No icon

தலையங்கம்

ஒரே நாடு? ஒரே தேர்தல்?

உயிரோட்டம் நிறைந்த ஜனநாயகத்திற்கு அடிப்படை சுதந்திரமான தேர்தல் நடைமுறை. ஜனநாயத்திற்கான உயிர்க்காற்றே தேர்தல். மக்களாட்சிக்கான மகத்தான ஆயுதமே தேர்தல். பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்ற நாள்முதலே தேர்தல் நடைமுறையை சீர்குலைப்பதில்தான் குறியாக இருக்கிறது. தன்னாட்சி சுதந்திரமிக்க நீதிமன்றம், இந்திய மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் சிதைத்துவிட்டு, எஞ்சியிருக்கிற தேர்தல் ஆணையத்தையும் சிதைக்கத் தொடங்கியிருக்கிறது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியை இந்நாள் மாநிலங்களவை உறுப்பினராக்கியபோதே அதன் மாண்பு கருவறுக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பொருளாதார நிபுணத்துவம் இல்லாத ஒருவரை, ஐஏஎஸ் அதிகாரி சக்தி காந்த தாஸ் அவர்களை தலையாட்டி பொம்மையைப் போல நியமித்தபோதே பணமும் காவிமயமாகியது. விருப்பு ஓய்வுக் கடிதம் கொடுத்த ஓய்வு பெற்ற ஒருவரை - நவம்பர் 18 ஆம் தேதி ஓய்வுப்பெற்ற அருண் கோயலை - அடுத்த நாளே மத்திய தேர்தல் ஆணையராக நியமித்தபோதே தேர்தல் ஆணையத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றியாயிற்று. எல்லா இடங்களிலும் எல்லா தளங்களிலும் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்திசைவு தருகின்றவர்களை மட்டுமே தங்கள் கைப்பாவையாக நியமிக்கும் நிலையில், எல்லா ஜனநாயக அமைப்புகளுமே பலவீனமாக்கப்பட்டுள்ளன.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் நடத்த தயார் என்று ஏலமிடும் மத்திய தேர்தல் ஆணையம், விலைபோய்விட்டது என்பதை தெளிவாக அறிவிக்கிறது. பிரதமரின் கண்ணசைவிற்கும் பிரதம அலுவலகத்தின் திட்டங்களுக்கேற்ப புதிய புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்த மறுநாளே சட்டமன்ற தேர்தல்களை அறிவித்தபோதே, அது யாருக்கு அடிமை என்பது உலகறிந்த ஒன்றாகிவிட்டது. மாநகராட்சித் தேர்தல் என்றால்கூட, தனி விமானம் பிடித்து, தரையிறங்கி பிரச்சாரம் செய்யும் பாஜக பீரங்கியான பிரதமருக்கு, மாதந்தோறும் ஆங்காங்கே நடைபெறும் தேர்தல்களால் அலுவலகப் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்பதை மிகுந்த அக்கறையுடன்ஒரே நாடு ஒரே தேர்தல்என்று தேர்தல் ஆணையம் கூவுகிறதோ என்று தோன்றுகிறது. பிரதமரின் பயணத் திட்டங்களுக்கேற்ப தேர்தல் தேதிகளை பல்வேறு கட்டங்களாக அறிவித்து செயல்படுகிறபோதும், கட்சிகள் வாங்கும் நன்கொடைகளை பத்திரங்கள் வழியாக வசூலித்து யார் தந்தார் என்று தெரிவிக்க வேண்டியதில்லை என்று அறிவித்தபோதும், வாக்களிக்க குடிமகனாக வருகிறபோதே நடந்து வரும் தெருதோறும் பிரச்சாரம் செய்யும் பிரதமரின் ரோடுஷோவை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறபோதும் தேர்தல் ஆணையத்தின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளது. ரிமோட் முறையில் எங்கிருந்தாலும் எவரும் வாக்களிக்கலாம் என்று ஊரறிந்தஒரேதேசியக் கட்சிக்கு வரிந்து கட்டி வேலை செய்யும்போதே, நரி வலம் போகிறது என்பது தெரிந்துவிட்டது. இந்த நிலையில் தான்ஒரே நாடு ஒரே தேர்தல்என்ற கருத்து திணிப்பை திட்டமிட்டு பரப்புகிறது. காஷ்மீரில் தேர்தலே நடத்தாமல் ஜனநாயகத்திற்கு விஷம் ஊற்றப்படுவதைப் பற்றியெல்லாம் யாரும் வாய் திறப்பதில்லை.

பெருந்தொகை நாட்டின் தேர்தலுக்காக செலவிடப்படுகிறது என்பதுதான் முன்வைக்கப்படும் முக்கிய காரணம் என்றால், அது ஏற்புடையதன்று. ஜனநாயகத்திற்காக செய்யப்படும் செலவு, பிரதமரின் தனி விமானத்திற்காக செலவிடப்படும் செலவைவிட குறைவு என்பதுதான் உண்மை. வராக்கடன்கள் தள்ளுபடி என்று 12 இலட்சம் கோடிகளுக்கு தள்ளுபடி செய்ததெல்லாம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

 மாநிலக் கட்சிகளை ஒடுக்குவதும், இருக்கிற ஒருசில தேசிய கட்சிகளை ஓரங்கட்டுவதும்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதன் உச்சபச்ச நோக்கம். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் செலவிடப்பட்ட 60 ஆயிரம் கோடியில், பாஜக மட்டுமே 27000 கோடியை அதாவது 45 சதவீதத்தைச் செலவழித்துள்ளது. இறுதியாக ஏகத்துவத்தின் அடிப்படையில் சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை நகர்த்துகின்றனர். செல்வச் செழிப்புமிக்க, கோடிகளில், பல்லாயிரக்கணக்கான கோடிகளைக் கொண்டுள்ள பாஜக, ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரே முகமாக இருக்க முற்படுகிறது.

சுயாட்சிமிக்க மாநில அமைப்புமுறைகளைத் தகர்ப்பதும், மாநில சுயாட்சியைக் கருவறுப்பதும் தான் இதன் நோக்கம். நாட்டில் உள்ள மாநிலங்களில் பாதி இதற்கு இத்தேர்தல் முறைக்கு சம்மதிக்க வேண்டும் என்கிறபோதே, அது பாஜகவின் திட்டத்திற்கு சாதகமானது என்பது வெள்ளிடைமலை. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்என்பது இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான ஆர்.எஸ்.எஸ்-ன் ஓர் அடித்தள முயற்சி என்றால் அது மிகையன்று.

எம்.எஸ்.கோல்வால்கர் எழுதியசிந்தனை கொத்து (Bunch of Thoughts) என்ற நூலில், நமது புனிதத் தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஒரே நாடு-ஒரே சட்டம், ஒரே சட்டமன்றம்- ஒரே நிர்வாக மையம் தேவை என்று கூறியுள்ளார். இப்படி ஒரே.. ஒரே.. ஒரே என்று ஏகத்துவத்தின் அடையாளமே இந்துத்துவம்தான். தேசிய இனங்களின் அழிப்பே அதன் இலக்கு. மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதுதான் அதன் வெற்றியாக அமையும். பாசிச சர்வாதிகாரம் மிக எளிதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை சட்ட நீக்கம், பசுவதைத் தடுப்புச் சட்டம், புதிய கல்விக் கொள்கை, உபா, என்ஐஏ, சொத்து சேதத் தடுப்புச் சட்டம், ஆதார் அடையாள அட்டையை வாக்காளர் அட்டையை இணைப்பது போன்றவற்றையெல்லாம் மிக எளிதாக்கும். இதுவே இந்து ராஷ்டிரத்தை கட்டமைப்பதற்கான மூலக்கூறு வாய்ப்பாடு. கூட்டாட்சி, மொழிவாரி மாநில அமைப்பு முறை, மாநில சுயாட்சி, தேசிய இனங்களின் அழிப்பு என்று எல்லா நிலையிலும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவே தன்னார்வலராக, தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயார் என்று அறிவிப்பதே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதே இந்த ஒரே தேர்தல், ஜனநாயகத்திற்கு எதிரானதே இந்த ஒரே தேர்தல். மாநில சுயாட்சிக்கு எதிரானதே இந்த ஒரே தேர்தல், தேசிய இனங்களின் பன்முகத் தன்மைக்கு எதிரானதே இந்த ஒரே தேர்தல். மக்கள் விரோதமானதே இந்த ஒரே தேர்தல்முறை. இந்து ராஷ்டிரத்தின் திறவுகோலே இந்த ஒரே தேர்தல்.

அதிமுகவின் பச்சோந்தித்தனமான ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான நிலைப்பாடு தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழ்நாட்டிற்கு எதிரானது. ஆதரிப்பவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள்.

Comment