தலையங்கம்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
- Author குடந்தை ஞானி --
- Monday, 28 Nov, 2022
நான்கு சக்கரங்கள் கொண்ட நம் இந்திய ஜனநாயகத் தேரின் நகர்வுக்கு தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம், நீதிமன்றம், ஊடகம், சட்டமன்றம் இன்றியமையாதவை. ஜனநாயகத் தேரின் முன்னோக்கிய நகர்வுக்கு தன்னாட்சி அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையச் சக்கரம் என்பது மிகவும் அடிப்படை. அதன் அச்சாணிதான் ஒவ்வொரு தேர்தல். இத்தேரில் ஏதாவது ஒரு வண்டிச்சக்கரத்தின் அச்சாணியில் பழுது ஏற்பட்டாலும் ஜனநாயகத் தேரின் நகர்வு தடைபடும்.
நம் இந்திய ஜனநாயக வரலாற்றில் துணிச்சலாக தேர்தல் சீர்திருத்தத்தை ஏற்படுத்தி, ஜனநாயகத்தின் முன்னோடி காவலர்களாக விளங்கிய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.ஷேசன், டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது; பாராட்டுக்குரியது.
இந்தியாவில் தன்னாட்சி அதிகாரம்கொண்ட அமைப்பான தேர்தல் ஆணையம் சிதைந்தாலோ அல்லது அதன் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டாலோ ஜனநாயகம் என்பது காணாமல்போகும் அல்லது நியமிக்கப்படும் தேர்தல் ஆணையர்கள் ஆட்சியாளர்களின் அடிவருடிகளாக இருக்கும்பட்சத்தில் இவ்வமைப்பு சர்வாதிகாரத்திற்கே துணைநிற்கும். ஆகையால் தேர்தல் ஆணையர்களின் நியமனம் என்பது வெளிப்படையானதாகவும் விருப்பு வெறுப்பின்றியும் அமைதல் அடிப்படையாகும்.
அண்மையில் நியமிக்கப்பட்ட நாட்டின் இந்தியத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் அவர்களின் நியமனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 37 ஆண்டுகளாக மத்திய அரசுப் பணியிலிருந்த இவர், இவ்வாண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி தன்னுடைய பணியிலிருந்து விருப்ப ஓய்வுப் பெற்றார். ஆனால் ஓய்வுப் பெற்ற மறுநாளே, ஒய்வுப்பெற்ற 24 மணி நேரத்திற்குள், நாட்டின் தேர்தல் ஆணையராக நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுதான் மிகப்பெரிய சர்ச்சையையும் பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் செய்யக் கோரிய பல்வேறு மனுக்களை ஒன்று சேர்த்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் அவர்களின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள்கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு புகழ்பெற்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் புதிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் குறித்து உச்சநீதிமன்றத்திடம் முறையிட்டார். காக்கை உட்கார விழுந்த பனம்பழமாக, இந்த விசாரணையின்போது அருண் கோயல் நியமன விவகாரமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்திய சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் பெண் தலைமைத் தேர்தல் ஆணையர் இதுவரை நியமிக்கப்படாதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கவலை தெரிவித்து, பின்பற்றப்பட்ட முறை அல்லது அளவுகோல்களை விளக்கும்படி மத்திய அரசைக் கேட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அருண் கோயல் நியமனத்தில் வழக்கம்போல மத்திய அரசு வழக்கறிஞர்களோ இதில் எந்தத் தவறும் இல்லை என்று சப்பைக்கட்டு கட்டினர். அதற்கு நியமன நடைமுறையைப் பற்றி நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். சிறுபிள்ளைகளின் விளையாட்டான hanky panky (சாட், பூட் திரி) முறையில் நியமிக்கப்பட்டதா என்பதை நீதிமன்றம் தெரிந்துகொள்ள விழைகிறது என்று சாட்டையைச் சுழற்றியுள்ளது. நீதிபதிகள் அனிருத்தா போஸ், ஹரிஷிக்கேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் ‘மின்னல் வேக நியமனம்’ குறித்து கேள்வி எழுப்பினர். மத்திய அரசு வழக்கறிஞரோ சற்றுக் கடுமையாக ‘உங்கள் வாயை சற்று மூடுங்கள்; இப்பிரச்சனையை முழுமையாகப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று அந்த அமர்வைக் கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதி அஜே ராஷ்டோகி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் ‘நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு மட்டும் கவனமுடன் செவிசாய்த்து பதிலளித்திடுங்கள். தனிப்பட்ட நபரைப் பற்றி அல்ல; மாறாக நடைமுறைப் பற்றியே நாங்கள் கேட்கிறோம்’ என்று முகத்தில் அறைந்தார்போல பதிலளித்தார். அதன் பிறகே அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் அடக்கத்துடன் நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
1985 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த இந்த அதிகாரி விருப்பு ஓய்வுப் பெற்ற ஒரே நாளில், மத்திய சட்ட அமைச்சகத்தால் ஒரே நாளில் இவரது கோப்பு பரிசீலிக்கப்பட்டு முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டு நான்கு பேர்கொண்ட பட்டியல் பிரதமர் முன்பு வைக்கப்பட்டு இவரது பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்படுகிறது.
அமர்வு மிகத் தெளிவாக, 18 ஆம் தேதி நாங்கள் இந்த வழக்கை கேட்கிறோம். அதே நாளில் நீங்கள் இந்தக் கோப்பை நகர்த்துகிறீர்கள். அதே நாளில் பிரதமர் இந்தப் பெயரை பரிந்துரைப்பதாகச் சொல்கிறார். ஏன் இந்த அவசரம்? நிர்வகிக்கப்படும் பட்டியலில் உள்ள பெயர்களின் அடிப்படையில் இது என்று சொல்லப்படுகிறது. அந்த பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் நான்கு பெயர்கள் உள்ளன. அகண்ட பரிந்துரைப் பட்டியலிலிருந்து எப்படி நீங்கள் பெயரைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். டிசம்பர் மாதத்தில் ஓய்வூதியப் பலன்களைப் பெறப்போகிற ஒருவரை... பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் அவர்தான் மிகவும் இளவயதுடையவர். இதுதான் நடைமுறையா? எப்படி நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ற சரமாரியாக கேள்விகளைக் கேட்டது.
மே மாதம் 15 ஆம் தேதி முதல் காலியாக உள்ள இப்பதவிக்கு நவம்பர் 18 ஆம் தேதி வரை தாமதித்தது ஏன்? பிறகு திடீரென்று அவசர கதியில் மின்னல் வேகத்தில் செயல்பட்டது எப்படி? என்று சாட்டையைச் சுழற்றிவிட்டு, "தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையில் சுதந்திரமான செயல்முறை தேவை. தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும் நிலையில், இத்தகைய நியமனங்கள் எப்படிச் சரியானவை... எனவே, தேர்தல் ஆணையராக அருண் கோயல் ஒரே நாளில் எப்படி நியமிக்கப்பட்டார் என்பது தொடர்பான நடைமுறைகளை, ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையரை நியமித்தது ஏன்?” என்று அமர்வு விளக்கம் கேட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்களுக்கான சட்ட வழிகாட்டுதல் 1991-ன்படி பதவிக்காலம் ஆறு ஆண்டு காலத்தை முழுமையாக முடிக்கக்கூடிய ஒருவரைத்தான் அரசு நியமிக்க வேண்டும். அப்படிப்பட்ட பதவிக்கு ஒரே நாளில் 24 மணிநேரத்தில் அவசர கதியில் நியமிக்கப்பட்ட இந்த நியமனம் பாரதிய ஜனதா கட்சி எப்படி கிள்ளுக்கீரையாக தன்னாட்சி ஜனநாயக அமைப்புகளை நடத்துகிறது. அதன் அதிகாரிகளை அடிவருடிகளாக எப்படி மாற்றுகிறது என்பதற்கு நல்ல உதாரணம். மத்திய சட்ட அமைச்சர் ஆறு ஆண்டு காலம் இப்பதவியை நிறைவு செய்ய முடியாத நான்கு பேர் கொண்ட பட்டியலைத் தயாரிப்பதற்கு எப்படி திணறுகிறார் என்பதும் தெளிவாகிறது. ஆகையால் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சுயாட்சிமிக்க வெளிப்படையான கொலேஜியம் முறையிலான அமைப்பைப் போல தேர்தல் ஆணையத் தலைவர்களை நியமிப்பதற்கும் கட்டாயம் கொண்டுவரவேண்டும். பாலின பன்முகத்தன்மையுடன் பெண்களையும் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்க அரசு நிர்வாகம் முன்வர வேண்டும்.
ஏற்கனவே புதிதாக கொண்டுவரப்பட்ட தேர்தல் நன்கொடைப் பத்திரத் திட்டத்தின் மூலம் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலியாக பாரதிய ஜனதா கட்சி தன்னை மாற்றிய நிலையில், தேர்தல் ஆணையர் நியமனத்திலும் சட்டங்களை மதிக்காமல், ஜனநாயகத்தை மதிக்காமல், மின்னல்வேகத்தில் தனக்கான அடிவருடிகளை நியமிப்பது தடுத்த நிறுத்தப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதுபோலவே, கொலேஜியம் முறையில் மத்திய அரசின் தலையீடின்றி, மத்திய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு, இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றமே இந்திய ஜனநாயகத்தின் இறுதி புகலிடம் என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
Comment