No icon

ஆசிரியர் பக்கம்

எங்கே போகிறது மானுடம்?

மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் இந்தியா என்ற தேசிய மானுடத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருப்பதுதான் நாம் பெருமிதம் கொள்ளத்தக்க அரசியல் சாதனை.

பிற நாடுகளில் ‘மதம்’ என்பது சமூக வாழ்வின் உட்கூறுகளில் ஒன்று. ஆனால், இந்தியாவிலோ நாட்டின் இதயமே மதம்தான். அதுவே முதுகெலும்பு; அதுவே அடிநாதம்! இந்த அடித்தளத்தின் மீதுதான் ‘தேசம்’ (நாடு) என்ற கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரம், ஏன் அறிவுகூட இரண்டாம் பட்சமே. மதம் ஒன்றே மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. “இந்திய வாழ்க்கை செழிப்புற்றதே மதம், ஆன்மிகம் என்ற வளங்களால் மட்டும்தான். இனியும் அது அவ்வாறே வாழும்; வளம் பெறும்” என்றார் விவேகானந்தர். ஆனால், மதத்தால்தான் இந்தியா அன்றும் இரண்டாகப் பிளந்தது; இன்றும் பலவாறு துண்டு துண்டாகப் பிளக்கப்படுகிறது; மதம்தான் நாடு முழுவதும் அமைதியற்ற சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே இன்றைய அவலம்.

பா.ஜ.க.வின் ‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி, ஒரே பண்பாடு’ என்ற கொள்கைதான் அத்தனைக்கும் காரணம். மதச்சார்பின்மை கொண்டு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதுதான் உலக நாடுகளே வியந்து பாராட்டும் நமது உயர்ந்த வாழ்வியல் முறை. ஆனால், இந்த அடிப்படை எண்ணம் ஆட்சியாளர்கள் முதல், அடிமட்ட குடிமகன் வரை இன்று சிதைந்து கிடப்பதுதான் கவலை அளிக்கிறது. அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. இளைஞரணி தலைவர் ப்ரவேஷ் சுக்லா, பழங்குடியினச் சிறுவன் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல நாகரிகங்களைக் கடந்து வந்த இந்திய மண்ணில் இன்று, ‘எங்கே போகிறது மானுடம்?’ என்றே கேட்கத் தோன்றுகிறது. இந்தியாவில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினச் சமூகத்தினர் மீது தொடுக்கப்படும் வன்முறை நிகழ்வுகள் நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தமிழகம் இதில் விதிவிலக்கல்ல. வேங்கைவயல் நிகழ்வு ‘மனிதனுக்கு ஆறறிவு குறைந்துவிட்டதோ?’ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதுபோலவே, மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் செயல்பட்டு வரும் D.Y. படேல் உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த ‘இந்துத்துவா’ அமைப்பினர், பள்ளி முதல்வர் திரு. அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட் என்பவரின் ஆடைகளைக் கிழித்து, அவரைத் தாக்கும் செயல் பற்றிய வீடியோ வெளிவந்துள்ளது நமக்கு அதிர்ச்சியளிக்கிறது. நாம் எத்தகைய சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? என்றே நினைக்கத் தோன்றுகிறது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது நமது மத உரிமையின் மீது தொடுக்கப்படும் போர் அல்லவா? இந்நிகழ்வுகளையெல்லாம் பார்த்துக் கொண்டு இன்னும் நாம் மௌனிகளாக இருப்பதுதான் வேதனையிலும் வேதனை! 

இது எங்கோ வட இந்தியாவில் அரங்கேறுகின்ற அவலம் என்று மட்டும் எண்ணிவிடக்கூடாது. உலகத்தின் எந்த ஒரு மூலையில் மனித உரிமை மீறல்கள் அரங்கேறினாலும், நம் இதயத்தில் இரத்தம் கசிய வேண்டும். “வல்லமையற்றவருக்காகவும், வாயில்லாதவருக்காகவும் பரிந்து பேச அஞ்சுவோர் அடிமைகளே! உண்மையைக் கண்டு உள்ளுக்குள் ஒடுங்கிவிடாமல், சீறியெழாதவர்கள் அடிமைகளே!” என்று விடுதலை உணர்வூட்டிய அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் ரஸ்ஸல் வெவெல் என்பவரின் கனல் தெறிக்கும் வரிகளே இங்கு நினைவுக்கு வருகிறது.

சமுதாயத்தை, மானுடத்தை, மனிதநேயத்தை, மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தை உருக்குலைக்கும் இச்செயல்பாடுகளையும், தீமைகளையும் எப்போது நாம் எதிர்க்கத் துணியப் போகிறோம்?

கண்ணுக்குத் தெரியும் மனிதர்களை எதிரியாகப் பார்த்தே பழகிப்போன நாம், நம் மானுடத்தின் ஒற்றுமையைச் சிதைக்கும் வஞ்சகத் தத்துவங்களை, கோட்பாடுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கொள்கைகளைச் சுமந்து நிற்கும் கண்ணுக்குத் தெரியாத (ஏன்? நன்றாகவே தெரிந்த) ‘இந்துத்துவா’, ‘சனாதன’, ‘பாசிச’ தீமைகளை எப்போது துரத்தப் போகிறோம்?

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றார் ஐயன் திருவள்ளுவர். பிறக்கின்ற அனைத்து உயிர்களும் சமம் என்ற வள்ளுவரின் கூற்று சமூக நிலைப்பாடாக மாறப் போவது எப்போது? இச்சூழலில் அண்மையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “பொருளாதார அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாய அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது” என்று கோவையில் நடந்த நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். இப்போதெல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும்; உண்மை, தூய்மை, அன்பு, தவம் போன்ற மானுட வாழ்வியல் மதிப்பீடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் இவர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது.  நயவஞ்சகர்களின் நாடகம் இது. புரிந்துகொள்வோம்.  மானுட நேசத்தை, மாநாடு போட்டு வளர்க்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனது மனிதகுலக் கடமையாக உணர்ந்தால் மட்டுமே புது உலகைக் காண முடியும்.

“ஆலய மணி ஓசையும்

மசூதியின் அழைப்பொலியும்

காற்றில் கரைந்து

சங்கமிக்கும் அர்த்தமும்

இவர்களுக்கு எப்போது விளங்கும்?”

என்ற அப்துல் ரகுமானின் வரிகள் இங்கே நினைவு கூறத்தக்கது.

முனைந்திடுவோம். மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment