No icon

ஆசிரியர் பக்கம்

களவாடப்படும் கருத்துரிமை!

தெளிந்த நீரோடையில் தன் பிரதிபிம்பம் கண்டு மகிழ்ந்த கலைமான், தன்னுடைய குட்டி மானிடம் அந்தப் பிம்பத்தைக் காட்டி, தன் அழகையும், ஓடும் வேகத்தையும், தன்னிடமுள்ள ஆற்றலையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தது. அப்போது வேட்டை நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டது. அடுத்த கணமே கலைமான் தலைதெறிக்க ஓடத் தொடங்கியது. “இவ்வளவு நேரம் உன் ஆற்றலைப் பற்றிப் பேசிய நீ, இப்போது ஏன் தலைதெறிக்க ஓடுகிறாய்?” என்று குட்டி மான் கேட்டது. “வேட்டை நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்டால், என் தைரியமெல்லாம் என்னை விட்டு ஓடிவிடுகிறதுஎன்று பரிதாபமாகப் பதில் அளித்ததாம் கலைமான். சுவாமி விவேகானந்தரின் சிறுகதை இன்றைய ஒன்றிய அரசியலுக்கு, குறிப்பாக, அந்த அரசியலுக்குத் தலைமை தாங்கிச் செல்பவருக்கு முற்றிலும் பொருந்துவதாக இருக்கிறது. வேட்டையாடப் புறப்பட்டிருக்கும் நாய்களைக் கண்டு கலைமான்களுக்கும் பயம் பற்றிக் கொண்டுள்ளது. பயம் கொண்ட கலைமான்கள் இன்று வேட்டை நாய்களை விரட்ட சிங்கத்தையும், புலியையும் தன்வசம் வைத்துக்கொண்டு பயம் காட்டுவதாக அக்கதை நீள்கிறது. குரைக்கும் வேட்டை நாய்களின் குரல் வளையை நெரிக்க இந்தக்கோழைக் கும்பல்கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

பேச்சுரிமையும், கருத்துச் சுதந்திரமும் இந்திய மண்ணில் ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் உள்ள அடிப்படை உரிமைஎன அறிவிக்கிறது இந்திய அரசமைப்புச் சட்ட வரைவு எண் 19-ன் உட்பிரிவு ஒன்று. உட்பிரிவு இரண்டு, அதற்கான கட்டுப்பாடுகளையும் தெளிவுபடுத்துகிறது. அதாவது, அனைத்துக் குடிமக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது; இது அடிப்படை உரிமை என விளக்கும் சட்ட வரைவு, எவருக்கும் அச்சமின்றித் தனது கருத்துகளைப் பேசவும், வெளிப்படுத்தவும் உரிமை உண்டு எனவும் எடுத்துரைக்கிறது. அவ்வாறே, ஜனவரி 3, 2023 அன்று கூடிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர், V. இராமசுப்ரமணியன், B.V. நாகரத்தினா, பூஷன் இராமகிருஷ்ணா மற்றும் A.S. பூபனா தலைமையிலான அமர்வு, “நீதிமன்றங்களின் பணி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதே தவிர, மதிப்புமிக்க அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்துவது அல்லஎன்று கடிந்துரைத்ததும்; நீதிமன்றங்கள் மக்களின் உரிமைகளைக் காக்கும்காவலர்’ (Gate-Keeper); அதுவும்மனச்சான்று நிறைந்த காவலர்’ (a Conscience Keeper) என்று குறிப்பிட்டதும் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையை மக்கள் மனங்களில் இன்னும் நீர்த்துப் போகாமல் இருக்கச் செய்திருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் ராகுல் காந்திஎப்படி அனைத்துத் திருடர்களும் மோடி என்ற பொதுவான துணைப் பெயரைக் கொண்டுள்ளனர்?” என்று குறிப்பிட்டது மோடி சமூகத்தினரை, குறிப்பாக ஒன்றிய முதன்மை அமைச்சரின் குடும்பப் பெயர் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், குஜராத் மாநில சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ராகுலுக்கு வழங்கிய இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொண்ட தீர்ப்பு, சற்றே நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையாகவும், கருத்துரிமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவும், தடைக்கல்லாகவும் மக்களால் பார்க்கப்பட்டது. ஆயினும், இத்தண்டனையின் மீது உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 4 ஆம் தேதி தடை விதித்ததும், இந்த உத்தரவைத் தொடர்ந்து ராகுல் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை மக்களவைச் செயலகம் ரத்து செய்ததும் நீதிமன்றத்தின் மீதும், சனநாயகத்தின் மீதும் மீண்டும் நம்பிக்கையை துளிர்விடச் செய்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கும் மணிப்பூர் வன்முறை, இரண்டு வாரங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெல்லி அரசு நிர்வாகத்திற்கு எதிரான அவசரச் சட்ட மசோதா குறித்து மீண்டும் மக்களவைக்கு வந்த ராகுலின் கருத்துகள் வீரியம் கொண்டதாக இருக் கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடியே அவருடைய தீர்க்கமான பேச்சும், அப்பேச்சு வெளிப்படுத்திய கருத்தாக்கமும், ஆணவத்தின் உச்சாணிக் கொம்பிலிருந்த ஆள்வோரை அசைத்து விட்டன. அதன் வெளிப்பாடுதான் ஒன்றிய தலைமை அமைச்சரை நாடாளுமன்றத்திற்கு வந்து பதில் பேசவிடாமல் வீட்டிற்குள்ளே கட்டிப் போட்டது. ஆனாலும், மக்களின் மனநிலை தனக்கெதிராகத் திரும்புவதைக் கண்ட மோடி வேறு வழியின்றி பாராளுமன்றம் ஓடி வந்தார். ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப்பாக்கிற்கு விலை சொன்னகதையாக, எழுப்பப்பட்ட பிரச்சினைகளை விட்டு விட்டு, வேறு ஏதேதோ பதில்களைச் சொல்லி மழுப்பியுள்ளார். தலைமையின் கையறு நிலையைக் கண்ட தொண்டர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள்.

இன்னும் நாம் ஆழமாகச் சிந்தித்து, புது விடியல் நோக்கி ஒன்று கூட வேண்டும் என்றே நடந்தேறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு அறைகூவலிடுகின்றன. ‘தீமைகளைக் கண்டும், தீயவர்களைக் கண்டும் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லைஎன்றும், ‘உண்மையை உரக்கச் சொல்வோம்என்றும் அவை நம்மைத் திடப்படுத்துகின்றன. உண்மையே என்றும் வெல்லும் அல்லவா!

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற  (குறள் 300)

என்ற வள்ளுவரின் குறள் இந்த இடத்தில் என் நினைவுக்கு வருகின்றது. வாய்மையை விட எந்த வகையிலும் சிறந்த வேறு ஒரு பொருளை நாம் காண முடியாது. கதிரவனைச் சில நேரம் கார்முகில் மறைப்பது போல், வாய்மையைச் சில நேரம் சூது கவ்வும்; ஆனால், வாய்மையே இறுதியில் வெல்லும்! பொய்மையும், போலி வேடங்களும் நெடுநாள் நீடிக்காது.

வேடங்கள் போட்டுப் போட்டு அது

தோல் சதை எலும்புக்குள் இறங்கி,

வேடமே உங்கள் இயல்பாகிவிட்டது!”

என்ற புவியரசின் கவிதை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு முற்றிலும் பொருந்துகிறது. ‘நாள் தோறும் நடிப்பது போதும்; நீதிக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டுகளும், கூச்சல்களும் போதும்; உண்மையின் வழி நில்லுங்கள்என நாம் அன்றாடம் உரைப்பது ஏனோ அவர்கள் காதில் விழுவதே இல்லை. செவி இருந்தும் கேளாக் காதினராய் உள்ளனர்.

நாம் விழித்துக்கொள்வோம்! அண்மைக் காலங்களில் மக்கள் மத்தியில் ஒருவகையான நம்பிக்கைத் தளிர்விடுவதை உணர்கிறேன். நீதிமன்றங்களின் தீர்ப்புகள் எப்போதும் இல்லாவிட்டாலும், அவ்வப்போது நம்பிக்கையின் பக்கம் நிற்பதைக் காண முடிகிறது. உண்மை உறங்கவில்லை என்பதை உணர்த்துகிறது. இத்தகைய நம்பிக்கையால், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் எனும் ஆழியில், ஒற்றை விரல் எனும் துடுப்பால், நயவஞ்சக அலைகளுக்கு மத்தியில் துணிவுடன் பயணித்து, கண்கள் தேடும் விடியல் எனும்கரைகண்டிடுவோம்! இன்றே உண்மையை உரக்கச் சொல்வோம்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment