‘திராவிடம்’ குறித்த அவதூறுகள்:
‘ஆரியக்’ கூத்தாடும் ஆளுநர்!
2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-லிருந்து தமிழ்நாட்டு அரசியல் மேடையில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் இரவீந்தர நாராயண இரவி எனப்படும் தமிழ்நாடு ஆளுநர் R.N. இரவி. ‘பாவம்’ என்று இவர்மீது பரிதாபப்படுவதா, இல்லை... ‘ஏன் இப்படிச் செய்கிறார்?’ என்று இவர்மீது கோபப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.
ஒரு பொம்மை வேகமாக இயங்குவதற்குத் தொடர்ந்து சாவி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு சாவி கொடுக்கப்பட்டவுடன் பொம்மை அதிவேகமாக இயங்கும்; அதன் பிறகு சற்றே மெதுவாக நிலைத்தன்மை அடையும். அது மீண்டும் சாவி கொடுக்கப்பட்டவுடன் வேகமாக இயங்கத் தொடங்கும். இதுவே தொடர்கதையாகும். அவ்வப்போது டெல்லி சென்று வரும் ஆளுநரின் கதையும் அப்படியாகத்தான் இருக்கிறது.
சிலருக்கு ‘தொட்டதெல்லாம் துலங்கும்’ என்பார்கள். பாவம், இவருக்குத் தொட்டதெல்லாம் தொடக்கத்திலிருந்தே சர்ச்சையாக வெடிக்கிறது. திருவிளையாடலில் வரும் தர்க்கக் காட்சியில் தருமி கேட்கும் ‘சேர்ந்தே இருப்பது?’ என்ற கேள்விக்கு இன்றைய நவீன விடையாக ‘ஆளுநரும் - சர்ச்சைகளும்’ என்றுதான் பதில்கூற வேண்டியிருக்கிறது.
சென்னை, தூர்தர்ஷன் (டிடி தமிழ்) தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற ‘இந்தி மாதக் கொண்டாட்டம்’ நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆளுநர் அண்மையில் கலந்துகொண்டபோது, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டது தற்போது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் இருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆளுநரைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.
‘திராவிடம்’ என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாகப் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பன திராவிட மொழிகளின் குடும்பம் என்பதும் ஆய்வுப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட பேருண்மை. திராவிட மொழிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட இராபர்ட் கால்டுவெல், ‘திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்’ (Comparative grammar of the Dravidian or South Indian family of languages) என்னும் தனது நூலில் குறிப்பிடும் வரலாற்றுப் பதிவு இது. 1856-இல் இந்நூல் வெளியிடப்பட்ட பின்னரே இச்சொல் பரவலாகத் திராவிட இனக் குடும்பத்தை ஆழமாகக் குறிப்பிடத் தொடங்குகிறது என்கிறார்கள் மொழி வல்லுநர்கள்.
தென்னிந்தியாவில் பேசப்படும் இந்தத் திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தவிர்த்த ஏனைய மொழிகள் பெருமளவு வடமொழிச் சொல் கலப்பிற்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. ஆயினும், தமிழ் மட்டுமே திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்றும் இருந்து வருகிறது. தனித்து நின்று வளம் சேர்க்கும் இத்தாய்மொழி, செம்மொழியாக உயர்ந்திருப்பது இதன் பெரும் அடையாளம்.
‘திராவிடர்’ என்னும் சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும் சொல்லாடலாகும். இந்திய மண்ணில் வடக்கே வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுடன் அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லாத மொழிக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படுவதை மொழி வல்லுநர்கள் கண்டறிந்தார்கள். அடிப்படையில் தனி இனமாக உருவெடுத்த அந்த இனத்தை ‘திராவிடர்’ என அடையாளப்படுத்தினர். ஆதிக் குடிகளாக அவர்கள் அறியப்பட்டார்கள். ஆகவே, ‘திராவிடம்’ என்ற சொல் ஆதித் தமிழ் குடியின் அடையாளம்; இது கூட்டுக் குடும்பத்தின் அடையாளம். தமிழ் மொழி தன் குழந்தைகளை வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டதன் பெரும் அடையாளம்-திராவிடம்.
தமிழ்நாட்டு மண்ணில் தனித்தமிழ் இயக்கங்கள் பல தோன்றினாலும், திராவிடக் குடும்பத்தின் பண்பாடும், கலாச்சாரமும், மொழி ஒற்றுமையும் இம்மண்ணில் உயர்ந்தே நிற்கிறது. ‘திராவிடம்’ என்ற சொல்லாடலையும், கால்டுவெல் என்னும் மொழிப் புலமைகொண்ட ஆளுமையையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆரியமும், ஆரிய சித்தாந்தம் கொண்டவர்களும் திராவிடக் கருத்தியலைச் சிதைக்க மேற்கொண்ட போராட்டங்கள் நேற்று இன்று அல்ல; இது வரலாறு கண்ட நிகழ்வு. தமிழ் நாட்டின் ஆளுநர் அதன் நீட்சியாகவே இன்று நிற்கிறார். ஒன்றிய அரசுக்குக் கீழ் செயல்படும் நிர்வாக அதிகாரியான இவர், தன் எஜமான் இட்டக் கட்டளையைக் கருத்தாய்ச் செய்து வருகிறார்.
தமிழ்நாடு அரசு விழாக்களில் பிற மொழிப் பாடல்களைத் தவிர்க்கும் வகையிலும், சமயச் சார்பற்ற அரசின் நோக்கிற்கு ஏற்ப சமயச் சார்பினைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ் வாழ்த்துப் பாடல் ஒன்றினை அறிமுகப்படுத்த அண்ணா விரும்பினார். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த தமிழறிஞர் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய ‘மனோன்மணியம்’ என்னும் நாடக நூலில் அமைந்த ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், கரந்தை கவியரசுவின் ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்னும் பாடலும் பரிந்துரை செய்யப்பட்டபோது, ‘நீராரும் கடலுடுத்த’ என்னும் பாடல் தேர்வு செய்யப்பட்டு, அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு 1970, மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் இப்பாடல் பாடப்பட்டு, ‘இனிமேல் அரசு விழாக்களில் பாட வேண்டும்’ என அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது. பின்பு 1970, ஜூன் 17 அன்று அது அரசாணையாக வெளியிடப்பட்டு, நவம்பர் 23 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பாடலுக்கு அழகுற இசை அமைத்துப் பெருமை சேர்த்தவர் இசை மாமேதை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஆட்சி அமைந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அரசு விழாக்களிலும், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விழாக்களிலும் பாடப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்த இப்பாடலை 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநிலப் பாடலாக அறிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.
மாநிலப் பாடல் என்பது தேசிய கீதத்திற்குச் சமமாக, சிறப்பும் மதிப்பும் வாய்ந்தது. மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து சாதி, சமய வேறுபாடு இன்றி மக்களை ஒன்றுபடுத்துவதில் மாநிலப் பாடல்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆயினும், உலகெங்கும் வாழும் தமிழரின் அடையாளமாகவும், பெருமையாகவும் பேசப்படும் இப்பாடல் அவ்வப்போது ஆரிய சித்தாந்தத்தால் சீண்டப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புனித தேவசகாயம் அவர்கள் 2022 -ஆம் ஆண்டு மே 15 -ஆம் நாள் புனிதராக உயர்த்தப்பட்ட திருச்சடங்கில் உரோமையில் உலகளாவிய கத்தோலிக்கத் திரு அவையின் முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது நமக்குப் பெருமை. ஆயினும், 2018 -ஆம் ஆண்டு ஜனவரி 24 -ஆம் நாள் சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததும் காட்சியானது; இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அவ்வாறே ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். தமிழ்நாட்டையும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆளுநரின் ஒவ்வொரு சர்ச்சைக்குப் பிறகும் அந்தக் கருப்பொருள் மிகப்பெரும் அளவில் பேசு பொருளாக இருப்பது கண்கூடாகிறது. இதுவும் அப்படித்தான். கடந்த சில நாள்களாகத் தமிழ்த்தாய் வாழ்த்து உலகமெங்கும் மீண்டும் மீண்டும் பாடப்படுவதும், பகிரப்படுவதும் இப்பாடலின் மேன்மையை இன்னும் உரக்கச் சொல்கிறது. ஆரியப் படையில் பல இரவிக்கள் வந்தாலும், மொழி-அடையாள விமர்சனங்கள் தந்தாலும் தமிழும் தமிழினமும் ஒருபோதும் தாளாது; என்றும் வீழாது!
இவ்வேளையில்,
‘எழுத்தும் நீயே, சொல்லும் நீயே!
பொருளும் நீயே, பொற்றமிழ் தாயே!
அகமும் நீயே, புறமும் நீயே!
முகமும் நீயே, முத்தமிழ் தாயே!
உனக்கு வணக்கம் தாயே,
என்னை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!’
என்னும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர்
Comment