No icon

தலையங்கம்

சிறுபான்மையினர் - கல்வி உதவித் தொகை நிறுத்தம்?

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியின விவகார அமைச்சகம் சார்பிலும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் சார்பிலும் ஒன்றாம்  வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு முதல் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. மத்திய அரசு 75 சதவீதமும் மாநில அரசு 25 சதவீதமும் பங்களித்து இவ்வுதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை இத்திட்டம் ஊக்குவித்தது. அவர்களின் நிதிச் சுமையைக் குறைத்தது. ஏழை, எளிய மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறைவு செய்ய பேருதவியாக அமைந்தது. கல்வி கற்றதோடு மட்டுமின்றி, சிறுபான்மையின, பழங்குடியின, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முன்னேறி  வேலைவாய்ப்புச் சந்தையில் அவர்களுக்கும் ஏனையோருக்குமிடையே சமநிலையை ஏற்படுத்தியது. இது பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம்.

இக்கல்வி உதவித்தொகை பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்காக மட்டுமின்றி, ஏனைய இதர செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டதுபோக்குவரத்துச் செலவு, எழுதுபொருள்கள், நோட்டுப் புத்தகங்கள் என்று ஏனைய செலவுகளுக்கும் இக்கல்வி உதவித்தொகை பயன்படுத்தப்பட்டது. இதனால் பெற்றோரிடமும் மாணவர்களிடமும் மிகப்பெரிய பொறுப்புணர்வையும் சமூக அக்கறையையும் வளர்த்தது.

2008 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மிகுந்த தொலைநோக்குப்பார்வையுடன் இத்திட்டத்தை தொடங்கி வைத்தது. கடந்த 14 ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை, எட்டாம் வகுப்பு வரை இலவசக் கல்வி என்பதை காரணமாக கூறி, மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வருகிறது.

நடைபெற்று முடிந்த குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, "மவுலானா ஆசாத்" தேசிய கல்வி உதவித் தொகை  திட்டத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 2009 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் முஸ்லீம், கிறிஸ்தவ, புத்த, சீக்கிய, பார்சி, சமண சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்கல்வி மாணவர்கள் பி.எச்டி (முனைவர்) பட்டம் படித்து முடிக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டது

இந்திய பல்கலைக் கழக மானியக் குழு ஆண்டிற்கு இருமுறை தேர்வு நடத்தி, ஒவ்வொரு முறை 500 மாணவர்கள் வீதம், ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து பயனடையச் செய்தது. இப்படி ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகை முதல் இரண்டு ஆண்டுகளில் அவர்களுடைய ஆராய்ச்சி ஈடுபாட்டைப் பார்த்து தீர்மானிக்கப்பட்டு அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 30ரூ பெண்களுக்கும், 3ரூ மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டது. இது போலவே பல நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுவதால் இத்திட்டம் இரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் இரானி தெரிவித்த காரணம்தான் நகைப்புக்குரியதாக இருந்தது.

கல்வி உரிமைச் சட்டப்படி (2009) எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுகிறார்கள். ஆகையால் இந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேவையில்லை என்ற காரணம் ஒருபோதும் ஏற்புடையதல்ல. கட்டாயக் கல்வி என்று திணிப்பதைவிட, ஏழை, சிறுபான்மையின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இலவச மடிக்கணினி, இலவச மிதி வண்டி, இலவச காலை - மதிய உணவுத்திட்டம் என்று அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படாத நிலை உள்ளது.

ஆகையால் மத்திய மாநில அரசின் கல்வி உதவித் தொகை என்பது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மற்றும் சிறுபான்மையின மாணவர்களின் வாழ்வில், நம் சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இது ஒரு வரப்பிரசாதம்.   காலங்காலமாக, பல்வேறு காரணிகளால் ஒடுக்கப்பட்டு கல்வி உரிமையின்றி தவித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியின  மற்றும் சிறுபான்மையின மாணவர்கள், தொடர்ந்து படித்து வாழ்வில் முன்னேற அரசின் இந்தக் கல்வி உதவித்தொகை மிகப்பெரிய ஊன்றுகோலாக இருந்தது. இப்படி வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு இந்தக் கல்வி ஆண்டு முதல் திடீரென்று இரத்து செய்துள்ளது. கல்வியாளர்கள் மத்திய அரசின் இந்த இரத்து முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியின விவகார அமைச்சகம் சார்பிலும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் சார்பிலும் மிகவும் தெளிவாக, ஒன்று  முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்திவிட்டு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 கல்வி ஒரு மிகப்பெரிய ஆயுதம். அண்ணல் அம்பேத்கர் முதல் பழங்குடியினத் தலைவர் முண்டா வரை ஒடுக்கப்பட்ட அனைவருக்குமான பேராயுதம் கல்வி. சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும் வறுமை, ஏழ்மை நிலையிலிருந்தும் மீட்டெடுக்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. குருகுல கல்விக்கு எதிராக, எல்லாரும் எல்லாநிலையிலும் கல்வி கற்கக் கூடிய பள்ளிக் கல்விமுறை விடுதலைப் பாதைக்கான வித்துஆரம்பக் கல்வியே ஒரு நல்ல எதிர்காலத்தின் நுழைவாயில். மாணவர் சேர்க்கை குறைந்தாலும் இடைநிற்றல் அதிகரித்தாலும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. சமூக சமநிலை தவறினால் மீண்டும் நாம் வேதகாலத்திற்கு செல்லும் அவலம் ஏற்படும். சமூக நீதி என்பது எட்டாக் கனியாகிவிடும். கல்விக்கு மத்திய, மாநில அரசு செய்யும் செலவு என்பது செலவல்ல; மாறாக, அது முதலீடு. மனித வள முன்னேற்றத்திற்கான மூலதனம். சமூக நீதிக்கான அடித்தளம்.

இரத்து செய்யப்பட்ட இந்த ப்ரி-மெட்ரிக் ஸ்காலர்சிப்பால் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், மற்றும் புத்த, சமண, பார்சி உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின ஏழைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். சிறுபான்மையினர், பழங்குடியினர், பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் கல்வியில் பின்தங்கினால் தேசத்தின் ஒட்டுமொத்த கல்வி விகிதமும் பின்தங்கிவிடும் என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்றிய அரசின் இந்த முடிவினால் தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஐந்து இலட்சம் ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் "ஏழை சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த குழந்தைகளிடையே தொடக்கக்கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைவதோடு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும்  குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுவது உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கும்; எனவே இது தொடரப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக சிறுபான்மையின ஆணையத் தலைவர் திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்களுக்கு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, நல்மனதுடன் மீண்டும் பரிசீலனை செய்திட கடிதம் எழுதியுள்ளார்.

கல்வி எல்லாரையும் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர பெரும்பான்மை - சிறுபான்மை என்ற பேதம் பார்த்து அரசியல் செய்வது வலதுசாரிகளுக்கு நல்லதல்ல. ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே நீடிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாகவே நீடிக்க வேண்டும் என்று அவர்களின் முன்னேற்றத்தை தடுப்பது அரசுக்கு நல்லதல்ல. அனைவருக்கும் கல்வி என்பதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். மத்திய அரசு சிறுபான்மையினருக்கெதிராக இரத்து செய்த இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டங்களை மீண்டும் தொடர்ந்திட வேண்டும்மோடி தலைமையிலான குஜராத் அரசு ப்ரி - மெட்ரிக்  கல்வி உதவித்தொகை திட்டத்தை நிராகரித்தபோது, 2013-ல் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் தலையிட்டு குஜராத் அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததுபோல இப்போதும் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

Comment