்மை செய்யவும், இறைத்திட்டத்தை நிறைவேற்றவும், இறைவனின் மக்களாக நீண்ட காலம் வாழவும் துணைபுரிகின்றது. கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் கற்பிக்கவும் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இறைக்கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாக இறைவனை அன்பு செய்ய முடியும் என எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக முன்னுரை
குருத்துவப் பணிபுரியும் குருக்கள் நிலையற்றவர்கள். அவர்களும் இறந்துபோகக் கூடியவர்கள். நிலையற்ற குருக்களின் மத்தியில், நிலையான நிறைவான தலைமைக்குரு இயேசு ஆண்டவர் மற்றத் தலைமைக்குருவைவிட, மேலான தலைமைக்குருவாகத் திகழ்கின்றார். தம்முடைய ஒரே பலியின் வழியாக, மக்களைப் பாவங்களிலிருந்து மீட்டார் என இயேசுவின் தியாக அன்பை எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம்முடைய பிள்ளையாகிய நாங்கள், உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து என்றும் மகிழ்வோடும், நிறைவோடும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அமைதியின் தெய்வமே என் ஆண்டவரே! இவ்வுலகத்தில் நடைபெறும் போர்கள் நீங்கி, நீர் தந்த நிலையான நிறைவான அமைதியில் வாழ அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. உழைப்பின் மேன்மையை எங்களுக்குக் கற்றுத்தந்த இறைவா! எம் குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைப்பவர்களுக்கு உடல், உள்ள வலிமையைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. உன்னை அன்பு செய்வதுபோல பிறரையும் அன்பு செய்ய வேண்டுமென்று கட்டளையிட்ட ஆண்டவரே! வலியோடும் வேதனையோடும் துன்பத்திலிருக்கும் மக்களை அன்பு செய்து வாழ, வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Comment