No icon

தலையங்கம் குடந்தை ஞானி ஒன்றிய அரசின் செங்கோன்மை?- 12.09.2021

தலையங்கம் குடந்தை ஞானி

ஒன்றிய அரசின் செங்கோன்மை?

ஒன்றிய பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற காலம் முதல், கடந்த ஏழு ஆண்டுகளில், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்புகளைச் சிதைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. வலது சாரிகொள்கைகளை ஆதரிப்பவர்களை பதவியிலும் பதவி உயர்விலும் ஆதரிக்கும் அதன் ஒரு தலைச் சார்பும் ஏதேச்சதிகாரப் போக்கும் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. குறிப்பாக நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதும் நீதிபதிகள் நியமனத்தில் குறுக்கிடுவதும் மிகவும் அதிகரித்து வருகிறது. தனக்கு ஆதரவான, தன் கொள்கைக்கு ஆதரவான, தன் முடிவுகளுக்கு ஏதுவான நீதிபதிகளை உச்சநீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றங்கள் வரை நியமிப்பதில் பாஜகவும் அதன் தந்தை அமைப்பான ஆர்எஸ்எஸ்ம் மிகவும் தீவிரமாக செயல்படுகின்றன. இன்னும் குறிப்பாக, சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த நீதிபதிகளை அவர்கள் புறக்கணிப்பதும் அவமானப்படுத்துவதும் அலட்சியப்படுத்துவதும் பாஜக ஆட்சியில் வெள்ளிடைமலை.

நடிகர் முதல் நீதிபதி வரை (சிறுபான்மையினருடைய) பெயரைக் கேட்டாலே வலது சாரிகளின் வயிற்றில் புளி கரைக்கிறது. ஜோசப் விஜய் என்றாலும் சரி; குரியன் ஜோசப், கே.எம்.ஜோசப் என்றாலும் சரி. கொலேஜியம் என்ற பெயரில் பரிந்துரை, மத்திய அரசின் பரிசீலனை என்ற பெயரில் கைவிடல் ஆகியன மதச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் விஷயத்தில் கண்கூடு. மிஸ்ரா, அகர்வால், குப்தா என்றால் கூடுதல் கவனிப்பு உண்டு. சாதிய ரீதியிலும் மத அடிப்படையிலும் நீதிபதிகள் நியமனம் என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. ஐஐடி முதல் உச்ச நீதிமன்றம் வரை பல்கலைக் கழகம் முதல் பணி நியமனம் வரை அனைத்திலும் சாதியும் மதமும் புகுந்து விளையாடுகிறது.

அம்பேத்கரியமும் பெரியாரியமும் பூலேயியமும் இன்னும் தீண்டத்தகாத கொள்கைகளாகவே உள்ளன. இட ஒதுக்கீடு கொள்கை வந்த நாள் முதலே வலது சாரிகளுக்கு அதனை வேரறுப்பதுதான் முதல் வேலையாக உள்ளது. தலித்துகளும் ஆதிவாசிகளும் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் உயர் பதவிகளில் அமரக் கூடாது என்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் ஆட்சியாளர்கள் துணையோடு செய்து முடிக்கிறார்கள். பொருளாதார இட ஒதுக்கீடு என்று புது ரூட் எடுப்பார்கள். அந்த வகையில்தான் நீதிபதிகள் நியமனத்திற்கென்ற ஏற்படுத்தப்பட்ட சப்பைக் கட்டுதான் கொலேஜியம். இதை அம்பேத்கர்வாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அது அரசியல் சாசனத்திற்கு, ஜனநாயகத்திற்கு, சமத்துவத்திற்கு, பன்மைத்துவத்திற்கு, நீதிக்கு, மக்களுக்கு எதிரானது என்பதை அவர்கள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். தலித் பழங்குடி நீதிபதிகளுக்கு வழியில்லாதபோது முஸ்லீம் கிறிஸ்தவ நீதிபதிகள் முன்னிலை வகிப்பது முயற்கொம்பே. இந்துத்துவம் படிப்படியாக அனைத்தையும் சூறையாடிக்கொண்டிருக்கிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு முதல் பசுமாடு தேசிய விலங்கு என அறிவிக்கும் பரிந்துரை வரை அனைத்தும் கண்கூடு. இந்துத்துவம் என்பது மதமன்று, மாறாக, வாழ்வியல் கோட்பாடு. ஆகையால் தேர்தலில் வாக்கு வேட்டைக்குப் பயன்படுத்தலாம் என்று 1995 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தபோதே நீதி என்பது தேய்பிறையானது. இன்று மாண்புமிகு நீதிபதிகளின் பரிபாலனம் என்பது வரையறைக்குட்பட்டதாகவே இருக்கிறது. பெரும்பான்மைவாதத்தை ஆதரிப்பவர்களையே பரிபாலனைக்குரிய அரியணையில் திணிப்பதை நாக்பூர் தலைமை தீர்மானிக்கிறது. கந்தமால் வழக்கு முதல் ஸ்டான் சுவாமி சம்பந்தப்பட்ட கோரேகான் வழக்கு வரை இதுதான் கதி. சில பதவிகளை மட்டுமல்ல; பல தீர்ப்புகளைநூல்களேதீர்மானிக்கின்றன. இந்திய அளவில் கீழமைவு நீதிமன்றங்களில் சராசரியாக 22 சதவீத நீதிபதி பதவிகள் நிரப்பப்படாமலே உள்ளன. பாட்னா உயர்நீதிமன்றத்தில் 62 சதவீதமும் கல்கத்தா நீதிமன்றத்தில் 60 சதவீதப் பதவிகளும் காலியாக உள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 இடங்களில் 26 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. கொலேஜியம் பரிந்துரைக்கும் பெயர்களை ஒன்றிய அரசு அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. மறு பரிசீலனைக்கு .. மறு மறு பரிசீலனைக்கு என்று திருப்பி அனுப்பி கண்ணாமூச்சி விளையாடுகிறது. நீதிமன்றத்தில் வழக்குகளை ஒதுக்குவதில்கூட பாகுபாடு உண்டு. அமித் ஷா சம்பந்தப்பட்ட வழக்கில் இறுதித்தீர்ப்பு சொல்ல காத்திருந்த நீதிபதி பி.எச்.லோயா அவர்களின் மர்ம மரணம் இன்று வரை முழுமையாக விசாரிக்கப்படவில்லை. ஜனவரி 12, 2018 நீதிபதி ஜஸ்தி சல்லமேஷ்வர் தலைமையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நான்கு நீதிபதிகள் தூக்கிய போர்க்கொடியே வெளியே தெரிந்த மூழ்கிய பனிமலையின் சிறுமுகடே. அப்படி புரட்சி செய்து, பின்னர் தலைமை நீதிபதியாகி, பணிப்பெண் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு, ஓய்வுக்குப் பிறகு, மாநிலங்களவை நியமன உறுப்பினராக உள்ள ரஞ்சன் கோகோய்க்குதான் வெளிச்சம். பெகாசஸ் ஒட்டுக்கேட்பில் இந்த நீதிபதிகளின் அலைபேசிகளும் தப்பவில்லை. வலதுசாரிகளுக்கு சாதகமான தீர்ப்புகளை வழங்கியவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்; எதிரானவர்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறார்கள்; அல்லது நிராகரிக்கப்படுகிறார்கள்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாவதற்கு அனைத்து தகுதிகளும் இருந்தும், கொலேஜியம் அவர் பெயரை பரிந்துரைத்தும் அண்மையில் அப்படி நிராகரிக்கப்பட்ட நீதிபதிதான் திரு. அப்துல் குரேஷி. பெயர் ஒன்றே ஆயிரம் காரணம் சொல்லும். குஜராத் கலவரம் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற போது இவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். சுராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் மோடியின் வலதுகரமாக செயல்பட்ட, செயல்படுகின்ற அமைச்சர் அமித் ஷாவை இரண்டுநாள் சிறையில் அடைத்து தீர்ப்பிட்டவர் இவர். நரோடா பாட்டியா என்னுமிடத்தில் 97 முஸ்லீம்கள் படுகொலை வழக்கில் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக தீர்ப்பு தந்துவிடுவாரோ என்று பயந்து, குஜராத்திலிருந்து பதவி இடமாற்றம் தந்தது. மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவேண்டிய இவரை, புறக்கணித்து, குட்டி மாநிலமான திரிபுராவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். புகழ்பெற்ற நீதிபதி நாரிமன் இவர் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தும், கொலேஜியம் பரிந்துரைத்தும் இவர் பெயரை ஒன்றிய பாஜக அரசு நிராகரித்துள்ளது. நீதிபதிகள் மாண்புக்குரியவர்கள். நீதிமன்றச் செயல்பாடுகளில் அரசு தலையிடுவதும் தீர்ப்புகளைத் திணிப்பதற்கு நிர்பந்திப்பதும் ஜனநாயகத்திற்கு அழகல்ல. ஓய்வுப்பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களைத் தொடர்ந்து பாப்டேவும் தன் நிறத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆம். செப்டம்பர் 1 ஆம் தேதி ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தைச் சந்தித்துள்ளார்.

 

நீதிபதிகள் எப்போதும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டவராகவே இருக்க வேண்டும். நீதி எப்போதும் களங்கமில்லாததாகவே இருக்க வேண்டும். நீதிபதிகள் ஒருபோதும் விலைபோகக் கூடாது. பணிக்குப் பிறகு பெறும் எந்தப் பதவியும் அநீதிக்கான சமரசங்களின் சன்மானமாகவே கருதப்படும். சாமானியனின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம். அது ஒருபோதும் அரசியல்வாதிகளிடம் புகலிடம் தேடக் கூடாது. கண்களைக் கட்டிய நீதிதேவதை தன் காதுகளை ஒருபோதும் பொத்தி வைக்கமாட்டாள். நடுநிலை தவறாத அவளின் தராசு முள், ஏங்கும் மக்களின் நீதிக்கேற்பவே அசைந்தாடும். அது வலிய அசைத்தால் அசைப்பவரின் விரல்களைப் பதம் பார்க்கும். மறவாதீர். நீதி தேவதை போன்றே அரசும் கண்களைக் கட்டிக்கொண்டு சிறுபான்மை -பெரும்பான்மை, வலது - இடது, இந்து -முஸ்லீம்-கிறிஸ்தவன்-பார்சி என்று பாராமல் நீதிபதிகளைத் தேர்ந்திட வேண்டும். சத்திய மேவ ஜயதே!

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின் (குறள்)

Comment