No icon

நாய் பெற்ற தெங்கம் பழம் போல... - 02.05.2021

நாய் பெற்ற தெங்கம் பழம் போல...
நாட்டைவிட மதம் தான் பெரிது என்று மோடியின் தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை நம்மால் அடுக்கி வைக்க முடியும். இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த 2020 ஆண்டு பரவுவதற்கு, டெல்லி தப்லிஜமாத்தான் காரணம் என்று மத ரீதியாக கொரோனா பரவலுக்கு குற்றம் சுமத்தியவர்கள் கொரோனாவின் இந்த இரண்டாம் அலைக்கு ஹரித்துவாரின் கும்பமேளாதான் காரணம் என்று தங்களுக்குத் தாங்களே குற்றம் சுமத்திக்கொள்வதில்லை. முதல் அலையின்போது, மணி அடியுங்கள்; விளக்கேற்றுங்கள்; கரண்டி-தட்டை எடுத்துக்கொண்டு கோ கொரோனா கோ என்று ஊர்வலம் போங்கள்; கோமியம் குடியுங்கள்; அப்பளம் நொறுக்குங்கள் என்று சக்திமான் ரீதியில் யாகம் புரிந்தவர்கள், தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் எதைப்பற்றியும் கவலைப்படுவதேயில்லை.
ஐந்து மாநிலத் தேர்தல்தான் முக்கியம் என்று, இன்னும் குறிப்பாக, மேற்கு வங்கமே கதி என்று கட்சி வளர்க்கிறார்கள். நாட்டைவிட மதமே ரொம்ப முக்கியம் என்று செயல்படும் இவர்களின் தலைவர்கள் தற்போது கொரோனாவின் பிடியில் தள்ளாடுகிறார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத் தலைவர் மோகன் பகவத், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உத்திரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் என்று அடுத்தடுத்து கொரோனாவின் பிடியில்தான் போராடுகிறார்கள். மாடல் மாடல் என்று இவர்கள் முன்னிறுத்திய பாஜக ஆளும் குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களே கொரோனாவின் பிடியில் தள்ளாடுகின்றன. இந்தியாவின் தலைநகரான டெல்லியே திக்குமுக்காடி நிற்கிறது. மன்கிபாத்திற்கு காட்டும் அக்கறையை, பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு காட்டும் அக்கறையை தேசத்தைக் கட்டமைப்பதில் காட்டுவதில்லை. கேமராக்களுக்கு முன் மயிலுக்குத் தீனி வைத்து, திரைமறைவில் மக்களுக்கு விஷம் வைக்கின்றனர். 
உலகத்தின் ஒட்டுமொத்த தடுப்பூசித் தேவையில் 60 சதவீதத்தை உற்பத்தி செய்து, உலகின் தடுப்பூசி தலைநகரம் என்று பெயர் வாங்கியிருக்கும் இந்தியாவுக்கு பாஜக அரசால் உலக அளவில் தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. தடுப்பூசி ஒன்றுதான் கொரோனாவுக்குத் தீர்வாகும் என்பதை அறிந்த மோடியின் நண்பனாக இருந்த அதிபர் டிரம்ப்-ன் அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து 85 சதவீத உற்பத்தியை முன்பணம் செலுத்தி வாங்கிவிட்டன. உலக மக்கள் தொகையில் 14 சதவீதம் கொண்டுள்ள இந்நாடுகள் 85 சதவீதம் கொள்முதல் செய்துவிட்டன. 30 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்கா 60 கோடி தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவோ ஒருகோடியே பத்துலட்சம் தடுப்பூசிகளை மட்டுமே கொள்முதல் செய்திருந்தது. உலக அளவில் தனக்கான பிம்பத்தைப் பிரமாண்டப்படுத்தும் நோக்கில், கடையேழு வள்ளலாக, பல ஏழை நாடுகளுக்கு இலவசமாகவும் பணக்கார நாடுகளுக்கு குறைந்த விலைக்கும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து, இந்திய மக்களுக்கு மோடி பச்சைத் துரோகம் இழைத்துள்ளார். மார்ச் 24 ஆம் தேதி வரை 6.4 கோடி டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தன் தாதா மனப்பான்மையைக் காட்டியுள்ளார். எனக்கே காணோம்; அப்புறமென்ன தானம்?! அப்போது இந்தியாவில் போடப்பட்டது 5.2 கோடி டோஸ் தடுப்பூசிகள்தான். ஒரு சில மாநிலங்களில் சுடுகாடுகள் அணையாத நெருப்பாக இடைவிடாமல் எரிந்து கொண்டேயிருக்கின்றன. சுடுகாடுகளில் அடுத்தடுத்து சவக்குழிகள் தோண்டப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. பல மாநில அரசுகள் கொரோனா மரணத்திலும்கூட போலிக் கணக்கைக் காட்டி ஏமாற்றுகின்றன. எங்கும் நிலைமை கை மீறி சென்றுக்கொண்டேயிருக்கிறது. 
இந்தியா முழுக்க புனே சீரம் இன்ஸ்டியூட் (ஆக்ஸ்போர்டு) தயாரிப்பான கோவிஷீல்டு, ஹைதராபாத் பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள்தான் போடப்படுகின்றன. அண்மையில்தான் ரஷ்யாவின் ஸ்புட்னிக் அனுமதிக்கப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே மத்திய அரசு மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி தந்தது. பரிசோதனை முடிவுகள் சாதகமானபோதும் மக்களின் சந்தேகங்களைப் போக்கி தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க அரசு இயந்திரம் முயற்சிக்கவே இல்லை. தடுப்பூசி போட மக்களிடம் ஆர்வம் வந்த பிறகும், தடுப்பூசி உற்சவ் என்ற பெயரில் விழா எடுத்தாலும் எங்கும் ஸ்டாக் இல்லை என்றுதான் அறிவிப்புப் பலகை தொங்குகிறது. சுயசார்பு பாரதம் என்ற போர்வையில் வெளிநாட்டு தடுப்பூசி கம்பெனிகளுக்கு, ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அன்ட் ஜான்சன் கம்பெனிகளுக்கு அனுமதி தரப்படவில்லை. தானும் படுப்பதில்லை; தள்ளியும் படுப்பதில்லை என்ற அவலநிலை. வைக்கோல்போர் நாயைப் போலவே அரசும் அரசு இயந்திரமும் செயல்படுகின்றன. கடந்த நவம்பரில் புனே சீரம் இன்ஸ்டியூட்டிற்கு தகுந்த ஒப்பனையோடு பிரதமர் மோடி சென்றபோது, தடுப்பூசி உற்பத்தி செய்துவிட்டு அவற்றை வைப்பதற்கு இடமில்லாமல் தவித்தது அந்நிறுவனம். இந்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டு கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்த்தனர்; அவ்வப்போது தேவைப்படும் அளவுக்கு கொள்முதல் மட்டுமே செய்கிறது. (பீகார் தேர்தலில் தடுப்பூசி இலவசம் என்று வீண் ஜம்பம் வேறு) ஆலை விரிவாக்கத்திற்கு 3000 கோடி நிதியுதவியாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள். அதுவும் கைக்கூடவில்லை. மத்திய அரசின் பட்ஜெட்டில் 35000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் இந்த அவலநிலை. அரசின் தேவையை உணர்ந்து, இந்த நிறுவனங்கள் மருந்தை உற்பத்தி செய்ய இயலாத கையறுநிலை. சுய புத்தியாவது இருக்க வேண்டும்; அல்லது மற்றவர் சொல்வதையாவது கேட்க வேண்டும். எதிர்கட்சிகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யுங்கள் என்றால் உள்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சப்பைக்கட்டு கட்டுகிறார். மீறி வலியுறுத்தினால், வெளிநாட்டு கம்பெனிகளுக்காக ராகுல்காந்தி பரிந்து பேசுகிறார் என்று ஆன்டி இந்தியன் தொனியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் தருகிறார். 
கனடா தன் மக்கள் தொகையைவிட எட்டு மடங்கும், பிரிட்டன் ஏழு மடங்கும், நியூசிலாந்து ஆறரை மடங்கும் அதிக தடுப்பூசிகளுக்குப் பணம் அட்வான்சாக செலுத்தியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்சார்பு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவாக்சின் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி டோஸ்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். இதனை உற்பத்தி செய்யும் பயோடெக் கம்பெனியின் விரிவாக்கத்திற்கு இப்போதுதான் மத்திய அரசு 265 கோடி ஒதுக்கியுள்ளது. இவர்கள் திட்டமிட்டபடி உற்பத்தியை அதிகரிக்க ஆகஸ்ட் ஆகிவிடும்.  மும்பை, ஹைதராபாத், புலந்த்சாஹர் ஆகிய இடங்களில் உள்ள பொதுத்துறை மருந்து நிறுவனங்களும் உறக்க நிலையிலேயே இருக்கின்றன. 
இஸ்ரேல் 62 சதவீத மக்களுக்கும், பிரிட்டன் 47.6 சதவீத மக்களுக்கும், அமெரிக்கா 37 சதவீத மக்களுக்கும் தடுப்பூசி போட்டுள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 7 சதவீதம் பேருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி வரியையும் ஜிஎஸ்டி வரியையும் வசூலிப்பதில் காட்டும் ஆர்வத்தை, தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்வதிலும் அவற்றை மக்களுக்கு செலுத்துவதிலும் மத்திய அரசு அக்கறை காட்டுவதில்லை. 
பற்றாக்குறை தடுப்பூசியில் மட்டுமில்லை; ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் மட்டுமல்ல. பாஜகவின் அரசின் நிர்வாகத்திலும்கூட. கொரோனாவுக்கு மட்டும் தடுப்பூசி தேவைப்படவில்லை. இவர்களுக்கும்தான் இந்தியாவில் தடுப்பூசி தேவைப்படுகிறது. 
நாய் பெற்ற தெங்கம் பழத்தால் பயனொன்றும் இல்லை. இரண்டுக்கும் தான்.  
கடவுள்தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்! ஆம். இந்தக் கொரோனாவிடமிருந்தும் .. இந்த பாஜகவிடமிருந்தும்...!

Comment