No icon

தலையங்கம்

இது ஜனநாயகத்திற்கான வேள்வி!

எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருசேர கட்டமைப்பதுதான் ஒரு நாட்டின் ஜனநாயகம். ஒரு தேசத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாத ஜனநாயகம், ஒரு போதும் ஜனநாயகமாக நீடிக்க இயலாது. அது இறுதியில் அரசியல் சர்வாதிகாரத்திற்கே வழிவகுக்கும். கட்சிகள் வழி கட்டமைக்கப்பட்டுள்ள 75 ஆண்டு கால நம் இந்திய ஜனநாயகத்தில் 2014 ஆம் ஆண்டு முதல் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்பது கண்கூடு. பெரும்பான்மையால் கட்டமைக்கப்பட்ட இந்திய தேர்தல் ஜனநாயகத்தில், சட்டம் வகுத்துள்ள எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்துகூட எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையே மத்தியில் உள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி ஆவதும், எதிர்க்கட்சி ஆளுங்கட்சி ஆவதும் ஜனநாயகத்தின் சுழற்சி. வாக்குரிமைமிக்க மக்களின் தேர்வு மாண்புக்குரியது.

ஆனால், 2014 ஆம் ஆண்டு முதல் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அடாவடி பெரும்பான்மையில் பதவிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா கட்சி, காங்கிரசில்லாத இந்தியா என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. தேசிய அளவில் பாஜகவிற்கு வலுவான போட்டியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே மிஞ்சியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், மாநிலக் கட்சிகளின் எழுச்சியும் குதிரை பேரமிக்க ஜனநாயகத்தில் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலக் கட்சிகள்அனைத்து இந்திய (அதிமுக) என்ற அடைமொழியையும், பாரத் (டிஆர்எஸ்) என்று முன்னொட்டையும் மட்டுமே கொண்டிருப்பதால் மட்டுமே தேசியக் கட்சி ஆகிவிடாது. புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனை ஒருபோதும் புலியாக இயலாது.

பசு வளைய மாநிலங்களில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கோலேச்சுகிற பாரதிய ஜனதா, மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் குதிரை பேரம் பேசி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தங்கள் பக்கம் வளைத்து ஆட்சிப் பீடத்தில் புல்லுருவியைப் போல அமர்ந்திருக்கிறது. தேர்தல் வெற்றி ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு 365 நாளும் இயங்கும் ஒரே கட்சி பாஜக. தேர்தலில் வெற்றிப்பெறாத நிலையிலும் ஜனநாயகத்தை எப்படியாவது விலைபேசி ஆட்சிப்பீடத்தில் அமர்வதுதான் பாஜக. ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஓரங்கட்டப்பட்டாலும் ஆட்சியிலிருப்பவர்கள்மீதுள்ள வழக்குகளைப் பயன்படுத்தி தன் வயப்படுத்துவது பாஜக. வாய்ப்பே இல்லாத கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின்பிரதிநிதியாக உள்ள தங்கள் ஆளுநர்களைக் கொண்டு ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பது பாஜக.

எதற்குமே வாய்ப்பில்லையென்றால் ஒரு மாநில அந்தஸ்தைப் பறித்து யூனியன் பிரதேசங்களாக்கி சிதைப்பது பாஜக. ஒரே இந்துத்துவ கொள்கையில் நிலைத்து தங்களை எதிர்க்கும் சிவசேனா போன்ற கட்சிகளை உடைத்து ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவது பாஜக. ஜனநாயகத்தின் சல்லி வேர்களை மட்டுமல்ல; ஆணிவேரையே அசைத்துப்பார்க்கும் வேலையை பாஜக மிகத் தீவிரமாக செயல்படுத்துகிறது.

ஒரே..ஒரே.. என்று ரேஷன்கார்டு முதல் காவலர் சீருடை வரைஓர்மைப்படுத்துவது மட்டுமின்றி, இந்தியாவில் ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நகர்வை நோக்கி இந்தியாவைத் தள்ளுகிறது. பாஜக இந்திய ஜனநாயகத்தில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கருந்துளையில் எல்லாமே கபளீகரம் செய்யப்படுகிறது. அரசு இயந்திரம் இதைத்தான் தீவிரமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. ஜனநாயகத் தூண்களாக உள்ள நாடாளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை அனைத்தும் வெலவெலத்துப் போயுள்ளன. ஊடகத்தின் குரல்வளை கார்ப்பரேட்டுகளின் பிடியில் நெரிக்கப்படுகிறது.

மதம், மாடு, காவியின் அடிப்படையில் இந்தியரின் சிந்தனை வளர்க்கப்படுகிறது. பிரிவினைகளின் சூழ்ச்சியில் இந்தியர்கள் அனைவரும் சூறையாடப்படுகிறோம். இந்தியா, பாரதம் ஆவதும், அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அப்புறப்படுத்துவதும் வெகுதொலைவில் இல்லை. சனாதனத்தின் பிடியில் இந்திய ஜனநாயகம் கருவறுக்கப்படுகிறது. ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமானால், ஜனநாயகம் நிலைக்க வேண்டுமெனில் எதிர்க்கட்சிகளின் எழுச்சி என்பது இன்றியமையாதது. மோடியா? லேடியா? என்பது எழுச்சிமிக்க கேள்வி.

மோடியின் பிரமாண்ட பிம்பத்தின் நிழலால், இந்திய ஜனநாயக கிரகணம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நம் இந்திய ஜனநாயகத்தின் சாவிகள் களவாணிகளால் களவாடப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. ஒற்றுமையில்லாத காங்கிரசின் பலவீனம், காம்ரேடுகளின் தூக்கம், மாநிலக் கட்சிகளின் போர்க்குணமின்மை, ஊழல்மிக்க ஜெகன்களின் பதவி மோகம், ஷிண்டேக்களின் சுயநலம், பரூக் அப்துல்லாக்களின் வீட்டுச் சிறைவாசம், எடப்பாடிகளின் அடிமை மனநிலை அனைத்துமே இந்திய ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கும் இந்துத்துவ பாஜகவின் எழுச்சிக்கும் வழிவகுத்துள்ளன.

தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளைக் களைந்து, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த வாய்ப்பை நழுவவிட்டால் ராகுல்களும் மம்தாக்களும் ஸ்டாலின்களும் இந்திய ஜனநாயகத்திற்கு கள்ளிப்பால் ஊத்தியவர்கள்தான். பெரும்பான்மை மட்டுமே ஜனநாயகத்தைத் தீர்மானித்தாலும் மாற்றுக்குரலும் எதிர்க்குரலும் ஜனநாயகத்தின் இசையை இன்னும் ஒருபடி மெருகூட்டும். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் எந்நாளும் ஜனநாயகத்திற்கும் எதிரிதான். கார்ப்பரேட்டுகளின் பிடியில் ஒற்றைமைய ஏகோபித்த அரசியல் சூழல் ஜனநாயகத்தைப் பாதிக்கும்.

இந்தியா- மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பது இன்னும் சிலகாலம்தான் போலும். எதிர்க்கட்சிகளே! மாச்சரியங்களைக் கடந்து ஒன்றிணைந்திடுங்கள்! ஜனநாயகம் உங்களால்தான் நிறைவடைய முடியும். குடியரசுத் தலைவர் முதல் ஆளுநர் வரை, அமலாக்கத்துறை முதல் நீதித்துறை வரை, தேர்தல் ஆணையம் முதல் தினசரி செய்தித்தாள் வரை எல்லாமே ஒற்றைச் சார்புடையதாக இருந்தால் ஜனநாயகம் எப்படி நிலைக்கும்? சர்வாதிகாரமே தலைதூக்கும்!

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கோள்ளும் ராகுல்காந்தி, தன் காங்கிரஸ் கட்சிக்குள் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு காரணிகளால் கடிவாளமிடப்பட்ட ஜெகன்களும் ஷிண்டேக்களும் எடப்பாடிகளும் விடுதலை பெற வேண்டும். கோடரிக் காம்புகளான மம்தாக்களும் பவார்களும் தன்னிலை உணர வேண்டும். காம்ரேடுகளும் ஸ்டாலின்களும் சிங்கங்களாக ஒன்றிணைய வேண்டும். ஜனநாயகத்திற்கான வேள்வியில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் இந்தியாவையும் காப்பாற்ற இயலாது. இந்திய ஜனநாயகத்தையும் காப்பாற்ற இயலாது.

Comment