No icon

குடந்தை ஞானி

Mr. பிள்ளையார்!

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில்சிபிஐ (சிபிசிஐடி) விசாரணை தேவைஎன்று அவள்தம் தந்தை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எதிர்பாராதவிதமாக, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி திங்கள்கிழமை, பட்டியலிலே இல்லாத வகையில், அதற்கு அனுமதி அளித்து, திடீரென்று வெளியான தீர்ப்பு, சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய அச்சத்தையும் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 மாண்புமிகு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இடம்பெற்ற கசப்பான வார்த்தைகள் ஜனநாயகத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் தரப்பட்ட கசப்பான மருந்தாகும். அருள்பணி. ஜார்ஜ் பொன்னையா வழக்கில், பதிவு செய்யப்பட்ட ஆறு பிரிவுகளிலிருந்து, மூன்று பிரிவுகளை மட்டும் நீக்கிய நீதிபதி, அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றார். இவ்வழக்கில் தீர்ப்பை ஒட்டி விவரிக்கும் பகுதிதான் மிஸ்டர் பிள்ளையாரின் உள் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

என் காதலாஎன்ற வைரமுத்து பாடலை மேற்கோள் காட்டுவதும், பஞ்சபூதங்களான ஆகாஷ், அக்னி, வாயு, வருணா, பிருத்வி என்று சமஸ்கிருத சொற்களைப் பயன்படுத்துவதும், இவை அனைத்தும் சேர்ந்த இதுதான், புண்ணிய பூமி, பூமி மாதா என்று அழைப்பதும், பக்கீம் சந்திர சாட்டோபாத்யாயாவின்ஆனந்த மத்துஎன்ற நூலின் கவிதையை மேற்கோள் காட்டுவதும், காந்தி பாரத மாதாவுக்கு வாரணாசியில் கட்டிய கோவிலையும், சுப்ரமண்ய பாரதியின் பாரத மாதா குறித்த கவிதையையும் எம்.எஃப்..ஹூசைனின் பாரதமாதா ஓவியத்தை மேற்கோள் காட்டுவதும், இந்தியப் பிரிவினை குறித்து, வருத்தப்பட்டு, மத அடிப்படையில் இந்தியா பிரிக்கப்பட்டது என்று விவரணம் தருவதும், பாரத மாதா என்பது இந்து மதத்தின் ஓர் அங்கம் என்று வக்காளத்து வாங்குவதும், சம்பந்தமே இல்லாமல் தலித்துகள் கிறிஸ்தவர்களாக மாறுவதைக் குறித்து வருத்தப்படுவதும், விஷ்ணு புராணத்தின் சமஸ்கிருத ஸ்லோகத்தைச் சொல்வதும், வலதுசாரி சிந்தனைவாதி அரவிந்தன் நீலகண்டன் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றி பேசுவதும், மண்டைக்காடு கலவரத்தைப் பற்றி ஐந்து பக்கங்கள் விவரிப்பதும், மிஸ்டர் பிள்ளையாரின் குதர்க்கமான புத்தியையும் வலதுசாரி யுக்தியையும் நாக்பூர் பக்தியையும் தெள்ளத்தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. அருள்பணி.ஜார்ஜ் பொன்னையா அவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சைக் குறித்த வழக்கில்,

தலித் விரோத நோக்குடன் எடுக்கப்பட்டருத்ரதாண்டவம்திரைப்படத்தை மேற்கோள் காட்டுவதும், தலித் கிறிஸ்தவர்களை கிரிப்டோ கிறிஸ்டியன்ஸ் என்று முத்திரை குத்துவதும் மிஸ்டர் பிள்ளையாரின் வலதுசாரி சிந்தனையை வெளிப்படுத்துகிறது. சிறுபான்மையினரை அச்சுறுத்தி, வக்கிர புத்தியுடன்தான் ஒவ்வொரு வார்த்தையையும் தீர்ப்பைக் கட்டமைப்பதற்கு வெறுமையாக காழ்ப்புணர்ச்சியுடன் அதன் முன்னுரையாகப் பயன்படுத்துகிறார். மிஸ்டர் பிள்ளையார், சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சம்பந்தமே இல்லாத வகையில், படித்த கண்டதையும் பார்த்த கண்டதையும் கேட்ட கண்டதையும் தனக்குச் சாதகமாக, சம்பந்தமே இல்லாமல் வலிய பயன்படுத்தி தீர்ப்பின் பக்கங்களை பொழிப்புரையால் நிரப்புகிறார்.

மதமாற்றம் குறித்து பேசுவதும் .ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர்ராஜா, குறளரசன் ஆகியோர் முஸ்லீமாக மாறியது குறித்து சொல்லிவிட்டு, குழுவாக, பெருந்திரளாக, கூட்டமாக மாறுவது கூடாது என்று எச்சரிப்பதும் என்ன நியாயம்? கற்பனை கதாபாத்திரமான பாரத மாதாவை இந்துக்களின் அடையாளமாக மாற்றுவதும் இவரது பின்னணியை அடையாளப்படுத்துகிறது.

எச்.ராஜாவின் தந்தை பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வணக்கத்திற்கு எழுந்து நிற்காததால் தமிழகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பில், நாம் தமிழர் கட்சியினர் இராமேஸ்வரத்தில் சங்கர மடத்தில் செருப்பு போட்டு சென்றது தவறு என்று மேற்கொள்ளப்பட்ட வழக்கில், சம்பந்தமே இல்லாமல் விஜயேந்திரரைப் பற்றி, விலாவாரியாக வியாக்கியானம் செய்து, தியானத்தில் இருப்பது தவறல்ல என்று நியாயப்படுத்தி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, ஒரு நீதிபதியே முட்டுக்கொடுப்பது வழக்கிற்கு சம்பந்தமில்லாததுமட்டுமின்றி, நீதிமன்ற பாரம்பரியத்திற்கே பொருந்தாத ஒன்றாகும். சில பத்திகளில் அளிக்க வேண்டிய தீர்ப்பை, பல்வேறு பக்கங்களில் சம்பந்தமே இல்லாதவற்றைக் குறிப்பிட்டு விவரிப்பது இவருக்கே உரித்தானது.

இந்தியாவில் கொரோனா பரவ முஸ்லீம்களே (தப்லிக் ஜமாத்) காரணம், கொரோனா ஜிகாத் என்று யுடியூபில் கணக்குப்போட்டு பிதற்றிய வொயிட்போர்டு மாரிதாஸ் சம்பந்தப்பட்ட வழக்கில், இஸ்லாத்திற்கு எதிராக இல்லை என்று சான்றளித்து, தப்லிக் ஜமாத் இஸ்லாம் மதமே இல்லை என்று சொல்லிவிட்டு, அனைத்து பிரிவுகளையும் தள்ளுபடிசெய்து, முதல் தகவல் அறிக்கையை இல்லாமல் செய்கிறார். அருள்பணி. ஜார்ஜ் பொன்னையா வழக்கில் ஒரு நிலைப்பாட்டையும் வொயிட்போர்டு மாரிதாஸ் வழக்கில் இன்னொரு நிலைப்பாட்டையும் ஒருதலைப்பட்சமாகவே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார்.

சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மைக்கேல்பட்டி பள்ளி தற்கொலை வழக்கிலும் கூடசம்பந்தமே இல்லாமல் மூன்று திரைப்படங்களை மேற்கோள் காட்டுகிறார். ‘சீரியஸ் மென்என்ற நவாசுதின் சித்திக்கின் வெப்சீரிஸில் கே.பாலச்சந்தரின்கல்யாண அகதிகள்’ படத்தையும், 90-களில் வெளியானசாணக்யாஎன்ற சீரியலையும் மேற்கோள் காட்டி, மதமாற்றம் நடைபெறுவதற்கான காட்சிகளை விவரித்து, மதமாற்றத்திற்கான உண்மையான காரணத்தை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல மறைக்கிறார். பைபிளில் மதமாற்றம் குறித்த மேற்கோள்களை வலிய காட்டுகிறார். சமூகத்தில் உள்ளதைத்தான் திரைப்படங்கள் பிரதிபலிக்கின்றன என்ற வக்காலத்தும் வாங்குகிறார்.

தேவையேயின்றி, ‘மைக்கேல்பட்டிஎன்ற ஊரின் பெயர்க்காரணத்தை ஆராய்ச்சி செய்து வானதி சீனிவாசன் பாணியில் விவரிக்கிறார். மதமாற்றம் நடைபெறவில்லை என்று மாவட்ட கண்காணிப்பாளர் நிராகரித்ததுப் பற்றி எனக்கு நம்பிக்கையில்லை என்று கொச்சைப்படுத்துகிறார். ஜனவரி 24 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (மேலும் இரு அமைச்சர்கள்) மதமாற்றம் நடைபெறவில்லை என்று சொன்ன பேட்டியையும், சன் டிவியில் வெளியான மாணவியின் மரண வாக்குமூலத்தையும் வைத்துக்கொண்டு மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லி, 1098 தொலைபேசி அழைப்பின் மூலம் பெற்றோர் குற்றவாளிகள் என்று பரவுவதற்கு முட்டுக்கொடுத்து, மரணமடையும் தருவாய் உள்ள ஒருவர் பொய் சொல்லமாட்டார் என்று வடிவேலு பாணியில் வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் ரேஞ்சுக்கு புது விளக்கம் தருகிறார்.

34 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் கடைசி பத்தியில், தன்னுடைய இஷ்ட தெய்வம் விநாயகர் என்று சொல்லி, இந்த விநாயகரைக் கொடுத்தது இவ்வழக்கில் கிறிஸ்தவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்தான் என்று அவரைக் காட்டிக் கொடுத்து, (வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த கதையாக) அதற்குஃபாதர் பிள்ளையார்என்று அழைப்பதாக வியாக்கியானம் செய்துள்ளார்.

கடந்த ஒன்றரை மாதத்தில், ஒரு மதத்தின் சார்பாக வேரூன்றி நின்று, மற்ற மதங்களுக்கு எதிராக ஒவ்வொரு வழக்கிலும் அடுத்தடுத்து இவர் தீர்ப்பளிக்கிறார் இந்த மிஸ்டர் பிள்ளையார். வழக்கின் தொடக்க விசாரணையிலே வழுவாமை தவறி இவர் செயல்படுகிறார். தனது வலதுசாரி கொள்கைகளை தன் தீர்ப்புகளில் வலிய திணிக்கும் இவர் நீதித்துறை மீது கறைபடிய காரணமாகின்றார். நீதிபதியான இவர், தான் ஒருமிஸ்டர் பிள்ளையார்என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளார். கண்களைக் கட்டி தராசு ஏந்திய நீதித் தாரகை, பாரபட்சம் இல்லாத தன் நீதி வழுவாமையை மீண்டும் நிருபிக்க வேண்டும். நீதியை ஒருபோதும் பணத்தால், பத்து இலட்சத்தால், விலைக்கு வாங்க முடியாது. சத்தியமேவ ஜெயதே!

(இவ்வழக்கு சிபிஐ-க்கு மாற்றியது குறித்து, தடை கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது மிகவும் வரவேற்கத் தக்கது.)

Comment