No icon

குடந்தை ஞானி

களை கட்டும் உத்தரப்பிரதேச தேர்தல்

பாஜகவிற்கு உயிர் என்றாலும் வேர் என்றாலும் அது உத்தரப்பிரதேசம்தான். அயோத்தி ராமர் ஜென்ம பூமியை கையிலெடுத்து இர(த்) யாத்திரை நடத்தி, கரசேவகம் செய்து, பாபர் மசூதியை இடித்து, சாதகமாக தீர்ப்பைப் பெற்று தற்போது கட்டி வரும் ராமர் கோயிலாக இருந்தாலும் சரி, கிருஷ்ணரை முன்வைத்து, மதுராவை முன்வைத்து கிருஷ்ணருக்கு கோயில் கட்ட முயற்சிக்கும் அரசியலாக இருந்தாலும் சரி, உத்தரப்பிரதேசம் என்றால் அது பாஜகவிற்கு உயிர். அதுதான் அவர்களின் ஆணிவேர். பிரதமர் மோடியின் பாராளுமன்றத் தொகுதியான வாரணாசியே அம்மாநிலத்தில்தானே உள்ளது.

எல்லாவற்றையும் விட 403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம்தான், மாநிலங்களவையில் ஒரு கட்சியின் பலத்தைக் கூட்டுவதற்கு கிடைத்த உச்சாணிக் கொம்பு. ஆகையால்தான் பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் பாஜகவிற்கும் காங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்கும் மிக முக்கியமானதாகவே படுகிறது. வாழ்வா? சாவா? என்ற நிலையே நீடிக்கிறது.

ஆகையால்தான் ஆண்டவர்களும் ஆள்பவர்களும் ஆளாளுக்கு ராமரை வசதியாக மறந்துவிட்டு, கிருஷ்ணர் என் கனவில் தோன்றி, இப்படிச் சொன்னார்; அப்படிச் சொன்னார் என்று மத அரசியல் பிதற்றுகின்றனர். இந்தத் தேர்தல் 80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் இடையிலான யுத்தம் என்கிறார் .பி முதல்வர் யோகி ஆதித்யநாத். பாஜக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் மட்டுமே மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி அமையும் என்று பூடாகரமாக யோகி பிதற்றுகிறார். இவையெல்லாம் பாஜகவின் மத அரசியலின் வெளிப்பாடுகள்.

 மீண்டும் ஒருமுறை பாஜக .பியில் ஆட்சி அமைத்தால் மாநிலங்களவையில் அவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அவர்கள் சாதிக்க விரும்பியதையெல்லாம் இனி சாதிப்பார்கள். ராம ஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்ம பூமி என்று நாட்டைத் துண்டாடுவார்கள்.

ஆகையால்தான் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான அகிலேஷ் யாதவ் ஒரு வலுவான கூட்டணியை கட்டமைக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் தாழ்த்தப்பட்ட சமூகங்களையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளும் யோகியின் பாஜக புறக்கணித்த நிலையில், அவர்களை ஒருங்கிணைக்க அகிலேஷ்யாதவ் கடுமையாக முயற்சிக்கிறார். 44 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் ஒரு கட்சியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத்-ன் தாக்கூர் என்னும் உயர் வகுப்பினரே அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துவது ஏனைய சமூகங்களை அச்சுறுத்துகிறது.

ஆகையால்தான், எல்லாச் சமூகங்களுக்கும் அதிகாரத்தைத் தருவோம்; சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று முதல்வர் வேட்பாளர் அகிலேஷ் களமாடுகிறார். பாஜகவினர் மதத்தைக் கையிலெடுத்தால், சமாஜ்வாதி கட்சியினர் சாதியைக் கையிலெடுக்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலின் போது முசாஃபர்பூர் கலவரங்களைக் கொண்டு, மத வெறியைத் தூண்டி, இந்து - முஸ்லீம் விரோதம் வளர்த்து, 312 தொகுதிகளை வென்று பாஜக ஆட்சியைப்பிடித்தது. அதேபோன்று தற்போதும் மத விரோத அரசியலைக் கையிலெடுக்க பார்க்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டால், மோடியின் அரசுக்கு ஆபத்து ஏற்படும்; அதன் தாக்கம் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்பது யோகிக்கும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களுக்கும் தெரியும். ஆகையால்தான் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத குறையாக களமாடுகிறார்கள். பாஜகவின் அமைச்சர்கள் தாராசிங் சௌகான், தரம்சிங் சைனி ஆகியோரும் பன்னிரு எம்எல்ஏக்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியமாகின்றனர்.

பலவீனமாக உள்ள காங்கிரஸ், பிரியங்கா காந்தியின் முதுகில் சவாரி செய்து சாதிக்க முயற்சிக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் ஏழு இடங்களில் வென்றது; அப்படி வென்றவர்களில் நான்குபேர் காங்கிரசில் இல்லை. காயம்பட்ட காங்கிரஸ் மூச்சு விட போராடிக்கொண்டிருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் சற்றே இளைப்பாறுகிறது.

 உத்தரப்பிரதேச தேர்தல் களம் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிக்குமான போட்டியாக தோன்றுகிறது. திப்புச் சுல்தானுக்கும் யோகிக்கும் போட்டியாக இத்தேர்தல் உருவாகியுள்ளது. மண்டலுக்கும் கமண்டலத்திற்கும் இடையிலான மோதலாக இத்தேர்தல் உருவாகியுள்ளது. மதமும் சாதியும் களமாடுகிறது. இரண்டுக்குமே சம பலம் உருவாகியுள்ளது. பாஜகவும் சமாஜ்வாதியும் சமபலத்துடனே மோதுகிறது.

சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்கிறார். .பி முழுவதும் அகிலேஷ் யாதவ் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்குச் சேகரிக்கிறார். பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், இளைஞர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு உள்ளது. சமாஜ்வாதி கட்சி தலைமையில் ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம், அப்னா தளம் (சோனேலால்), ஜன்வாடி கட்சி, மகான் தளம், பராதிய சமாஜ் கட்சி, பிரகதீஷில் சமாஜ்வாடி கட்சி என்று அனைத்தும் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கியுள்ளார்.

வேலைவாய்ப்பின்மை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, விவசாயிகள் போராட்டம், லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை, கொரோனா நோய்த்தொற்றைக் கையாண்ட விதம், நதிகளில் பிணங்கள் ஆகியவற்றால் யோகியின் பாஜக பின் தங்குகிறது. ஓவைசியின் ..எம்..எம் முஸ்லீம்களின் வாக்குகளைக் கவர்ந்தால் அது பாஜகவிற்கு சாதகமாக முடியும் என்று அச்சம் நிலவுகிறது.

ராமர்கோவில் கட்டும் பணி நடைபெற்று வரும் இவ்வேளையில், காசி விஸ்வநாதர் ஆலயத்தைப் புதுப்பித்து, பிரதமரே திறந்து வைத்து, ()தகளம் செய்துள்ளார். கோடிக் கணக்கிலான திட்டங்களைத் தேர்தலுக்கு முன்பாக கொடியசைத்து திறந்து வைத்துள்ளார். பாஜக மீண்டும் .பியின் முக்கிய நகரங்களில் ரத யாத்திரைகளை நடத்திட திட்டமிடுகிறது. 251 மீட்டர் உயரமான ராமர் வெண்கலச் சிலையை சரயு நதிக்கரையில் கட்டமைப்பேன் என்று யோகி வாக்குறுதி தருகிறார். எல்லா சாலைகளும் உரோமைக்குச் செல்வதுபோல் இந்து அடிப்படைவாதிகள் ஒவ்வொருவரும் உத்தரப்பிரதேசத்தை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இத்தேர்தல் மதங்களுக்கும் சாதிகளுக்கும் இடையிலான தேர்தல் யுத்தம். யோகியின் பரிவாரங்களை திப்பு சுல்தான் வெல்வாரா? காலத்தோடு நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Comment