No icon

குடந்தை ஞானி

அட்டைக் கத்திகளும் கொலு பொம்மைகளும் குடந்தை ஞானி

அட்டைக் கத்திகளை வைத்துக்கொண்டு நாம் போரில் ஈடுபட இயலாது. பார்ப்பதற்கு வேலைப்பாடுகள் மிகுந்து, கண்கவர் வண்ணக் காகிதங்கள் சுற்றப்பட்டு, காண்போரை கவர்ந்திழுக்க வேண்டுமானால் அந்த அட்டைக் கத்திகள் உதவலாம். ஆனால், அவை ஒருபோதும் எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கும் கருவியாகவும் கவசமாகவும் முடியாது.

சோளக்காட்டுப் பொம்மை வீசும் காற்றுக்கு வேண்டுமானால் தன் கந்தலாடைகளை அசைத்துக்கொள்ளும். ஆனால் ஒருபோதும் நடமாடி, பறவைகளையும் விலங்குகளையும் விரட்டி விளைச்சலுக்கு உதவாது. மனிதனை ஒத்த அதன் உருவம் வேண்டுமானால் காண்போரைக் கவர்ந்திழுக்கும். அறுவடைக்குப் பிறகு அது நிச்சயம் அப்புறப்படுத்தப்படும். அதில் திணித்துவைத்த வைக்கோலைக் கூட கால்நடைகள் தீண்டாது. அதன் ஆடைகள்கூட அடுப்பங்கரையில் சிறு கைப்பிடித்துணியாகப் பயன்படுத்தப்படாது. இதுதான் எதார்த்தம்.

பாரதிய ஜனதா அட்டைக் கத்திகளைப் பயன்படுத்திதான் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானப் போரில் சண்டையிட்டு, காலக் கொடுமை வெற்றியும் பெற்றுவிடுகிறது. அது பயன்படுத்திய அட்டைக் கத்திகள் ஒவ்வொன்றும், கொல்லன் பட்டறையில் செய்யப்பட்டவை அல்ல; என்றாலும், நாக்பூர் தலைமையகத்தின் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டவை. இந்தியாவின் தலைநகரான புதுதில்லி-வயலில் மாட்டப்பட்ட அதன் சோளக்காட்டு பொம்மையால் இந்திய ஜனநாயகத்திற்கு போதுமான விளைச்சல் கிடைக்க வாய்ப்பேயில்லை. கைபர் கணவாய் வழியாக வீசும் காற்றில் அதன் தொங்கலாடை வேண்டுமானால் அசையலாம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி இதுவரை இருவரை வேட்பாளர்களாக அகில இந்திய அளவில் நிறுத்தி வெற்றிப் பெற்றுள்ளது.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த், தற்போது நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ள பழங்குடியின பெண் வேட்பாளர் திரௌபதி முர்மு. அவர்களின் பெயர்களை முன்மொழியும்போது சிறுபான்மையினர் என்றால் மதத்தால் அடையாளப்படுத்துவர், இந்து என்றால் சாதிகளால் அடையாளப்படுத்துவர். முஸ்லீம், பட்டியலினம், ஆதிவாசி என்று இவர்கள் அடையாளப்படுத்தும் எவரும் சுதந்திரமாக ஒருபோதும் செயல்பட்டதேயில்லை. கொலு பொம்மைகளாகவும் காட்சிப் பொருளாகவும் சோளக்காட்டு பொம்மைகளாக மிரட்சியின் அடையாளமாகவும், அட்டைக் கத்திகளாக எதற்கும் பயன்படாமலும் இரப்பர் ஸ்டாம்ப்புகளாக கட்டங்கட்டி குத்தப்பட்டவர்களாகவும் விளங்குகின்றனர்.

இது தொடர்பாக துக்ளக் வார இதழில், வேலை காலி என்ற தலைப்பில், பதவியின் பெயர் இந்திய ஜனாதிபதி என்றும், வயது 80க்கு மேல் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், மாதம் ரூ. 5 லட்சம் சம்பளம் மற்றும் ஏராளமான சலுகைகள், இலவச விமான பயணம், ஐந்தாண்டு முழு ஓய்வுக்கு இடையே எப்போதாவது சில ஃபைல்களில் கையெழுத்து போட வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை குடியரசு தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் உரை நிகழ்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதுடன், குடியரசு தலைவர் பதவிக்கு, முற்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்க வேண்டாம் என்று அட்டைப்படத்திலேயே வலியுறுத்தியுள்ளது பாஜகவின் கருவறையான ஆர்எஸ்எஸ் தலைமையகத்தின் இந்துத்துவ கொள்கையையே பிரதிபலிக்கிறது.

இஸ்லாமியரான அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில்தான் குஜராத்தில் கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற முஸ்லீம்களுக்கு எதிரான கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. அவர் அதைப்பற்றி வாய் திறக்கவில்லையே!.

பட்டியலினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவராக பாஜகவால் அடையாளப்படுத்தப்பட்ட திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் இருந்தபோதுதான், ஹத்ராஸ் - உன்னாவ் படுகொலையும் நடைபெற்றது, சிறுபான்மையினருக்கு எதிரான உணவு (மாட்டுக்கறி), உடை (ஹிஜாப்), இருப்பிடம் (சிஏஏ) என்று தாக்குதல் நடைபெற்றது.. இவர் இதுவரை இவைகளைக் குறித்து வாய் திறக்கவில்லையே!.

பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவராக அடையாளப்படுத்தப்படும் திரௌபதி முர்மு 1086431 வாக்குகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதி. பாஜக கூட்டணி - 5,25,268 (48.6 6ரூ), காங்கிரஸ் கூட்டணி - 2,61,090 (24.19 ரூ), மற்ற கட்சிகள் 2,93,036 (27.15 ரூ). ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களுக்கு ஒடிசாவின் பிஜூ ஜனதாதளம் (31537) மற்றும் ஆந்திராவின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (43,450) வாக்குகளை அளித்து வெற்றிப்பெறச் செய்வது உறுதி. எதிர்கட்சிகள் நிறுத்தும் மற்றொரு குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தோற்பது உறுதி.

இங்கு நாம் தனிநபர்களைக் கருத்தில்கொள்வதைவிட, பாஜக முன்வைக்கும் அரசியலைத்தான் நுணுக்கமாக அணுக வேண்டும். உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், பிரதமர் உள்ளிட்ட அதிகாரம் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளைத் தருவதைவிட, ஆளுநர், குடியரசுத்தலைவர்  போன்ற அதிகாரமற்ற பதவிகளைக் கொடுத்தே அழகு பார்க்கின்றனர். வாக்கு வங்கி அரசியலை மையப்படுத்தியே தங்களை அதிகாரமயப்படுத்திக் கொள்கின்றனர். ஒரு நூற்றாண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையை அமல்படுத்துவதற்கு இப்படிபட்ட பலியாடுகளை, இந்தப் புலித்தோல் போர்த்திய பாஜக பசு கொம்புகளால் முட்டிக் கொல்கிறது. அட்டைக் கத்திகளும், சோளக்காட்டுப் பொம்மைகளும் இரப்பர் ஸ்டாம்ப்புகளும் இந்திய ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.

பழங்குடியின, ஆதிவாசி, தொல்குடி வேட்பாளர் என்று அறிவிக்கும் பாஜக கூட்டணி, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகம், உத்தராகாண்ட், உத்தரப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் விரவியுள்ள பழங்குடி மக்களின் பூர்வீகமான வனத்தைச் சூறையாடுவதிலும் இயற்கை வளங்களை ஜிண்டாலுக்கும், அதானிக்கும், வேதாந்தாவுக்கும் அம்பானிக்கும், டாடாவுக்கும் தாரைவார்ப்பதில் அதிவேகத்துடன் செயல்படுகின்றனர். நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்டுகள், என்ற பெயரில் ஒருபுறம் பழங்குடி மக்களை அதிதீவிரமாக வேட்டையாடுகின்றனர்.

காடுகளிலிருந்தும் மலைகளிலிருந்தும், வனத்திலிருந்தும் தொல்குடிகளை அப்புறப்படுத்துகின்றனர். பழங்குடியின மக்களுக்காகப் போராடிய போராளிகள், ஸ்டான் சுவாமிகள், வரவர ராவ் உள்ளிட்ட பலரையும் தேசவிரோதிகளாகச் சித்தரித்து சிறையில் அடைப்பார்கள். உறிஞ்சி சாப்பிட ஒரு ஸ்டிரா கேட்டாலும் தரமாட்டார்கள். சாகும்வரை வெளியே விடமாட்டார்கள். கொரோனா பாதித்தாலும் உடல் நிலை மோசமானாலும் உதாசீனப்படுத்துவார்கள்.

சட்ட மாமேதை, பட்டியலின மக்களின் விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரன் டெல்தும்டேவையேச் சிறையிலடைத்து, சித்திரவதைச் செய்யும் அதே ஐந்தாண்டுகளில், பட்டியலின குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் வாய் திறக்கவில்லையே!

இவர்கள் முன்னிறுத்திய, முன்னிறுத்துகின்ற ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் பாஜக பயன்படுத்தி தூர எறியும் முகமூடிகளே! இவர்கள் நினைத்திருந்தால் தற்போதைய குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு இரண்டாவது ஐந்தாண்டு காலத்திற்கு அனுமதித்திருக்கலாமே!. முஸ்லீம் குடியரசுத்தலைவரால் முஸ்லீம்களுக்கோ, பட்டியலின குடியரசுத் தலைவரால் பட்டியலின மக்களுக்கோ, பழங்குடியின குடியரசுத் தலைவரால் பழங்குடியினருக்கோ எந்தப் பலனும் இல்லை. அருந்ததியின அமைச்சரால் அருந்ததியின மக்களுக்கோ எந்த முன்னேற்றமும் இல்லை. கொலு பொம்மைகளை ஒருபோதும் கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்யமாட்டார்கள் மேடை நாடகத்தில் பயன்படுத்தப்படும் அட்டைக் கத்திகளை இந்திய அக்னிபத் இராணுவ வீரர்கள் போரில் பயன்படுத்தமாட்டார்கள். சோளக்காட்டு பொம்மைகள் வரப்புகளில் நடந்து விளைச்சலை ஒருபோதும் காவல் காக்க இயலாது.

Comment