No icon

ஆசிரியர் பக்கம்

பாமாலையாகும் செபமாலை!

என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!

“நம் அன்னை மரியாவின் இனிய திருநாமம் எப்போதும் உங்கள் உதடுகளில் இருக்கட்டும்; உங்கள் உள்ளத்திலிருந்து ஒரு போதும் நீங்காதிருக்கட்டும்; துயர வேளைகளில் கூவி அழையுங்கள், அன்னை உடன் வருவார்; பாதுகாப்பார்; உன்னத அமைதி தருவார்” என்கிறார் தூய அவிலா தெரசாள். இத்தகைய இனிமையான அன்னையின் திருநாமம் “புனிதத்தின் கருவூலத்திலிருந்து” வந்தது என்கிறார் தூய பீட்டர் தமியான்.

அன்னைக்கு ஆயிரம் பெயர்கள் நாம் சூட்டியிருந்தாலும், ‘செபமாலை அன்னை’ எனும் பெயரும், அதன் பொருள் பொதிந்த ஆன்மிகச் செயலான ‘செபமாலை செபிப்பதும்’ நாம் அன்றாடம் அவரை நினைவுகூறும் சிறப்பு வழிமுறையாகும். இந்தப் பக்தி முயற்சி நமது குடும்பத்தை ஒன்றித்து, திரு அவையைத் திடப்படுத்தி, சமூகத்தைப் புதுப்பிக்கும் உன்னதச் செயல். இது இறை வார்த்தையையும், மறை வார்த்தையையும் இணைத்துக் கோர்க்கப்பட்ட அற்புதமான செபம். இதில், ‘அருள் மிகப் பெற்ற மரியே!’ என்ற பேருண்மையையும், ‘தூய மரியே, இறைவனின் தாயே’ என உச்சரிக்கும்போது திரு அவை தந்த கோட்பாட்டையும் நினைவுகூர்ந்து, ‘எங்களுக்காக’ என வேண்டுவதன் மூலம் ஒன்றித்தத் திரு அவைக்காக, சமூகத்திற்காகச் செபிக்க அழைக்கப்படுகிறோம். “செபமாலை மணிகள் ஒரு நூலால் இணைக்கப்பட்டிருப்பதுபோல, இப்பிரபஞ்சத்தில் உள்ள நாள்களும், கோள்களும் ஒன்றாக ஈர்ப்பு விசை எனும் நூலால் இணைக்கப்பட்டிருக்கின்றன. நம்பிக்கையாளர் இறைவனுடைய பெயரை உச்சரித்து, செபமாலை மணிகளை உருட்டும்போது இறைவனின் பண்புகளை, படைப்புகளை மேன்மைப்படுத்துகிறார்” என அறிவியலில் ஆன்மிகத்தை ஒப்பிட்டுக் கூறிய கவிக்கோ அப்துல் ரகுமானின் சிந்தனை இங்கே கவனிக்கத்தக்கது. இப்புகழ் மாலையில் நாம் அன்னையை மகிமைப்படுத்துகிறோம்; அவர் வழியாக நம்மைப் படைத்தவரை மேன்மைப்படுத்துகிறோம்!

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் அன்னையின் திருத்தலங்கள் சமய ஒன்றிப்பின் அடையாளமாகவும், எல்லா மதத்தவரும் கூடும் சரணாலயமாகவும் விளங்குவது கண்கூடு. அத்தகைய சமய ஒன்றிப்பின் அடையாளமாக விளங்கும் அன்னை மரியாவின் திருத்தலங்களில் கோவை மறைமாவட்டம், கருமத்தம்பட்டி பங்கு தூய செபமாலை அன்னையின் பசிலிக்கா குறிப்பிடத்தக்க ஒன்று. 383 ஆம் ஆண்டின் பெருவிழாவைச் சிறப்பிக்கும் இப்பசிலிக்காவின் சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம் ‘நம் வாழ்வு’ இவ்விதழைச் சிறப்பிதழாக வெளிக்கொணரப் பேருதவியாக இருந்த திருத்தல நிர்வாகத்தினரை மனதார வாழ்த்துகிறேன். இந்நாள்களில், திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு அறிவுறுத்துவது போன்று, தினசரி வாழ்வில் நமது நம்பிக்கையை எப்படி வாழ்வது மற்றும் ஆண்டவருக்கு நம்முடைய வாழ்வில் எப்படி அதிக இடமளிப்பது என்பது குறித்து நமக்குக் கற்றுத் தருமாறு நம் அன்னையிடம் கேட்போம்!

செபம் செய்வோம்; தினம் செபமாலை சொல்வோம்; பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம்!’

அன்புத் தோழமையில்,  முதன்மை ஆசிரியர்

Comment