No icon

குடந்தை ஞானி

வெந்நீர் தவளைகள்

2014 ஆம் ஆண்டு முதல், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்துத்துவம் இந்தியாவெங்கும் தழைத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக் காலமாக, மண்ணுளி பாம்பாக, புதைந்திருந்த ஆர்எஸ்எஸ் இயக்கம், அதன் தொடக்க நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாகப் பாம்பாக படமெடுத்து நிற்கிறது. நூற்றுக்கணக்கான அதன் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொன்றிற்குமான  இலக்குகளைக் கொண்டு, நன்கு திட்டமிட்டு, தன் இருப்பை உறுதிப்படுத்தி, நாக்பூர் தலைமையின் வழிகாட்டுதலில் அதன் இலக்கை நெருங்கியுள்ளது.

சிறுபான்மையினரை அச்சுறுத்தி, இந்தியாவிலிருந்து அந்நியப்படுத்துதலில் படிப்படியாக வெற்றிக்கண்டு, வெறுப்பு அரசியலைக் கையிலெடுத்து, பகை முரண்களைகிரீஸ் டப்பாபாணியில் முன்வைத்து, பெரும்பான்மைவாதத்தை விதைத்துள்ளது.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக நிறைந்த வடகிழக்கு மாநிலங்கள்கூட, தன் மூலத்தை இழந்து, நிர்கதியாக்கப் பட்டுள்ளன. மதச் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக விளங்கும் முஸ்லீம்கள் மீது வெறுப்பு அரசியலைக் கையிலெடுத்து தொடர்ந்து அச்சுறுத்தி அவர்களின் குரலை படிப்படியாக ஒடுக்கினார்கள். மும்பைக் கலவரம், (பாகிஸ்தான் வெறுப்பு நிறைந்த) கார்கில் யுத்தம் - பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு, குஜராத் இரயில் எரிப்பு, அயோத்தி ரதம், பாபர்மசூதி இடிப்பு, முசாஃபர்பூர் கலவரம், .பி வெற்றி, அயோத்தி தீர்ப்பு, ராமர்கோயில் நிர்மாணம், மாட்டுக்கறி அரசியல், பசுவதைத் தடுப்புச் சட்டம் என்று முஸ்லீம்களை கருவறுத்த இந்துத்துவம், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), குடியுரிமை பதிவேடு என்று முஸ்லீம் சிறுபான்மையினரைச் சுற்றி, அதி பாதுகாப்பு நிறைந்த சுற்றுச்சுவர் கட்டியுள்ளது. இப்போது கடந்த இருபது ஆண்டுகளாக, மதச் சிறுபான்மையினரில் வலிமையானவர்களாக விளங்கும் கிறிஸ்தவர்களைச் சூறையாடத் தொடங்கியுள்ளது.

மதமாற்றத் தடைச்சட்டம்என்று அருணாச்சல பிரதேசம் தொடங்கி, கடந்த மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட கர்நாடகம் வரை கிறிஸ்தவ மிஷனரிகளைக் குறிவைத்தே இயற்றியது. கர்வாப்சி முறையில் நிராகரிக்கப்பட்ட பழங்குடிகளைக் கையிலெடுத்து, உள்ளடி வேலைகளைச் செய்தது. ஒடிசா கந்தமால் கலவரத்தின் மூலம் இந்தியாவெங்கும் கிறிஸ்தவர்களுக்கான வெறுப்பு அரசியலை விதைத்தது. கடந்த இருநூறு ஆண்டுகளாக கிறிஸ்தவர்களின் சேவைக்கு இலக்கணமாக விளங்கும் கல்வியையும் மருத்துவத்தையும் மத்திய அரசே கையிலெடுத்து, எண்ணற்ற கல்வி நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் நிர்மாணித்து, கிறிஸ்தவர்களை ஓரங்கட்டியது. கார்ப்பரேட் முறையிலான அணுகுமுறையால் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களாலும் மருத்துவமனைகளாலும் தாக்குப்பிடிக்க இயலவில்லை.

தேசியக் கல்விக் கொள்கைஎன்று ஒன்றைக் கொண்டு வந்து, சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் சேவைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கிறிஸ்தவ மிஷனரிகளின் தன்னல மற்ற சேவைக்கு எரிபொருளாக இருக்கும் வெளிநாட்டு நிதி உதவியைக் கடந்த ஏழு ஆண்டுகளில் முற்றிலுமாக முடக்கத் தொடங்கியது. பெரும்பாலான கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அந்நிய நிதியைப் பெறுவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு சலுகைகளும் விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன. ஏன், அரசு நிதி ஒதுக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டன. இந்துத்துவ வெறி ஊட்டப்பட்டது; ஊட்டப்படுகிறது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கி, ஒவ்வொரு மாநில அளவில் காங்கிரஸ் கட்சிகளாக உடைந்து, சிதறத் தொடங்கியபோது, ஜனசங்கத்தில் தோன்றிய பாரதிய ஜனதா கட்சி, ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிஎன்ற பெயரில், புல்லுருவியாக ஊடுருவி, அயோத்தி செங்கல்லைக் கொண்டு, தங்களைத் தாங்களே கட்டமைத்தது. கரசேவை என்ற பெயரில் தங்கள் அரசியலுக்கு சுயசேவை செய்து கொண்டனர். மதச்சார்பின்மை என்பதை போலி மதச்சார்பின்மை என்று புனரமைத்தனர். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தங்கள் எண்ணிக்கையை உயர்த்திக்கொண்டனர்.

மாநிலங்களில், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் பிடி இறுகாமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களை கபளீகரம் செய்து, ஆளுநர்களின் அரவணைப்பில் ஆட்சியைப் பிடித்தனர். தேசிய கட்சிகளின் வரிசையில், மூன்றாமிடத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை முற்றிலுமாக, திரிபுரா, மேற்கு வங்கம் என்று பலவீனப்படுத்தினர். மதவாதம், பாகிஸ்தான் வெறுப்பு அரசியல், பெரும்பான்மைவாதம், இந்திய அரசியல் சட்டத்தைப் பலவீனப்படுத்துதல், சிறுபான்மையினர்மீதான தாக்குதல், எதிர்கட்சிகளே இல்லாத ஏகத்துவம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம், அமலாக்கத்துறை, பத்திரிகை என்று அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் தன் வயப்படுத்துதல் என்று பாஜக தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் கட்சி பெறும் நன்கொடைகளைப் பற்றி வெளியே சொல்லாதவாறு பத்திரங்களை வெளியிட்டு பாதுகாத்து, தொண்டர் என்ற பெயரில் கூலி பெறும் படைகளை உருவாக்கியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, கிறிஸ்தவர்களாகிய நாம், பெரியார் பூமியில் இதுநாள்வரை பாதுகாப்பாக உள்ளோம். ஆனாலும், தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு, கோழி பலிகொடுப்பதைத் தடைச் செய்யும் சட்டம் கொண்டுவந்து, பின்னர் திரும்பபெற்றது என்பதெல்லாம் நாக்பூர் இந்துத்துவாவின் படையெடுப்பு இங்கும் உண்டு என்பதற்கு அத்தாட்சி. கோவை குண்டுவெடிப்பு முதல் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஈறாக முஸ்லீம் வெறுப்பு அரசியல் வளர்க்கப்பட்டது.

கிறிஸ்தவர்கள் அடர்த்தியாக வாழும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு, இணையம் சரக்கு பெட்டக துறைமுக எதிர்ப்பு என்று கிறிஸ்தவர்களை அந்நியக் கைக்கூலிகள் என்று கிறிஸ்தவ வெறுப்பு அரசியல் வளர்த்தனர். துக்ளக் சோ, இந்து முன்னணி இராம.கோபாலன், எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் போன்றவர்கள் தங்கள் வார்த்தைகளால் சிறுபான்மையினர் வெறுப்பு அரசியலை வளர்த்தனர். கந்தசஷ்டி கவசம், முருக யாத்திரையில் பெரும்பான்மைவாதத்தை வளர்த்துப் பார்த்தனர். தமிழகத்தில் கொஞ்சகாலம் திமுக, பின்னர் நிரந்தரமாக, அதிமுகவின் முதுகில் சவாரி செய்யும் பாஜக, தாமரை மலர்ந்தே தீரும் என்று சபதமிட்டு, நால்வரை சட்டமன்றத்திற்கு இம்முறை அனுப்பியுள்ளது. ஒரு மத்திய அமைச்சரும் உருவாகியுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் மாவட்டந்தோறும் ஒரு கட்சி அலுவலகம் உருவாகி வருகிறது.

தமிழகத்தில் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்களாகிய நாம்தான். கட்சி ரீதியாக, சாதி ரீதியாக, சபை ரீதியாக, வட்டார ரீதியாக, கொள்கை ரீதியாக, வழிபாட்டு ரீதியாக, தொழில் ரீதியாக பிரிந்து கிடக்கிறோம். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாம் வெதுவெதுப்பான மனநிலையில் (திவெ 3: 16) இருக்கிறோம். எதைப்பற்றியும் இங்கு யாருக்கும் கவலையில்லை.

நீர் நிறைந்த பானையை அடுப்பில் வைத்தாகிவிட்டது. 30 டிகிரி குளிர்ந்த நீரில் இருந்த தவளைகளுக்கு, சற்று வெதுவெதுப்பான 70 டிகிரி தண்ணீர் கொஞ்சம் மிகப்பெரிய ஆறுதல்தான். உடலுக்கு உணக்கையாக, இதமாகத்தான் இருக்கும். ஆனால், அந்த 70 டிகிரி, கொதிநிலை கூடி 100 டிகிரியாகும்போது நிலைமை என்ன ஆகும்? வெந்துபோகுமல்லவா?! சிறுபான்மையினராகிய நாம் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நமக்கான அரசியல் தளத்தை பொதுநிலையினரின் வலிமையான பங்கேற்போடும் தலைமைத்துவத்தோடும் கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

வெந்நீர் தவளைகளே! விரைந்து விழித்தெழுங்கள். உங்கள் பானையின்கீழ் நெருப்பு கனன்று கொண்டிருக்கிறது. அனல் உங்கள் பானையில் உரைத்துக்கொண்டிருக்கிறது. உங்கள் கொதிநிலை 100 டிகிரியை எட்டினால் உங்கள் கதி அதோ! கதிதான். நம் அருகில் உள்ள கர்நாடகாவின் மதமாற்ற தடைச்சட்டம் ஒரு முன்னோட்டம்தான். தமிழக ஆயர் பேரவையின் கீழ் உருவாக்கம் செய்யப்பட்டுள்ள கிறித்தவர் வாழ்வுரிமை இயக்கத்தை புனரமைத்து, வலிமையாக, மீண்டும் கட்டமைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. வெந்நீர் தவளைகளே! விழித்தெழுங்கள். இல்லையேல் மரணம் உங்களைத் தழுவக் கூடும். எச்சரிக்கை!

Comment