No icon

நம்பிக்‘கை’யில்லாத தீர்மானம்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது, ஆளும் கட்சியின் மீது எதிர்க்கட்சி தொடுக்கும் பேராயுதம். இது மிகவும் அரிதாகப் பயன்படுத்தப்பட வேண்டிய அரசியல் ஆயுதமும் கூட. எப்போதெல்லாம் இத்தகைய தீர்மானம் நாடாளுமன்றத்தில் வரவிருக்கிறதோ அப்போதெல்லாம் ஆளும் கட்சிக்குத் தர்மசங்கடமே! எதிர்க்கட்சிகள் விமர்சன அம்புகளாலும், ஆளும் கட்சியின் கையறுநிலையின்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளாலும், அனல் பறக்கும் விவாதங்களாலும் ஆள்வோரை நிலைகுலையச் செய்துவிடுவார்கள்.

சுதந்திர இந்தியாவின் 76 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில், இதுவரை 28 முறை நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தற்போது பற்றி எரியும் மணிப்பூர் கலவரத்தாலும், அரியானா வன்முறை நிகழ்வுகளாலும், டெல்லி நிர்வாகச் சட்டத் திருத்த மசோதாவினாலும் பெரிதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இவ்வாண்டின் குளிர்காலக் கூட்டத்தொடர், அதன் வீரியம் இழந்து, இருதரப்பிலும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்பதே எதார்த்த நிலை.

ஒட்டுமொத்த இந்தியாவிலும், குறிப்பாக பி.ஜே.பி. ஆள்கின்ற மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, வன்முறைச் சம்பவங்களும், மனிதாபிமானமற்றக் கோர நிகழ்வுகளும் அரங்கேறும் சூழலில், அதற்கான உரிய பதிலைச் சொல்ல வேண்டிய ஒன்றிய முதன்மை அமைச்சர், நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதம் நடைபெறும்போது, நாடாளுமன்றமே வராமல் பதுங்கிக் கொண்டது பார்ப்பவர்களுக்கு நகைப்பை உண்டுபண்ணியது. ‘இது சிரிப்பு போலீஸ்’ என்பது போலவே எண்ணத் தோன்றியது. ஆயினும், கடைசி நாளில் கம்பீரமாக நாடாளுமன்றம் வந்தவர், ‘பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய’கதையாகச் சொற்சிலம்பம் ஆடினார். ‘விலைபோன’ ஊடகங்களோ அவரது பிரசங்கத்தைக் கேட்டுப் புல்லரித்துப் போயின. முன்னுக்குப்பின் முரணாக அளித்துக் கொண்டிருந்த அவரது விளக்கங்கள் சொந்தக் கட்சியினரையே பொறுமை இழக்கச் செய்தது என்றால் மிகையாகாது.

இத்தொடரில் எதிர்க்கட்சிகளும் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பொங்கி பிரவாகம் எடுக்க வேண்டிய உணர்ச்சிக் குரல்,

உயர்த்தப்பட வேண்டிய ‘கை’ அவையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தது பெரும் முட்டாள்தனம் என்கிறார்கள் சான்றோர்கள். அது ஆளும் கட்சிக்குச் சாதகமாகிப் போகும் என்பதை ஏனோ கூட்டணி ‘கை’கள் மறந்துபோயின.

தனிநபர் எண்மத் தரவுப் பாதுகாப்பு மசோதா, டெல்லி அரசு நிர்வாகச் சட்டத்திருத்த மசோதா, இராணுவப் படை ஒருங்கிணைப்பு மசோதா, வனச்சட்ட (திருத்த) மசோதா எனச் சில முக்கிய மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேறியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சூழல் ஆளும் கட்சியின் எதேச்சதிகார எண்ணத்தையும், சர்வாதிகாரப் போக்கையுமே காட்டுகிறது. ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ந்து, நிறை-குறைகளை அலசி ஆராய்வதுதானே ஓர் அரசின் மேன்மையான செயல்பாடாக இருக்க முடியும்! ஐயன் வள்ளுவரின் வாக்கு இங்கே சிந்திக்கத்தக்கது.

‘கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு’ (குறள் 631)

அதாவது, ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்றக் காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே நல்ல அமைச்சன் என்பதை இங்கே நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லோரையும் அடக்குமுறைக்கு உட்படுத்தும் இன்றைய இந்த அரசியல் சூழல் உருவாவதற்குக் காரணமான மக்கள் நாம்தான் வெட்கப்பட வேண்டும்! இத்தகைய ஆட்சி முறையும், அரசியல் தலைமையும் தொடரும் என்ற ஒன்றியத் தலைமை அமைச்சரின் பகல் கனவு, அவரின் உச்சக்கட்ட ஆணவத்தின் வெளிப்பாடு. 77-வது விடுதலைத் தின விழா பேருரையிலே “அடுத்த ஆண்டு விடுதலைத் தினத்தின்போதும், நாட்டின் வளர்ச்சிப் பாதை குறித்து அதிக நம்பிக்கையுடன் டெல்லி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவேன்” என்று குறிப்பிட்டுப் பேசுவது வெற்றிக்கான அடித்தளத்தை முன்கூட்டியே திரைமறைவில் அரங்கேற்றி விட்டார்களோ என்றே ஐயம் கொள்ளச் செய்கிறது.

“வளர்ச்சியின் பொற்காலமான அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு அடையும் முன்னேற்றமானது, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பயனளிக்கும்” என வாய் கூசாமல் குறிப்பிடுகிறார் பிரதமர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஏற்கெனவே நாம் அதாளப் பாதாளத்திற்குச் சென்றுவிட்டோம் என்கிறார்கள் பொருளாதார, மனிதவளக் குறியீட்டாளர்கள். ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று முந்தையத் தேர்தலில் முன் வைத்தவர்கள் இன்று ‘பொற்காலம் நோக்கிய இந்தியா’ என்று நம் காதில் பூ சுற்றுகிறார்கள். கடந்த ஆண்டுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பெருமைப்படுவதற்குப் பதிலாக, எதிர்காலக் கனவைச் சொல்லி, அதை வர்ணித்தே பூரிப்படைந்து கொண்டிருக்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர். கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியவில்லை; ஆனால், அவர் வானமேறி வைகுந்தம் பார்க்கலாம் என்று அழைக்கிறார். ‘புதிய திட்டங்கள் ஏதேனும் அறிவிப்பார்’ என்று காத்திருந்த நமக்குத்தான் வழக்கம்போல ‘மீண்டும் சந்திப்போம்!’ என்ற புன்னகை - பிரியாவிடை!

‘சௌதிகாரராகக்’ கடந்த தேர்தலில் வந்த ஏழைத் தாயின் புதல்வன் இன்று நம் வீட்டின் உறுப்பினராகி ‘என் குடும்ப உறுப்பினர்களே’ எனக் கூறத் தொடங்கி விட்டார். வெளியே நின்றவர் இன்று வீட்டுக்குள் வந்துவிட்டார். வெளியே நின்றபோதே கூட்டுக் குடும்பத்தில் வேட்டு வைத்தவர், வீட்டுக்குள் புகுந்துவிட்டால் என்ன ஆகுமோ என்பதுதான் பலரையும் பதைபதைக்க வைக்கிறது.

இளைஞர்களின் திறன், சனநாயகம், பன்முகத்தன்மை இவைகள்தாம் இந்தியாவின் கனவைச் சுமந்து நிற்கும் பெருங்கருவிகள் என்றவர், ஏனோ, இதைத்தான் நான் (நாம்) தொலைத்துக் கொண்டிருக்கிறேன் (றோம்) என்பதை எண்ணத் தவறிவிட்டார். இளையோருக்கு வேலையில்லாத் திண்டாட்டம், சனநாயகத்தின் குரல்வளை இறுக்கப்பட்டச் சூழல், பன்முகத்தன்மை சிதைக்கப்பட்டு ‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி’ என்று கொக்கரிக்கும் முழக்கம், ஆயினும், எதுவுமே நிகழாதது போன்று பேசுகின்றார்.

‘அகிலத்தின் பார்வையில்

அர்த்தநாரியாய் அறிவித்துக் கொண்டாலும்

உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது

ஊர்த்தவ தாண்டவ வன்மம்!’

எனும் சுமதி பெனடிக்ட்டின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது. ஆகவே, உண்மை அறிந்து, நாட்டின் எதிர்காலம் எண்ணி நாம் நம்பி ‘கை’ கோர்ப்போமா!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment