No icon

ஆசிரியர் பக்கம்

நீ எழுந்து வா! விரைந்து வா!

 “இளைஞனே எழுந்திருங்கள்; விழித்திருங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும், எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறதுஎன்று எழுச்சிக் குரல் கொடுத்தார் சுவாமி விவேகானந்தர்.

இன்றைய காலச்சூழலில் நம் நாட்டில் மட்டுமல்ல, திரு அவையில் மட்டுமல்ல; ஏன், உலகெங்குமே முன்பு இருந்ததைவிட இளையோரைப் பற்றி அதிகம் பேசப்படுவது யாவரும் அறிந்த உண்மையே! இவர்கள் திரு அவையிலும், ஒவ்வொரு நாட்டிலும் பெரும் வளமாக, திடமான நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார்கள். முன்பெல்லாம் திரு அவைத் தந்தையர்கள்Church needs Youth!’ என்றே குறிப்பிடுவார்கள். ஆனால், இன்று இந்தச் சொல்லாடல் சற்றே ஆழமாகChurch wants Youthஎன்று வலியுறுத்தப்படுகிறது. காரணம், இவர்கள் தேவையானவர்கள் என்றல்ல; மாறாக, இன்று எங்கும், எல்லாத் தளங்களிலும் இவர்கள் அவசியமானவர்கள் என்பதற்காக. இந்த நூற்றாண்டின் இளையோர் திறமைகளின் இருப்பிடம்; ஆற்றலின் பிறப்பிடம்; சாதனைகளின் சங்கமம் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

இளையோரே! நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். சாதனைகள் கூரிய இலக்கு கொண்டதேடல்என்ற ஒற்றைப் புள்ளியில் தொடங்குகிறது. ‘விடாமுயற்சிஎனும் வலுவூட்டி, ‘கடின உழைப்புஎனும் நேர்கோட்டில் தொடர்ந்து பயணித்தால்வெற்றி’, ‘சாதனைஎனும் இலக்குகளை எளிதாக அடைய முடியும். உங்கள் வெற்றிக்கான பயணத்திற்கு முதலில் உங்களுள் ஒளிந்திருக்கும் பேராற்றலைக் கண்டறியுங்கள். உங்கள் திறமைகளை அறிந்து மெருகூட்டுங்கள். உங்களுள் பிறப்பெடுக்கும் ஆர்வமும், முழு ஈடுபாடும் வெற்றிப்படிகளில் நடக்கச் செய்யும்; வீறுநடை போடச் செய்யும்.

இந்திய நாடு இளமையான நாடு. நமது மக்கள் தொகையில் பாதி 25 வயதுக்கு உட்பட்டோர். உலகமே இந்தியாவையும்அதன் இளைய சமுதாயத்தையும் ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டே பார்க்கும் நிலை உருவாகியுள்ளதுஇத்தகைய வளமான இளைய தலைமுறை இருவேறு வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே எதார்த்தம். கலாச்சார சீரழிவு, தன்னல நோக்கு, ஊடக அடிமைத்தனம், போதையில் சிக்குண்டிருப்பது, பண விரயம் என்று மேம்போக்காகக் கூறப்படும் குறைபாடுகளைச் சுமந்து நிற்கும் ஒரு வகை. உயர்கல்வி, எதிர்காலத்திற்கான திட்டமிடல், அது மெய்ப்பட முனைப்போடு உழைத்தல், தங்கள் உழைப்பால் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தல் மற்றும் மாற்றம் நோக்கிய பொதுநலச் செயல்பாடுகள் என முழு ஈடுபாடு கொண்ட மற்றொரு வகை. இவ்விரு வகைகளிலும் உடனிருந்து நல்வழிகாட்டி ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமை.

மானிடரில் குறிப்பாக, நான்கு வகையான ஆற்றல்கள் குடிகொண்டிருக்கும் என்பார்கள். அதை உடல் சார்ந்த ஆற்றல் (வலிமை), அறிவு சார்ந்த ஆற்றல் (ஞானம்), மனவளம் சார்ந்த ஆற்றல் (நல்லெண்ணம்) மற்றும் சமூக நாட்டம் கொண்ட ஆற்றல் (தியாகம்) என வகைப்படுத்துவார்கள். இத்தகைய ஆற்றல் எப்போதும் நம்மில் உயிரோட்டம் கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக, இளையோரில் இவை எப்போதும் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். “உன் வாழ்க்கையைத் தேக்கமடைய விட்டுவிடாதே; நீரோட்டம் போல் ஒடிக்கொண்டே இருக்கட்டும்என்ற ஆங்கில எழுத்தாளர் ஜான் மேசன்வுட்டின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது.

மனித ஆற்றல் ஒரு கடிகாரத்திற்கு ஒப்பிடப்படுகிறது. கடிகாரத்தின் இயங்கும் திறன் இழந்து, தாமதமாக அல்லது தளர்ந்துபோன சூழ்நிலையில் அதற்கு திறன் ஊட்டசாவிகொடுப்பதுபோல, நம் இளையோர் சோர்ந்து போகும்போது பெற்றோரும், குடும்பத்தாரும், பணித்தளமும், இச்சமூகமும் இளையோரை ஆற்றல்படுத்த வேண்டும்; ஆற்றுப்படுத்த வேண்டும்; ஆளுமைத்திறனும், ஆற்றல் வலுத்திறனும் அவ்வப்போது கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே அவர்களைத் தொடர்ந்து இயங்கச் செய்து, ஆற்றல் நிறை ஆளுமைகளாக உருமாற்றும்.

இச்சமூகத்தின்மீது  எனக்குப் பெரும் கோபம் உண்டு. யானையின் தும்பிக்கையைப் பிச்சைப் பாத்திரமாக்கியது இந்தச் சமூகம்தான். அற்ப வினாடிகள் வெளியே வந்து, பிறகு கூண்டுக்குள் ஓடும் சோதிட கிளியிடம்தான் வாழ்வின் சுதந்திரத்தை, மகிழ்ச்சியை, புது வாழ்வை, விடியலைத் தேடும் உலகமும் இது தான். ஆகவே, இன்று  இளையோரின் ஆற்றல், வலிமை, எண்ணம் முழுமையாய் அறியப்பட வேண்டும். இளைஞனே, நீயும் உன்னைத் திறம்பட அறிந்துகொள்ள வேண்டும். வாழ்வின் வெற்றிப்படிகளுக்கு, சாக்ரடீஸ் முழங்கியது போல முதலில்உன்னையே நீ அறிவாய்!’

இளையோரே, உங்களின் இலக்கு, ஈடுபாடு, ஆசை, உறுதி, பொறுப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு எனும் வாழ்வியல் தத்துவங்களைக் கூர்மைப்படுத்துங்கள். திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுப்பது போல, ‘மரியாவைப் போன்று எழுந்து விரைந்து செல்லுங்கள்!’ நிலையான ஒன்றிப்பையும், வேற்றுமை களைந்து ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளும் அன்புறவையும் எங்கும் விதைத்திடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, 2018 ஆம் ஆண்டு குருத்து ஞாயிறு மறையுரையில் திருத்தந்தை குறிப்பிட்டதுபோல, “அநீதிக்கு எதிராக ஒன்று திரண்டு குரல் கொடுக்க வாருங்கள்.” நாளைய உலகம் நமதாகட்டும்!

இளைய தலைமுறையே எழுந்து வா!

இணைந்து கைகோர்க்க விரைந்து வா!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment