GDP யும் BJP யும்
- Author குடந்தை ஞானி --
- Monday, 11 Jan, 2021
இரண்டாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே போடுகிற ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதுவும் பெரும்பான்மையோடு இரு அவைகளிலும் கோலேச்ச தொடங்கிய நாள்முதல் வாய்ஜவுடால் விடுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களேதான். அதுவும் இந்தக் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் தேசமே லாக்டவுனால் முடங்கி போயிருக்கிற வேளையில் இரவோடு இரவாக திட்டங்களை அறிவிப்பதும் காதோடு காது வைத்த மாதிரி பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குவதும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் சட்டங்களை அறிவிப்பதும் இந்தி-சமஸ்கிருதத்தைத் திணிப்பதும் ஒரே நாடு-ஒரே கொள்கை என்று பிதற்றுவதும் தொலைக் காட்சிகளில் திடீரென்று தோன்றி எதையாவது அறிவிப்பதும் .. அப்பப்பா அவர்களின் அன்றாட அட்டகாசம் சொல்லி மாளாது.
பதவியேற்ற சில வாரங்களில் அவர்கள்முன்வைத்த கோஷங்களில் ஒன்று ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம்...இதுதான் பிரதமரின் கனவு. இந்தியாவே வாய் பிளந்தது. மேக் இன் இந்தியாவிலிருந்து மேக் ஃபார் த வேல்ர்ட்.. அட இது புதுசா இருக்கே.. கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் வந்துள்ள இந்தச் செய்தி இடி போன்று இறங்கியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்ற ஜி.டி.பி "மைனஸ் 23.9" சதவீதம் சரிந்துள்ளது. இந்தியர்களின் கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டுள்ளது. பிரிட்டன் மைனஸ் 20, பிரான்ஸ் மைனஸ் 13.8, இத்தாலி மைனஸ் 12.4, கனடா மைனஸ் 12, ஜெர்மனி மைனஸ் 10.1 அமெரிக்கா மைனஸ் 9.5, ஜப்பான் 7.6 என்று சீனாவைத் தவிர அனைத்து ஜி7 நாடுகளின் பொருளாதாரமும் கிடுகிடுத்து போயுள்ளது. ஏறக்குறைய ஐந்து மாதங்களாக நாடே ஊரடங்கால் முடக்கப்பட்டபோதும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. லாக்டவுன் அறிவிப்பால் மட்டுமே இந்திய பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாட்டின் பொருளாதாரம் அதாளப் பாதாளத்தைப் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் மிக எளிதாக பொருளாதார வீழ்ச்சிக்கான ஒட்டுமாத்த காரணத்தையும் கொரோனாவின் தலைமேல் தூக்கிவைத்துவிட்டு வசதியாக தப்பித்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான மக்கள் அன்றாட மூன்று வேளை உணவுக்கு கையேந்தும் நிலையில் மயிலுக்கு உணவூட்டுவதிலும், தொலைக்காட்சிக்கு போஸ் கொடுப்பதிலும் ராஜபாளையம்-சிப்பிப்பாறை நாயை வளர்க்கச் சொல்லி தஞ்சாவூர் பொம்மையைப் போல தலையாட்டச் சொல்லி எழுச்சி உரை ஆற்றிக் கொண்டிருக்கிறார் இந்திய பிரதமர். மனதின் குரலில் மக்களின் குரலை பாரதப் பிரதமர் எதிரொலிப்பதில்லை.
ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 350 லட்சம் கோடி ரூபாய்…. இது விரலுக்கேத்த வீக்கம் அல்ல. கூரையேறி கோழி பிடிக்க முடியவில்லையாம்.. ஆனால் வானம் ஏறி வைகுந்தம் போகப் போகிறார் களாம். இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களை ஆன்டி இந்தியன்கள் என்று முத்திரைக் குத்துவதும் சீனாவிடம் விலைபோனவர்கள், பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்று கிண்டலடிப்பதும் இவர் களின் வாடிக்கை. பேசுவதில் கில்லாடியான பிரதமர், "இதற்கு துணிச்சலும் புதிய சாத்தியக் கூறுகளும் வளர்ச்சிக்காக தியாகம் செய்யக்கூடிய குணமும் இருக்க வேண்டும். இவை இருந்தால் ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் என்று கனவை நனவாக்க முடியும்" என்றார். எங்கே அந்த துணிச்சல்? எங்கே அந்தத் தியாகம்? எங்கே அதற்கான சாத்திக் கூறுகள்?
கொரோனோ வந்ததும் போதும் உடனே பாஜகவின் அனாமத்து கணக்கில் வரவு வைத்து, 20 லட்சம் கோடி அளவிற்கு திட்டங்களை ஏட்டுச் சுரைக்காய் கணக்காக அறிவித்து மகிழ்ந்தனர். இன்று பொருளாதார நிபுணர்கள் ஏன் இந்திய பொருளாதாரம் இப்படி அதாளப் பாதாளத்தில் சரிந்தது என்றால் ‘எல்லாம் கடவுளின் செயல்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வனவாசம் போகிறார். எடப்பாடியார், ராஜேந்திர பாலாஜி ஃபார்முலாவைப் பயன்படுத்தி கடவுள்மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்கிறார்.
கடந்த நான்கு மாத லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா காரணம் என்றால் இதற்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம்? என்ற முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் கேள்விக்கு அமைதி மட்டுமே இங்கு பதிலாகிறது. அடி மேல் அடியாக, பணமதிப்பிழப்பால் ஒரே இரவில் தெருவுக்கு வந்த எங்களை, ஜி.எஸ்.டி என்ற பெயரில் கொள்ளையடித்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல மேலேழும்பி வரும் இவ்வேளையில் கொரோனா வந்து, சிறுதொழில், பெருநிறுவனங்கள், குடிசைத்தொழில்கள் என அனைத்தையும் சூறையாடி கபளிகரம் செய்துவிட்டது. மக்களின் கோபம் தங்கள் மீது திரும்பி விடாத படி, இந்தியா-சீன எல்லையில் போர் பதற்றத்தை உருவாக்கி, பெரிதுபடுத்தி, தேசப்பற்று என்ற பெயரில் தேசத்தை நாசம் செய்கின்றனர்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் புலம்பல் களும் அன்றாடக் கூலிகளின் ஓலங்களும் வேலையிழந்த 12 கோடி பட்டதாரிகளின் ஒப்பாரிகளும் கெரோனாவுக்கு விளக்கணைத்து, அடித்த மணியொலியில் கேட்க வில்லை. மாநிலங்களின் பொருளாதாரம் ஜி.எஸ்.டி அமுல்படுத்தப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் குறைந்துவிட்டது; எங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையையும் ஜி.எஸ்.டி இழப்பிட்டு நிலுவைத்தொகையையும் தாருங்கள் என்று கேட்டால் மத்திய நிதி அமைச்சரோ, ரொம்ப கூலாக, "மத்திய அரசிடம் பணமில்லை" என்று கையை விரிக்கிறார். வேண்டுமானால் ரிசர்வ் வங்கியிடம் வட்டிக்கு கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார்.
இவர்கள் ஏற்கெனவே ரிசர்வ் வங்கியின் கஜானாவிலிருந்து 176000 கோடியை எடுத்துக் கொண்டதைமறந்துவிட்டனர் போலும். அம்பானிகளையும் அதானிகளையும் வளர்ப்பதும் மோடிக்களையும் மல்லை யாக்களையும் கடன் வாங்கிக் கொண்டு நாட்டைவிட்டு ஓட அனுமதித்தும் தங்கள் கேர் ஃபண்டுக்கு போதுமான பணம் வந்தால் போதும் என்று அரசு இருக்கும் வரை, நாட்டின் பொருளாதாரம் மட்டுமல்ல, அனைத்து துறைகளும் அழிவில் விளிம்பில்தான் இருக்கும்.
பா.ஜ.க. அரசு அதிகம் உதவி செய்யாத விவசாயத் துறை மட்டுமே, இக்கொரோனா காலத்தில் நம்பிக்கைத்தரும் விதமாக வளர்ந்து ஜி.டி.பி. விகிதம் மேலும் மைனஸ்-இல் குறையாமல் தாங்கி பிடித்து நிற்கிறது.
உற்பத்தி முடக்கம், தேவையில் சரிவு, வேலைவாய்ப் பின்மை, முதலீடுகள் இல்லை. இதற்கு கொரோனா மட்டுமே காரணமில்லை.. பாஜகவும் அதன் தவறான பொருளாதார கொள்கையும்தான் காரணம். கைலாசா நாட்டின் அதிபர் நித்தியானந்தாவுக்கு தெரிந்த பொருளாதார அறிவுகூட உங்களுக்கு இல்லையா? ‘கடவுளின் செயல்’ என்று தப்பிக்க வேண்டாம்.
Comment