No icon

ஆசிரியர் பக்கம்

ஆற்றலே,  உலகை ஆற்றுப்படுத்து!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேறவும்

ஓது பற்பல நூல் வகை கற்கவும்...

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்!

உடையவள் சக்தி ஆண் பெண்ணிரண்டும்

ஒருநிகர் செய்துரிமை சமைத்தாள்;

இடையிலே பட்ட கீழ்நிலை கண்டீர்

இதற்கு நாமொருப் பட்டிருப்போமோ?’

என்று பெண்ணின் உரிமை, அவளின் ஆற்றல் கண்டு அன்றே வியந்தான் பாரதி. இலக்கியங்களும், இதிகாசங்களும் பெண்ணை ஆற்றலின் வடிவமாக, அதன் பிறப்பிடமாக உருவகப்படுத்துகின்றன. அத்தகைய ஆற்றலைச் சமூகத்தில் அடையாளம் காண, விடுதலைப் பெற்ற இந்தியாவிற்கு 75 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அமைப்புகளில் மூன்றிலொரு பங்கு இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்று மேனாள் பிரதமர் தேவகவுடாவின் தலைமையில் இயங்கிய ஐக்கிய முன்னணி அரசு செப்டம்பர் 12, 1996 இல் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த மசோதா, 27 ஆண்டுகள் விவாதத்திற்குப் பிறகு அண்மையில் இறுதிப் புள்ளியை எட்டியிருக்கிறது.

செப்டம்பர் 19 ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாகவும், செப்டம்பர் 21 அன்று மாநிலங்கள் அவையிலும் இந்தமகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்குநாரி சக்தி வந்தன் அதினியம்அதாவதுபெண் சக்திக்கு வணக்கம்என்று பெயரிடப்பட்டுள்ளது. 1996-க்குப் பிறகு வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், பின்பு மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்திலும் பலமுறை தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்ற முடியவில்லை. ஏன் இத்தனை ஆண்டுகள் இந்தப் போராட்டம்? சமூகம் என்பது ஆண்-பெண் சமத்துவத்தில் மலர்ந்தது தானே! ஆனால், நம் வரலாறு சற்றே சுடும் வகையில் இருக்கிறது.

இட ஒதுக்கீடுஎன்பது இந்திய அரசியலில், சமூக அமைப்பில் ஏதோ ஒரு புதிய சொல்லாடல் என்று எண்ணி விடக்கூடாது. வேதகாலம் தொட்டே அது இங்கு இரண்டறப் புரையோடிக் கிடக்கிறது. தொழிலை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சாதியப் பிரிவுகள், அதனால் உருவான உயர்குடி - அடித்தட்டு என்ற கட்டமைப்பு, இவற்றிற்கு மத்தியில்சூத்திரர்கள்எனும் அடித்தட்டு மக்களுக்காக 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜோதிபா புலேவின் இயக்கத்தால், அதன் அழுத்தத்தால் வந்தது சூத்திரர்களுக்கான இட ஒதுக்கீடு. இப்போராட்டம் இன்றும் பல வடிவங்களில், பல சமூகங்களில், பல சமய உட்பிரிவுகளில் தொடர்வது வேதனை!

இட ஒதுக்கீடுஎன்பது சமூக நீதிக்கான அடிப்படை அளவுகோல். நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், விடுதலை என்பவை யாவருக்கும் பொதுவானதாக, சமமானதாக இருக்க வேண்டும். சமூகத்தின் சகல தளங்களிலும் பெண் என்பவள் சமூகக் கட்டுப்பாடின்றி, தனித்துச் செயல்பட ஆணாதிக்கம் அனுமதிப்பதில்லை. “எல்லாப் பூட்டுகளையும் திறப்பதற்கு ஏற்ற திறவு கோல் அரசியல் அதிகாரமே!” என்றார் அம்பேத்கர். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படுவதற்கான வழிமுறைகளில் ஒன்றுதான் பெண்களுக்கான அரசியல் பிரவேசம். ஆனால், இறுக்கமாக, கெட்டித்தட்டிப்போன ஆணாதிக்கம் அவ்வளவு எளிதாகப் பெண்களுக்கு வழிவிடாது. ஆள்வோர் பெண்களாக இருந்தாலும், அவர்களை ஆட்டி வைப்போர் ஆண்களாகவே இருக்கிறார்கள். உள்ளாட்சி மன்றங்களில் நடக்கும் இந்தத்திரைமறைவு அரசியல்கூத்து நாடாளுமன்றத்தில் மட்டும் இல்லாமல் போய் விடுமா? விடாதுதான்; இருந்தாலும்... களைகள் வளர்வதாலேயே பயிருக்கு நீர் பாய்ச்சுவதை நாம் நிறுத்த முடியாது அல்லவா?

முற்போக்குச் சிந்தனை உடைய நாடு!’ என்று பெருமிதம் கொள்ளும் அமெரிக்காவில் கூட 1920, ஆகஸ்டுக்குப் பின்புதான் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். ‘நாடாளுமன்றத்தின் தாய்என்று போற்றப்படும் இங்கிலாந்தில் பல்வேறு கிளர்ச்சிகளுக்குப் பின்னரே 1928 இல் பெண்கள் வாக்குரிமையை அடைய முடிந் தது. பெண்ணியத்துக்கு அடிப்படை ஆதார மான சமத்துவம், விடுதலை பற்றிய  கருத்தாக்கங்களின் விளைநிலமான பிரான்சில் கூட பெண்களுக்கு வாக்குரிமை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அவ்வாறே, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பும் உலகின் பல நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை வெறும் கனவாகவே நிலவியது. ஆனால், இந்தியப் பெண்களுக்கு வாக்குரிமை எளிதாகக் கிட்டியது. ஆயினும், அரசு நிர்வாகத்தில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ‘கவிக்குயில்சரோஜினி நாயுடு, அன்னிபெசன்ட் அம்மையார், இந்திரா காந்தி, சோனியா, மம்தா, மாயாவதி, ஜெயலலிதா எனக் கட்சிகளின் தலைமையைத் தனிநபராக அலங்கரித்தாலும் இந்திய அரசியலில்- நிர்வாகத்தில் சட்டப்பூர்வ பிரதிநிதித்துவம் என்பது கேள்விக்குறியாகவே தொடர்ந்தது

இத்தகைய சூழலில், ‘இந்தியப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க கடவுள் தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்என்று மார்தட்டிக் கொள்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர். இதுகுருவி உட்கார, பனம்பழம் விழுந்த கதைஎன்பதை மக்கள் யாவரும் அறிவர். உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்த மேனாள் பிரதமர் ராஜூவ் காந்தியை இந்த இடத்தில் நாம் நினைவு கூர்தல் வேண்டும். ஆயினும், நாட்டில் பெரும் பகுதியினராக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (.பி.சி.) மகளிர் இட ஒதுக்கீடு இந்த மசோதாவில் தனி ஒதுக்கீடு வழங்காததால் இம்மசோதா முழு மையடையவில்லை என்ற ராகுலின் குரலும் கவனிக்கத்தக்கதே!

நீண்ட நெடிய காலத்திற்குப் பின் இம்மசோதா நிறைவேற்றப்பட்டாலும், இது தனதுஇலக்கைஎப்போது அடையும்? என்ற கேள்வியை இம்மசோதாவின் ஒரு பகுதி எழுப்பியுள்ளது. விடை தெரியாத இந்தக் கேள்விக்கு ஒரு முகாந்திரம் இருக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தொகுதிகள், மறுசீரமைப்புச் செய்யப்பட்ட பின்னரே இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மசோதாவின் அந்தப் பகுதி குறிப்பிடுகிறது. மக்கள்தொகை எப்போது கணக்கெடுக்கப்படும்? தெரியாது! தொகுதிகள் என்றைக்கு மறு வரையறை செய்யப்படும்? அதுவும் தெரியாது. காரணம், இரண்டுக்கும் எந்தக் காலக்கெடுவும் விதிக்கப் படவில்லை. இதனால்தான் மசோதாவை ஆதரித்துப் பாராளுமன்றத்தில் பேசிய காங்கிரசின் சோனியா காந்திஇன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார். பெண்ணுரிமைப் போராளிகளாகப் புது அவதாரம் எடுத்திருக்கும் பா...வினரிட மிருந்து இதற்குப் பதிலாக வந்தது ஆழ்ந்த மௌனமே.

 இன்றைய சூழலில் பல்வேறு அரசு நிறுவனங்களில் .பி.சி. சமூகத்தினரின் பங்களிப்புப் பற்றி ஆய்வு செய்கின்றபோது, மத்திய அரசின் 90 செயலர்களில் 3 நபர்கள் மட்டுமே என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு மூலம்தான் இப்பிரச்சினைக்குப் பதில் கிடைக்கும் என்பதையும் தவிர்க்க முடியாது. இந்த உண்மை  தெரிய வந்ததால்தான் எப்போதெல்லாம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கூறுகிறார்களோ, அப்போதெல்லாம் பா.. மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் ஏதேனும் ஒரு நாடகத்தை அரங்கேற்றும்.

எனவே, பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு என்பது ஆண்-பெண்  சமத்துவத்திற்கான அளவுகோல் அல்ல என்ற போதிலும்; இதனால் பெண்களை அதிகாரப்படுத்துவதற்கும், தலைமைப் பண்பிற்கு ஊக்குவிப்பதற்குமான முதற்படிக்கல்லாகவே இது கருதப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சி முதல் விளையாட்டுத்துறை வரை பெண்கள் சாதனையாளர்களாக வலம் வரும் போதிலும், கல்வியில் ஆணுக்குப் பெண் நிகராக உயர்ந்த போதிலும், அரசியல் பங்கேற்பிலும், சமூக ஈடுபாட்டிலும், நிர்வாகப் பங்களிப்பிலும், பொருளாதாரத் தற்சார்பிலும் பெண்கள் பெரிதும் பின்தங்கி உள்ளனர் என்பதே எதார்த்தம். ஆகவே, தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும், பெண் சமத்துவக் கூறுகளைச் சமூகத்தில் நிலைநாட்டவும், பெண் விடுதலை விழுமியங்களை விடியலாக்கவும்பெண்களின் குரல்ஆட்சி மன்றங்களில் இனி தொடர்ந்து எதிரொலிக்க வேண்டும் என்பதே நமது ஆவல்!

அன்புத் தோழமையில், முதன்மை ஆசிரியர்

Comment