ஆசிரியர் பக்கம்
இது இந்தியாவா? இல்லை பாரதமா?
நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் தொடர்ந்து சீர்குலைத்து வரும் ‘இந்துத்துவா’ கொள்கையில் வேரூன்றிய ஒன்றிய பா.ஜ.க அரசு, அடுத்து ஓர் உத்தியை இப்போது முன்னெடுத்து இருக்கிறது. ‘ஜி 20’ மாநாட்டின் விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்தியக் குடியரசுத் தலைவர்’ என்பதற்குப் பதிலாக, ‘பாரதக் குடியரசுத் தலைவர்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது. வழக்கமாக ‘இந்தியாவின் குடியரசுத் தலைவர்’ என்றே அறியப்படும் முதல் குடிமகனின்(ளின்) பதவியில் தற்போது ‘பாரதம்’ என்ற சொல்லாடலைப் புகுத்துவதன் மூலம், இந்தியாவைப் ‘பாரதம்’ என அழைக்க முற்படுகின்றனர்.
விடுதலை பெற்ற சூழலில், அரசமைப்புச் சட்டத்தின் முதல் வரியில் ‘இந்தியா என்கிற பாரதம்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர் வழங்கிய ‘இந்தியா’ என்கின்ற பெயர் அகற்றப்படலாம் அல்லது அகற்றப்பட வேண்டும் என்கிற உட்கருத்தைக் கொண்டதாகவே இருக்கிறது என்றும், அவ்வாறே முண்டாசு கவிஞனின் விடுதலை உணர்வூட்டிய புரட்சி வரிகளில் ‘பாரத தேசம்’, ‘பாரத மாதா’, ‘பாரத சமுதாயம்’ எனும் சொல்லாடல்களைப் பயன்படுத்தி அன்றே ‘புதிய பாரதம்’ பற்றி தீர்க்கதரிசனம் கண்டார் எனவும் முட்டுக்கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘இந்தியா’ எனும் பெயர் வெள்ளையர்கள் வைத்தது என்று இந்த மாற்றத்திற்கு வியாக்கியானம் பேசும் இந்த நடிப்புச் ‘சுதேசிகள்’, தாங்கள் தாங்கி நிற்கும் ‘இந்து’ என்ற அடைமொழியையும் அதே வெள்ளையர்தாம் வைத்தார்கள் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அல்லது நம்மை மறக்கச் சொல்கிறார்கள். இப்படி ஒருசாரார் இருக்க, மற்றொருபுறம் 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் ‘கைப்பாவையாக’ இருந்த அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், நீதிபதி U.U. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு ‘பாரதம் அல்லது இந்தியா எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்’ என்று இந்தப் பிரச்சினைக்கு அன்றே ‘பிள்ளையார் சுழி’ போட்டுத் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
இத்தகைய எண்ணத்தில் அரசியல் சாசனத்திலிருந்தே ‘இந்தியா’ என்ற சொல்லை நீக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளிவரும் செய்திகள் இன்னும் அதிர்ச்சியூட்டுகின்றன. மேலும், இம்மாதம் 18 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் ஒன்றிய அரசு இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றத் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகத் திட்டமிட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது. இந்நகர்வை மேலோட்டமாக கடந்து சென்றுவிட முடியாது. இதன் உள்ளே இருக்கும் ‘இராம இராஜ்ஜியம், இந்து நாடு’ என்ற முழக்கத்தின் எதிரொலியை நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும்.
இந்தியாவைப் ‘பாரதமாக’ மாற்றுவது என்பது அவர்களின் நீண்ட கால கனவு, அதை ஒவ்வொரு தேர்தலின் போதும் மறைவாக வலியுறுத்தி வந்துள்ளனர். மேலும், அண்மையில் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘இ-ந்-தி-யா’ எனப் பெயர் சூட்டியதிலிருந்தே பா.ஜ.க.விற்கு இப்பெயர் கசப்பைத் தந்து வருகிறது. தமிழக முதல்வர் குறிப்பிடுவதுபோல, “இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப்போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த இந்தப் (சனாதன, பாசிச, இந்துத்துவா) பா.ஜ.க. அரசால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியா’ என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்துள்ளது.” இது ஆளும் பா.ஜ.க. விற்கு வெட்கக்கேடு! இது என்ன எண் கணித ‘இராசிபலன்’, பெயர் பொருத்த நம்பிக்கையா? வளர்ச்சி, செழிப்பு, உயர்வு, வளமை, விடியல் என்பதெல்லாம் வெற்றுப் ‘பெயர் மாற்றத்தால்’ வந்துவிடுமா? ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’, ‘மேக் இன் இந் தியா’, ‘நியூ இந்தியா’ என்று தினமும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு என்னே ஒரு ஞானம் இந்த வேளையில் பிறந்திருக்கிறது!
ஒன்றிய அரசின் இச்செயல் ‘முட்டாள்தனமான முடிவு’ என்றும், எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதால் எங்களைக் கண்டு பா.ஜ.க. அரசு அஞ்சுகிறது என்றும், நாட்டின் பெயரை மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை என்றும், இத்தகைய செயல் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி, வரலாற்றைத் திரிக்கும் செயல் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் வேளையில்... இத்தகைய மாற்றத்திற்கான அவசியம் என்ன? என்பதே நமது கேள்வி.
அப்படி என்றால், அரசமைப்புச் சட்டத்தின் 1வது பிரிவு ‘இந்தியா என்கிற பாரதம்’ என்பதற்குப் பதிலாக, ‘இந்தியா என்று அறியப்பட்ட பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று மாற்றப்படுமா? இல்லை ‘இந்தியா’ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு ‘பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ எனத் திரிக்கப்படுமா? இதனால் எதிர்வரும் சவால்களை இவர்கள் அறிவார்களா? எதிர்வினையை அறியாமல்தான் ‘பண மதிப்பிழப்பு’ என்ற ‘பாம்பு புற்றுக்குள்’ கையை விட்டு விட்டு, பின்பு கதறிக் கொண்டிருந்தார்கள்; தாங்கள் அறிவிலிகள் என்பதை அம்பலப்படுத்திக் கொண்டார்கள்.
‘இந்தியா’ என்னும் பெயர் நேற்று இன்று அல்ல, விடுதலைக்கு முன்பிருந்தே உலக அரங்கில் அறியப்பட்ட பெயர். இதை மாற்றுவதால் நிர்வாகத்தில், ஆவணப் படிவங்கள் மாற்றத்தில், கோப்புகள் கையாள்வதில், அரசு திட்டங்களின் பெயர்களில், இந்திய வங்கிகளின் பெயர்களில், எல்லாவற்றிற்கும் மேலாக அடையாள அட்டைகளில், கடவுச் சீட்டுகளில் உடனடி மாற்றம் கொண்டுவர வேண்டும் அல்லவா! அதற்கான தேவையற்ற பொருள் செலவீனங்களை எண்ணிப் பார்க்கும்போது, ஒரு சாமானியனாக மன வேதனை தருகிறது.
இன்றைய சூழலில், இங்கே உண்மையான நாட்டுப் பற்று ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதே எதார்த்தம். இங்கு நடப்பது வெறும் அதிகார பொம்மலாட்டம். இங்கே அறிவாளிகள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். அந்த வெற்றிடத்தில் கோமாளிகள் கூடிக் குதூகலிக்கின்றனர். உண்மையில் இங்கு கோமாளிகள்தான் அப்புறப்படுத்தப்பட வேண்டும்; அவர்களின் அராஜகம்தான் ஒடுக்கப்பட வேண்டும். அதிகாரம் பொதுநலம் கொண்டோரால் கைப்பற்றப்பட வேண்டும். இத்தகைய சூழலில், “உண்மையும், நாட்டுப்பற்றும் உள்ளவர்களாக, சுய ஆதாயங்களைவிட நாட்டின் நலனே உயர்ந்தது என்ற எண்ணம் உடையவராகப் பெரும்பான்மை மக்கள் இருக்கும் இடத்தில்தான் சுயராஜ்ஜியம் நீடித்து நிலவும். சுயராஜ்ஜியம் என்பது பலர் சேர்ந்து ஆள்வது. அந்தப் பலர் நல்லொழுக்கம் அற்றவர்களாக, தன்னலத்தில் திளைப்பவர்களாக இருந்துவிட்டால்... அவர்கள் நடத்தும் ஆட்சி அராஜகமாக அமைந்துவிடும். அதுபோன்ற ஆட்சியை ஒழுங்குபடுத்தவும், தவறான சக்திகளை அதிகாரத்திலிருந்து அகற்றவும் மக்களுக்குள்ள ஆற்றலை உணரும்படி அவர்களுக்குப் போதிக்க வேண்டும்!” என்ற தேசத்தந்தை அண்ணல் காந்தியின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.
மாற்றம் பெயரில் மட்டுமல்ல, அதிகாரத்திலும் நிகழும் என்பதே எம் நம்பிக்கை!
அன்புத் தோழமையில்,
அருள்பணி. செ. இராஜசேகரன்
Comment