No icon

ஆசிரியர் பக்கம்

இன்னும் நாம் வேடிக்கை மனிதர்கள் தானோ?

மீண்டும் ஒரு மானுட அவலம் அரங்கேறியிருக்கிறது இந்திய மண்ணில்! இந்தியர் யாவரும் உலக மக்கள் மன்றத்தின் முன் வெட்கித் தலைகுனிய வைத்த இழிச்செயல் இது.

மணிப்பூரில், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி. பைனோம் என்ற கிராமத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி, பழங்குடியின பெண்கள் இருவர் மனிதாபிமானம் அற்ற முறையில் தாக்கப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காணொளி, அண்மையில் ஜூலை 19 ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது; நம் அனைவரையுமே பதற வைத்துள்ளது.

இக்கொடிய சம்பவத்தில், தனது தங்கையைப் பாலியல் வன்கொடுமைத் தாக்குதலில் இருந்து காப்பாற்ற முற்பட்ட சகோதரனும் ஆயுதம் ஏந்திய கொலைவெறிக் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார். மணிப்பூர் வன்முறையாளர்களின் இந்தக் கொடூரத் தாக்குதலில் அவமானத்திற்குள்ளாகி இறந்த அந்த இரு பழங்குடிப் பெண்களில் ஒருவர், கார்கில் போரில் நாட்டுக்காகப் போராடிய முன்னாள் இராணுவ வீரரின் மனைவி என்பதை அறியும்போது, நாம் இன்னும் வெட்கப்பட வேண்டும். “எதிரிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க முடிந்த என்னால், வன்முறையாளர்களிடமிருந்து எனது வீட்டையும், மனைவியையும், சக கிராமவாசிகளையும் காப்பாற்ற முடியவில்லையேஎன்ற அந்த இராணுவ வீரரின் குமுறல் இதயத்தைக் கலங்க வைக்கின்றது.

இந்நிகழ்வுகளை எல்லாம் மணிப்பூர் மாநில பா... அரசும், இந்திய ஒன்றிய அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நமது கையறு நிலையையே உணர்த்துகின்றது. “மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக இக்கலவரம் தொடங்கியதிலிருந்து அந்த மாநில அரசுடன் மே 18, மே 29, ஜூன் 19 ஆகிய தினங்களில் மூன்று முறை தொடர்பு கொண்ட போதிலும், ஆளும் மாநில பா... அரசு பதிலளிக்கவில்லைஎன்று குற்றம் சாட்டுகிறார் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா.

இந்தியத் திருநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதும், அவை நாளும் அதிகரித்துக் கொண்டிருப்பதும் மிகுந்த கவலை அளிக்கிறது. கடந்த ஆண்டு 2022, ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 இலட்சம் குற்ற வழக்குகளில், 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடையவை என்று கூறும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் 26.35 விழுக்காடு அதிகமாகியுள்ளது என்பது மிகுந்த வேதனை. மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் 2.75 இலட்சம் குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 2.12 இலட்சம் பேர் சிறுமிகள் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்திருக்கிறார். இது மாபெரும் வெட்கக்கேடு! வேலியே பயிரை மேயும்போதுபயிர் பாதுகாப்புப்பற்றிப் பேசுவது மடமையே! இந்தியத் திருநாட்டில்விளையும் பயிர்கள் முளையிலேயே கருகுகின்றன; இங்கே அரும்புகள்மீது அம்புகள் தொடுக்கப்படுகின்றன.’

இச்சூழலில், 75-வது சுதந்திரத் தின விழாவில் பேசிய ஒன்றிய முதன்மை அமைச்சர், “தினசரி வாழ்க்கையில் பெண்களை அவமதிக்கும் அனைத்துச் செயல்களையும் மக்கள் (குறிப்பாக ஆண்கள்) விட்டுவிட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்என்று வலியுறுத்தினார். சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயேமுதன் முறையாகஎன்று மார்தட்டிக்கொண்டு பழங்குடி இனத்தவரில் சுதந்திரப் போராட்டக் களம் கண்ட தியாகி பகவான் பிர்சா முண்டாவுக்கு நவம்பர் 15, 2021 இல் விழா எடுத்த இதே பா... அரசுதான், இன்று பழங்குடியினரை, பெண்களைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. இவர்கள்தான், ‘பழங்குடிச் சமூகத்தின் கலை, பண்பாடு, சுதந்திரப் போராட்டத் தியாகம், அவர்களின் பங்களிப்பு நினைவு கூறப்பட வேண்டும்என்றும் பெருமை பேசுபவர்கள்.

ஆண்டவன் படைப்பில் அற்புதமான படைப்பு பெண்; அவளைவிட மென்மையும், மேன்மையும் நிறைந்த படைப்பு உலகில் வேறு எதுவும் இல்லைஎன்றார் நம் தேசத்தந்தை காந்தியடிகள். அன்பின் பிறப்பிடமாய், தாய்மையின் நிறைகுடமாய், தியாகத்தின் இருப்பிடமாய் விளங்கும் பெண்ணினம்தான் இன்று இங்கே சிறுமைப்படுத்தப்படுகிறது; பேராபத்தை எதிர்கொள்கிறது.

கற்பு பற்றியும், மழை பெய்யெனப்

பெய்வது பற்றியும் கதைக்கும் அவர்கள்

எப்போதும் என் உடலையே நோக்குவர்;

கணவன் தொடக்கம் கடைக்காரர் வரைக்கும்

இதுவே வழக்கம்!’

எனும் எழுத்தாளர் . சங்கரியின் கவிதைதான் எனக்கு இங்கே நினைவுக்கு வருகிறது. வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது! உலக அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுவதில், ஐந்தில் ஒன்று இந்தியாவில் என்பதும், ஒவ்வொரு நான்கு நிமிடத்திலும் பெண்களுக்கு எதிராக இந்தியாவில் ஒரு குற்றச்செயல் நிகழ்கிறது என்ற தகவலும் மேலும் நமக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலுமாக ஒழிப்பது நம் அனைவருடைய கூட்டுப் பொறுப்பு என்பதை நாம் உணர்வோம்! மணிப்பூர் வன்முறையில், பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய் நிற்போம். அரசு குற்றங்களைத் தடுத்திடவும், இரக்கமற்ற வகையில் இக்கொடிய குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாகக் கடும் தண்டனை வழங்க வேண்டுமெனவும் குரல் கொடுப்போம்! இனியும் நாம் அமைதி காத்தால்,

தேடிச் சோறு நிதந்தின்று - பல

சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்

வாடித் துன்பமிக உழன்று - பிறர்

வாடப் பல செயல்கள் செய்திடும்...

வேடிக்கை மனிதரைப் போல் ஆவோமோ...’

எனும் முண்டாசு கவிஞனின் கோப வரிகள் நம்மைச் சுட்டுவிடும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment