
விண்வெளி ஆய்வில் புதிய வரலாறு படைத்த இந்தியா!
ஆகஸ்டு 23, 2023 - இந்திய விண்வெளி ஆய்வின் பொன்னாள்! செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘சந்திரயான்-3’ எனும் இந்திய விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நாள்! அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று, புதிய வரலாறு படைத்திருக்கிறது. இது இந்திய அறிவியல் துறையில் ஒரு வரலாற்று நிகழ்வு.
3895 கிலோ எடையுடன், ரூ.250 கோடி செலவில் பூமியிலிருந்து 3.84 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள நிலவுக்கு இந்த விண்கலம் ஜூலை 14 ஆம் நாள் எல்.வி.எம்.-3 இராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஏறக்குறைய நாற்பது நாள்கள் பயணத்திற்குப் பிறகு ஆகஸ்டு 23 மாலை 6.04 மணிக்கு, நிலவின் தென் துருவத்துக்கு அருகே மான்சினஸ் சி மற்றும் போகுஸ் லாவஸ்கி பள்ளங்களுக்கு இடையே வெற்றிகரமாக நிலவில் இறங்கிய சந்திரயான்-3 அனுப்பிய குறுஞ்செய்தியான ‘இலக்கை அடைந்துவிட்டேன்... நீங்களும் தான்’ என்ற செய்தி இந்திய விஞ்ஞானிகளை மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டையும் உற்சாகமடையச் செய்திருக்கிறது.
இதன் வாயிலாக, உலக அளவில் இன்று இந்திய அறிவியல் துறையில் குறிப்பாக, விண்வெளி ஆய்வுத் துறையாம் ‘இஸ்ரோ’வின் மதிப்பு உயர்ந்துள்ளது. விண்வெளி சார்ந்த ஆய்வில் இந்தியா அடுத்தக் கட்ட நிகழ்வுகளுக்குத் தயாராகிவிட்டதையே இந்த வெற்றி உறுதிப்படுத்துகிறது. இது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு, இந்திய அறிவியல் துறைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
நிலவில் ஹீலியம் போன்ற வாயு மூலக்கூறுகள், நிலவு உருவான விதம், பனிக்கட்டிகளின் நிலை, தனிமங்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்யச் சென்றிருக்கும் இந்த சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி, நிலவில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் வாய்ப்பை இந்தியாவுக்குப் பெற்றுத்தரும் என்றே விஞ்ஞானிகள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
இந்திய விண்வெளி ஆய்வில் சந்திரயான்-3 வெற்றிக்காக அயராது உழைத்த ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் அனைவருமே நம் பாராட்டுக்குரியவர்கள்! குறிப்பாக, இதன் திட்ட இயக்குநர் வீர முத்துவேல் நமது சிறப்பான பாராட்டிற்குரியவர். தமிழ் நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த இவரால் இன்று தமிழ்நாடும், இந்தியாவும் உலக அரங்கில் பெருமை கண்டிருக்கிறது. இத்துடன் சந்திரயான் 1, 2, 3 என மூன்று திட்டங்களையும் தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்தியவர்களான மயில்சாமி அண்ணா துரை, மு. வனிதா முத்தையா, ப. வீர முத்துவேல் ஆகிய மூவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த அறிவியலாளர்கள் என்பது நமக்குக் கூடு தல் மகிழ்ச்சி. இவர்களின் திறமையும், உழைப்பும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் போற்றுதற்குரியது. அன்று ‘பொக் ரான்’ அணுகுண்டு சோதனையின் மூலம் உலகத்தையே இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த இந்திய ஏவுகணை நாயகன் நமது மேனாள் குடியரசுத் தலைவர் மேன்மைமிகு A.P.J. அப்துல்கலாம் அவர்களைத் தொடர்ந்து, இன்றைய இளையோரின் எழுச்சி நாயகர்களாகத் திகழ்பவர்கள் இவர்கள். இவர்கள் தமிழர்கள் என்பதனில் நமக்குத் தனிப்பட்ட பெருமையே!
விண்வெளி ஆய்வில் புதிய வரலாறு படைத்துள்ள இந்த வெற்றியால் புதிய ஆற்றலும், புதிய நம்பிக்கையும் நம்மில் பிறந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. ‘இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும்’ என்ற பேருண்மையை இது உணர்த்துகிறது. இன்னும் பல நாடுகள் இந்தியாவுடன் கைகோர்த்து விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள இது வழிவகுக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் ‘பேக் டு மூன்’ திட்டத்திற்கு இந்தியா பங்களிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது இங்கே நினைவுகூறத்தக்கது. அவ்வாறே, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வின் தலைவர் பில் நெல்சன், இங்கிலாந்து விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் அனு ஓஜா மற்றும் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் ஆகியோர் “சந்திரயான்-3 இன் வெற்றி விண்வெளி ஆய்வுப் பார்வையை விசாலமாக்கியுள்ளது” என்றே குறிப்பிடுகின்றனர்.
சந்திரயான்-3 சுமந்து சென்றுள்ள ‘பிரக்யான்’ என்ற உலாவிக் கலம் எடுத்து அனுப்ப உள்ள ஒளிப் படங்களால் நிலவின் தொலைவு, நிலவின் இயக்கங்கள், ஈர்ப்பு விசை குறித்த தத்துவ ஆய்வுகள் எனப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. மேலும், இதன் மூலம் புதிய விண்வெளி ‘தொழில் போட்டிகள்’ உருவாகும் என்பதும் அதிர்ச்சி நிறைந்த செய்தியாக இருக்கிறது. இன்றையச் சூழலில் விண்வெளி என்பது வர்த்தகத்துக்கான களமாக மாறிக் கொண்டிருக்கிறது. நிலவின் தென் பகுதியில் இது வரை யாரும் தரையிறங்காத பகுதியில் இந்தியா தன் ஆய்வைத் தொடங்குவது இந்தியாவுக்கு மேலும் பல சாதகமான சூழலையே உருவாக்கும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும், இங்குதான் உறைநிலையில் தண்ணீர் இருக்கிறது என்பதும், இதன் மூலம் அங்கு எதிர்காலத்தில் குடியேற்றம் நிகழும் என்பதும் மெய்படும் கனவுகளே!
ஆயினும், 1967 இல் ஐ.நா. சபை மேற்கொண்ட விண்வெளி ஒப்பந்தம், நிலவுக்கு எந்த ஒரு நாடும் சொந்தம் கொண்டாடுவதைத் தடை செய்கிறது. ஆனால், வணிக நடைமுறைகளைத் தடுக்க எந்த விதிமுறையும் இல்லை என்பதும் நினைவுகூறத் தக்கது. ஆகவே, நிலவை எல்கை வரைந்து தன்வயப்படுத்தும் சூழலும், விண்வெளி ஆய்விலும், வர்த்தகத் துறையிலும் தனியார் ஈடுபாடு உருவாகும் என்றால், 200 கோடி செலவில் நமது வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த விண்வெளி ஆய்வுகள் யாருக்கானது என்பதே நமது கேள்வி!
3.84 இலட்சம் கி.மீ. தூரத்தைக் கடந்து நிலாவில் தடம் பதிக்க முடிந்த நம்மால், இந்த அரசால் வெறும் 2425 கி.மீ. தூரமே உள்ள மணிப்பூருக்குச் செல்ல இயலவில்லை அல்லது செல்ல மனமில்லை. வெற்றிக் களிப்பின் மத்தியில் நம்மை உறுத்தும் வேதனைமிகு செயல் இது!
அன்புத் தோழமையில்,
அருள்பணி. செ. இராஜசேகரன்
Comment