No icon

குடந்தை ஞானி

இவர்களின் நாவிற்குத் தேவை ‘விருத்தசேதனம்’

தேர்தல்என்று வந்துவிட்டாலே இந்திய பிரதமர் மோடி முதல் நம்ம ஊரு எச்.ராஜா வரை பாரதீயஜனதா கட்சியினர் அனைவரும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்மமும் குரோதமும் பகையும் பொறாமையும் நிறைந்த வார்த்தைகளைக் கொண்டு வசை பாடுவர். வார்த்தைகளால் சிறுபான்மையினரைச் சிறுமைப்படுத்தி, பெரும்பான்மையினரை பெருமைப்படுத்துவர். அச்சில் ஏற முடியாத வார்த்தைகளைக் கொண்டு உள்ளர்த்தம் கற்பித்து, நாட்டையே துண்டாடுவர்.

முஸ்லீம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் எதிராக கடுமையான, ஜனநாயகத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்துவர். கண்காணிக்க வேண்டிய தேர்தல் ஆணையம் கண்களை மூடிக்கொள்ளும்; காதுகளைப் பொத்திக்கொள்ளும். ஆட்சேபணை தெரிவித்து கண்டனம் தெரிவிக்க வேண்டிய நீதிமன்ற பரிபாலனம், வாய்மூடி மௌனத்தை மட்டுமே காக்கும். ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணாக விளங்கும் ஊடகங்களும் பாஜகவிற்கு விலைபோய் எதையும் ஒலிபரப்பாது; ஒளிபரப்பாது; பிரசுரிக்காது. சமூக வலை தளங்களில் வெறுப்பு அரசியல் விளையாடும். பகை அரசியல் களம் காணும்.

பகை முரண்களாக சிறுபான்மையினரை வலதுசாரிகள் முன்வைத்து, இந்திய ஜனநாயகத்தின்மீது கரி பூசுவர். காவி உடை தரித்து, வேடதாரிகள் களங்கம் கற்பிப்பர். வாள் ஏந்தி, கொலை செய்யுங்கள் என்று வெறியூட்டுவர். சொத்துக்களைச் சூறையாடுங்கள் என்று சூளுரைப்பர். திட்டமிட்டு மதக் கலவரங்களை உருவாக்கி, இந்து - முஸ்லீம், இந்து - கிறிஸ்தவர் விரோதம் வளர்த்து, தேர்தல் களம் காண்பர். சாதிகள் மறைந்து போகும். ஏழை - பணக்காரன் பேதம் மறைக்கப்படும். தீண்டத்தக்கவர் - தீண்ட தகாதவர் என்று வர்ணம் மறைந்து போகும். மதத்தால் நாட்டை பிளவுப்படுத்தி, நாக்பூர் தலைமைக்கு ஏற்ப, பாஜக வாலாட்டும்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது; ஏனைய நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. உத்தரகாண்டில் தற்போது பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. கடந்த நான்கு மாதங்களில் மூன்றுமுறை முதல்வர்களை ஆளும் பாஜக மாற்றியும் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. ஆகையால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுக்கிறது.

அதன்படி அண்மையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவாரில் இந்துத்துவா அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் தர்ம சன்சத் (மத நாடாளுமன்றம்) என்ற பெயரில் டிசம்பர் 17-19 ஆகிய மூன்று நாட்களும் ஒன்று கூடி பேசிய வெறுப்பு பேச்சுகள் அச்சில் ஏற இயலாதவை. முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புமிக்க, வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுக்களைப் பேசினர். இக்கூட்டத்தில் பாஜக தலைவர்களில் ஒருவரான அஸ்வினி உபாத்யாயா, பாஜகவின் மகளிர் அமைப்பைச் சேர்ந்த உதிதா தியாகி ஆகியோர் கலந்து கொண்டது பாஜகவின் தூண்டுதலை உறுதிப்படுத்தியது. இந்து ரக்ஷா சேனா என்ற வலது சாரி அமைப்பின் தலைவரான சுவாமி பிரபோதனந்த் கிரி வெறித்தனத்தின் உச்சம். இவர் தான் இந்துத்துவாவைப் பாதுகாக்க இந்துக்கள் எட்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இதற்கு முன்பு பேசியவர். லவ் ஜிகாத் பற்றி 2018 ஆம் ஆண்டு பேசி வெறுப்பை வளர்த்தவர்.

சுவாமி பிரபோதனந்த் கிரி இம்மாநாட்டில், “நாம் தயார்நிலையில் இருக்க வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன ஏற்பாடுகள் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் தெளிவுபடுத்துகிறேன், இதுதான் தீர்வு, நீங்கள் இந்தத் தீர்வைப் பின்பற்றினால், உங்களுக்குப் பாதை கிட்டும்.… மியான்மரில், இந்துக்கள் துரத்தப்பட்டனர். அரசியல்வாதிகளும், அரசும், காவல்துறையும் நின்று வேடிக்கை பார்த்தது" என்று ஆவேசமாகக் கூறி, தொடர்ந்து, “இது இப்போது நமது மாநிலம். டெல்லி எல்லையில் பார்த்திருப்பீர்கள், இந்துக்களைக் கொன்று தூக்கிலிட்டனர். இனி நேரம் இல்லை, இப்போது நிலை என்னவென்றால், இறக்கத் தயாராகுங்கள், அல்லது கொல்லத் தயாராகுங்கள், வேறு வழியில்லை. எனவே, மியான்மரைப்போல, இங்குள்ள காவல்துறை, இங்குள்ள அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் ஒவ்வோர் இந்துவும் ஆயுதம் ஏந்த வேண்டும். நாம் இந்தத் தூய்மை இயக்கத்தை நடத்த வேண்டும். இதைத் தவிர வேறு தீர்வு இல்லை" என்று வன்முறையைக் கையிலெடுக்கத் தூண்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்கள் வாள்களையும் சூலாயுதங்களையும் சுற்றியுள்ளனர்.

நிரஞ்சனி அகாராவின் மகாமண்டலேஸ்வரரும், இந்து மகாசபையின் பொதுச்செயலாளருமான பூஜா ஷகுன் பாண்டே என்ற சாத்வி அன்னபூர்ணாஆயுதங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. நீங்கள் அவர்களின் மக்கள்தொகையை அகற்ற விரும்பினால், அவர்களைக் கொல்லுங்கள். கொல்லவும், சிறை செல்லவும் தயாராக இருங்கள். நம்மில் 100 பேர் 20 லட்சம் பேரைக் கொல்லத் தயாராக இருந்தாலும் போதும். நாம் வென்று சிறைக்குப் போவோம். கோட்சேவைப்போல, நான் அவதூறாக இருக்கத் தயாராக இருக்கிறேன்; ஆனால், என்னைக் காக்க ஆயுதம்  ஏந்துவேன். எனது மதத்துக்கு அச்சுறுத்த லாக இருக்கும் ஒவ்வொரு அரக்கனிடமிருந்தும் அதை மீட்கப் போராடுவேன்என்று பேசியுள்ளார்.

இப்படிப்பட்ட இவர்கள்மீதுஉபா’ (UAPA) சட்டம் ஒருபோதும் பாயாது. ஆனால், இந்தியாவைப் பற்றி நகைச்சுவையாக பேசிய நடிகர் முனாவர் ஃபருக்கி மீது மீண்டும் மீண்டும் சட்டம் பாயும். அவர் சிறையிலடைக்கப்படுவார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் 80 சதவீத பாசிட்டிவ் மக்கள், 20 சதவீத நெகட்டிவ் மக்கள் என்று வாக்காளர்களைத் துண்டாடியுள்ளார்.

எந்தெந்த வகையிலெல்லாம் வாக்காளர்களை மதத்தின் அடிப்படையில் துண்டாட முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் இவர்கள் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் துண்டாடி, நாடகமாடி, நீலிக் கண்ணீர் வடித்து, காவி உடை தரித்து வெற்றி பெறுவதையே நோக்கமாக இந்திய ஜனநாயகத்தில் வைத்துள்ளனர். காவி சாமியார்களின் போர்வையில் பாஜகவின் அரசியல் பின்புலத்தோடு மாநாடுகள், கூட்டங்கள், சத் சங்கம் நடத்தி வேலை செய்கின்றனர். சமூக வலைதளங்களைக் கொண்டு இவர்கள் செய்யும் வெறுப்பு அரசியலுக்கு முடிவே இல்லை. எல்லாவகையிலும் எல்லா தளங்களிலும் இவர்கள் இந்தியாவை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதையே திட்டமிட்டு செய்கின்றனர். இவர்கள் இந்தச் சொல்லின் சூத்திரத்தைக் கற்கும் நாள் எந்நாளோ?!

இதுதான் சொல்லின் சூத்திரம்.

பொறுப்பற்ற சொல் சச்சரவை ஏற்படுத்தும்!

குரூரமான ஒரு சொல் ஒரு வாழ்வை சிதைக்கக்கூடும்!

ஒரு கசப்பான சொல் காழ்ப்புணர்வை ஏற்படுத்தலாம்!

ஒரு முரட்டுச் சொல் மரணத்தை உண்டாக்கலாம்!

ஒரு கருணையான சொல் பாதையைச் செப்பனிடலாம்!

ஒரு மகிழ்ச்சியான சொல் நாளையே வெளிச்சமாக்கலாம்!

ஒரு நேரத்திற்குகந்த சொல் இறுக்கத்தைத் தளர்த்தலாம்!

ஓர் அன்பான சொல் காயத்தை ஆற்றி ஆசீர்வதிக்கலாம்!

நாவு மூன்றங்குலம்தான்: ஆனால், அது ஆறடி உயரமுள்ள மனிதனைக் கொன்றுவிடும்என்கிறது ஜப்பானிய பழமொழி.

(நம் இந்திய ஜனநாயகத்தில்) இவர்களின் நாவிற்கும் வார்த்தைகளுக்கும்விருத்தசேதனம்செய்யும் நாள் எந்நாளோ?

Comment