No icon

பாஜகவின் தொலை(ந்த) நோக்கும் கலைந்த கனவும் - 11.04.2021

பாஜகவின் தொலை(ந்த) நோக்கும் கலைந்த கனவும்
ஒவ்வொருமுறையும் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ ((#GoBackModi)  என்று தமிழக அளவிலும் இந்திய அளவிலும் ஏன் உலக அளவிலும் டுவிட்டரில் கோடி கணக்கில் டிரெண்ட் ஆக்கி தெறிக்கவிட்டாலும் திருந்தாத இந்த அக்ரஹாரத்து ஆத்துமாக்கள் இந்த 16வது சட்டப் பேரவைத் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை "தொலைநோக்கு பத்திரம்" என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள். இருபது தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டு தமிழர்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்ட இவர்கள் திருந்துவதாக இல்லை. காந்தி மேஜையில் உள்ள மூன்று பொம்மைகளைப்போல பார்க்கக்கூடாத, கேட்கக்கூடாத, பேசக்கூடாத மூன்று பொம்மைகளாக மூவர் அந்த அட்டைப்படத்தில் இருக்கின்றனர். பெரியாரின் தடி, தமிழகத்தில் ‘ஊருக்கு ஊர்’  ஊன்றப்பட்டுள்ள நிலையில், மக்களின் விருப்பமறியும் பயணத்தின் மூலம் ‘உங்கள் விருப்பம் எங்கள் அறிக்கை’ என்று இந்தத் தேர்தல் அறிக்கைக்கு எல். முருகன் சப்பைக்கட்டு கட்டுகிறார். இதன் தயாரிப்புக் குழுவில் எச். ராஜா. சசிகலா புஷ்பா, அண்ணாமலை  IPS என்று பத்து பேர் இடம்பெற்றுள்ளனர். 
உயர்நீதிமன்றத்தையே தலைமுடிக்கு நிகராக மதிப்பவர்கள், தமிழர்களையும் அப்படித்தான் மதிக்கிறார்கள் என்பதற்கு அத்தாட்சிப் பத்திரம்தான் இந்த தொலை(ந்த) நோக்கு பத்திரம். மதவாத அரசியலைக் கையிலெடுக்கும் இவர்கள், தங்களின் பெரும்பான்மைவாத திமிரை முடிந்தவரை ஒவ்வொரு காவி பக்கத்திலும் காட்டியிருக்கிறார்கள். எல். முருகன் மத்திய அரசின் பட்டியலின சாதிகளின் ஆணையத் தலைவராக (National Commission for Scheduled Castes – NCSC) இருந்தபோது, மீட்க முடியாத 12 இலட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்கப் போவதாக, இந்தப் பத்திரத்தில் கதை அளக்கிறார். 
விக்கிரகங்களையும் பழம் பெரும் சிலைகளையும் கோயில் நகைகளையும் கொள்ளையடிக்கும் குருக்கள் ஐயர்களைப் பற்றி கவலைப்படாத இவர்கள், ஆடு நனைகிறது என்று அழும் ஓநாய்களைப் போல, ஜக்கியின் குரலை உயர்த்தி, ஹிந்து கோவில்களின் நிர்வாகத்தை ஆன்றோர் - சான்றோர் - துறவிகள் வாரியத்திடம் ஒப்படைப்போம் என்று ஒப்பாரி வைக்கின்றனர். 
கடலோர பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்து, அதானிகளையும் அம்பானிகளையும் துறைமுகம் கட்ட சொல்லும் இவர்கள் மீனவர் நலன்களைப் பற்றி பேசுகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் இவர்கள், மீனவர்களை கடல்சார் பழங்குடிகளாக, (படுகர் இன மக்களை மலைவாழ் மக்களாக) அறிவித்து இட ஒதுக்கீடு வழங்கவும் கடல் எல்லையை உணர்த்த அடையாள மிதவைகள் போடவும் யார் அவர்களைத் தடுத்தார்கள்? பக்கத்தை நிரப்புவதற்காக இப்படிப்பட்ட வாக்குறுதிகள் இங்கு உண்டு. 
திராவிடர் என்ற வார்த்தையைக் கண்டாலே பயப்படும் இவர்கள், ஆதி திராவிடர் நலத்துறை என்பதை "பட்டியலின மக்கள் நல் வாழ்வுத் துறை" என்று மாற்றுகிறார்களாம். ‘சாதிகளே இல்லை!’ என்று இவர்கள் ஒருபோதும் சொல்லமாட்டார்கள். எதற்கெடுத்தாலும் ‘சாதி - சாதி’ என்று குதிக்கும் இவர்கள், சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஆதரிக்காமல் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டையே இதில் தூக்கிப் பிடிக்கிறார்கள். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் இவர்களின் குணம் நன்கு தெரிகிறது. 
வெளி    மாநிலங்களிலிருந்து இங்கு வந்து பிழைக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான குடியிருப்பு வசதிகள் செய்து தர முன்வரும் இவர்கள், பாஜக ஆளும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நம் தமிழர்களுக்கு இதே போன்ற வாக்குறுதியை தருவதில்லை. தமிழர்கள் தலையில் மிளகாய் அரைப்பதுதான் இவர்களின் பூர்வீகத் தொழிலாகும். எனவேதான் வாக்கு வங்கிக்காக இவர்கள் இந்தப் பித்தலாட்டம் செய்கிறார்கள்.
கல்வி என்ற தலைப்பில் இந்து ஆன்மிக நூல்களைச் சேர்ப்பதும், இந்தியைத் திணிப்பதும், தேர்வைத் திணிப்பதும் யோகாசனம், தியான வகுப்புகள் என்று பள்ளிக்கும் பள்ளிக் கல்விக்கும் காவியடிக்கிறார்கள். எய்ம்ஸ் என்ற பெயரில் ஒற்றைச் செங்கல்லை நட்டுவைத்த இவர்கள், இந்தத் தேர்தல் அறிக்கையில் மக்கள் நல் வாழ்வு என்ற தலைப்பில், இந்தியாவிலேயே சிறந்த சுகாதார அமைப்புக் கொண்ட நம் தமிழகத்திற்கு டெலி மெடிசின் முறையில் ‘E’ சிகிச்சை அளிக்கிறார்களாம். கோயம்புத்தூர், தாராபுரம், பழனி, கன்னியாகுமரி என்று இப்பகுதிகளை மட்டுமே இந்த அறிக்கையில் எதற்கெடுத்தாலும் குறிப்பிட்டு குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். 
பெரியார் பூமியில் மீண்டும் மதமாற்ற தடைச்சட்டம், பசுவதைத் தடைச் சட்டம், கோசாலை என்று ‘கோமியக்குடிகளாகவே’ தங்களை இந்தப் பத்திரத்தில் பதிந்துள்ளனர். கோயில் நிலங்களை பிற மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குத்தகைக்கு விடக்கூடாது என்று இவர்கள் இந்து ஆலயங்களையும் அதன் நிலங்களையும் பட்டா போட்டுக்கொள்ள முயற்சிக்கிறார்கள்; கடவுளுக்கே இது பொறுக்காது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இருக்க ஆதரவு தராத இவர்கள், ஆலயங்களில் சமய வகுப்பெடுத்து, ஆர்எஸ்எஸ் ஷாகா வளர்க்க முயல்கின்றனர். கங்கை கரையில் திருவள்ளுவர் சிலையை குப்புற போட்ட இவர்கள், நம்பியூரில் ‘திருக்குறள் மாமலை பூங்கா’ என்று நம் காதில் பூ சுத்துகின்றனர். சிஏஏ சட்டம் மூலம் பாகிஸ்தான், பங்காளதேஷ் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கி அழகுப் பார்க்கும் இவர்கள், இலங்கையிலிருந்து இந்தியாவில் தஞ்சைமடைந்துள்ள இந்துக்கள் உட்பட அனைத்து தமிழர்களையும் முகாம்களில் முடக்கி, திக்குமுக்காடச் செய்யும் இவர்கள், இந்தியக் குடியுரிமைக்கு பரிந்துரை செய்வதாக ‘பம்மாத்து’ காட்டுகிறார்கள். 
இந்த அறிக்கையில், பத்து பிரிவுகளில் மத்தியில் ஆளும் இவர்களால் செய்ய முடியும் என்று சொல்லப்படும் அனைத்து வாக்குறுதிகளையும் பரிந்துரை செய்யப்படும் என்று தப்பித்துக் கொண்டும், முழுக்க முழுக்க மதவெறி கொண்டும், மதவாத அரசியலை கையிலெடுத்தும், சிறுபான்மையினரை வெறுத்தும், தமிழர்களைப் புறக்கணித்தும் முப்பத்து இரண்டு பக்கங்களில் தமிழர்தம் தலைகளில் குப்பையைக் கொட்டியுள்ளனர். தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இவர்கள் உருவாக்கியுள்ள அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே இந்த தொலைநோக்கு பத்திரமே ‘வேட்டு’ வைத்துள்ளது. மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுகவே தம் தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்றபோதே பாஜக தன் பிரம்பை வெளியே எடுத்துவிட்டது நாம் அறிந்த ஒன்றுதான். 
பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கையால், அதன் கூட்டணி கட்சிகளுக்கு விழும் வாக்குகள்கூட விழாத பரிதாப நிலைதான். பாஜக தமிழகத்தில் ஓரிடத்தில்கூட வெல்லாமல் மண்ணைக் கவ்வும் என்பதை மே 2 எண்பிக்கும். இந்தப் பசுத்தோல் போர்த்திய புலி, நேரத்திற்கும் மாநிலத்திற்கும் ஏற்றார் போல் வேடம் போடும். 
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசைப் போல என்று பினராயைப் பற்றி கேரளாவில் பிதற்றும். மேற்கு வங்கத்தில் மம்தாவின் ரப்பர் செருப்பு அணிந்த காலை ஒடிக்கும். இந்த தொலை(ந்த) நோக்கின் பகற்கனவு, மே 2 ஆம் தேதி கலைந்துவிடும். தமிழகத்தில் தாமரை மலர்வது இன்று மட்டுமல்ல.. என்றும் கடினம்தான். 
‘கோ பேக் மோடி’ என்பதைவிட ‘கோ பேக் பாஜக!’ என்றுதான் தமிழர்கள் படையெடுக்க வேண்டும். ‘கறுப்பு’ என்பது அனைத்து வண்ணங்களில் கூட்டாகும். ஆகையால் கறுப்புக்குள் காவி அடங்கும். காவிக்குள் இந்தக் கறுப்பு ஒருபோதும் அடங்காது. 
‘மோடியின் ஆதரவுப் பெற்ற வேட்பாளர்’ என்று பாஜக வேட்பாளர்களே சுவர் விளம்பர செய்ய இயலாத பூமிதான் இந்தத் தமிழர்-பூமி. 
‘மோடி எங்கள் டாடி’ என்ற அமைச்சரே,  ஐயோ! ஐயோ! கோ பேக் மோடி என்று கெஞ்சுவதுதான் எங்கள் வெற்றி! வாக்காளர்களின் வெற்றி!
காவிக்குள் இந்தக் கறுப்பு ஒருபோதும் அடங்காது.

Comment