No icon

ஆசிரியர் பக்கம்

தடம் மாறுகின்றதோ மாணவச் சமுதாயம்!

 ‘தூய்மை - வாய்மை - நேர்மை’ இவை மூன்றும்தான் ஒவ்வோர் ஆளுமையையும் தனித்த ஆளுமைகளாக அடையாளப்படுத்துகின்றன. இத்தகைய மதிப்பீடுகள் ஒரே நாளில் ஒருவரை அலங்கரிப்பதில்லை. அதுபோலவே, ஒழுக்கம், பண்பாடான நடத்தை, சமூக ஈடுபாட்டுக்கான நல்மனம், நற்பழக்கம் இவைகள் யாவும் ஒரே நாளில் கற்றுக்கொள்பவையும் அல்ல; இது வாழ்நாள் கற்றல். எல்லா நலமும், வளமும் பெற்றிருந்தாலும், ஒருவர் வாழும் ‘சூழ்நிலையே’ அந்த நபரின் தனித்துவத்தைத் தீர்மானிக்கின்றது. வெற்றி, உயர்வு, மகிழ்ச்சி எனும் அறுவடைக்குச் சூழ்நிலை எனும் நாற்றங்கால் மிகவும் அவசியம். விதை எங்கு இடப்பட்டது? பயிர் எங்கு வளர்கிறது? எத்தகைய பராமரிப்புக் கொண்டிருக்கிறது? இவை யாவுமே அறுவடைக்கான அளவுகோல்.

இது நாற்றங்கால் பயிர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்தின் இளந்தளிர்களான மாணவச் செல்வங்களுக்கும்தான். குடும்பம், பள்ளி இவற்றை உள்ளடக்கிய சமூகம்தான் இத்தளிர்களின் உடல் வளர்ச்சிக்கான, மன எழுச்சிக்கான, ஆளுமை முதிர்ச்சிக்கான தன்மைகளைத் தீர்மானிக்கின்றன. தளங்கள் சிதைகின்றபோது, வளங்கள் சிதறிப் போகின்றன. குடும்பம், கல்வி அமைப்பு முறை, பள்ளி ஒழுங்குமுறை, சமூக அறநெறிக் கட்டமைப்பு இவற்றில் ஏற்படும் தளர்ச்சி, இன்று சமூகத்தைப் பேராபத்திற்கு இட்டுச் செல்கின்றன. அன்று மெக்காலே அறிமுகப்படுத்திய கல்வி “குமாஸ்தாக்களை மட்டுமே உற்பத்தி செய்யும்” என்றார்கள் விமர்சனமான பார்வை கொண்ட சனாதனிகள் சிலர். அவர்களின் வாக்கைப் பொய்யாக்கியது ஒரு குலத்தாருக்கே உரித்தான குருகுலக் கல்விக்கு எதிரான மெக்காலேவின் கல்வி முறை. அக்கல்வி ஒருவனை மருத்துவராக, பொறியாளராக, ஆசிரியராக, பல்துறை வல்லுநராக மாற்றியது; ஆனால், அவனை உண்மையில் மனிதனாக உருவாக்கியதா? நாள்தோறும் நம்மை வந்தடையும் செய்திகள்  ‘அவ்வாறு இல்லை’ எனச் சொல்லி நம்மை அதிர வைக்கின்றன. காலமாற்றத்திற்கு ஏற்பத் தன்னை தகவமைத்துக்கொள்ளாமல், செக்கைச் சுற்றி வரும் காளைகளாய் நமது கல்விமுறை தேங்கி நின்றுவிட்டதோ? கல்வியின் போதாமை பற்றி கல்வியாளர்கள் தேர்ந்து தெளிந்து, தம்மைத் திருத்திக்கொள்ள வேண்டிய காலம் வந்தே விட்டது.  

கடந்த சில ஆண்டுகளாக, மாதங்களாக, தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் நிகழும் எதிர்பாராத துயர நிகழ்வுகள் ‘மாணவச் சமுதாயம் தடம் மாறுகின்றதோ?’ என்ற பெரும் ஐயத்தைக் கல்வியாளர்களின் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது. எதிர்கால விடியலுக்கான சிறந்த ஆளுமைகளாகத் தங்களைப் பண்படுத்திக்கொள்ள வேண்டிய மாணவச் சமுதாயம் சாதிய வன்மத்தில் வளர்வது, வன்முறையில் ஈடுபடுவது, பொது வெளியில் பொறுப்பற்றுச் செயல்படுவது, பயணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு தருவது, தற்கொலையில் இறங்குவது, கற்றுத்தரும் ஆசிரியருக்கே உயிர் பயம் கொடுப்பது, தீய பழக்கங்களுக்கு உட்படுவது, ஆசிரியரை அவமதிப்பது, கீழ்ப்படியாமை, ஒழுக்கச் சிதைவு... எனப் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

இது ஒரு பள்ளியில் நடப்பது, தனிநபர் சார்ந்தது என்று நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. இது ஒரு சமூகப் பிரச்சினை; நீங்களும், நானும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஒரு தலைமுறையின் சீரழிவை நாம் விலகியிருந்து பார்க்க முடியாது; அவ்வாறு பார்க்கவும் கூடாது.

குடும்பப் பொருளாதாரச் சூழல், சமூகக் கட்டமைப்பில் சாதிய உணர்வு, தவறான நட்புகள், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், வளரிளம் பருவச் சிக்கல்கள், போதை மருந்துப் பயன்பாடு, மதுவின் ஆதிக்கம் என்று நீளும் இக்காரணப் பட்டியலில் கல்வி முறையும், அதை நடைமுறைப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் வழிகாட்டுதல்களும் காரணிகளாகின்றன. வீட்டில் பெற்றோராலும், பள்ளியில் ஆசிரியராலும் கண்டித்து வளர்க்கப்படாத மாணவன் ஒழுக்கமுள்ளவனாக வளர வாய்ப்பே இல்லை.

‘கண் திறக்கும் கல்வி

கலவரமாகி நிற்கிறது!

பிரம்பில்லா ஆசிரியரும்

பயமில்லா மாணவனும்

உள்ள பள்ளியில்

எதை நான் கல்வி எனச் சொல்வேன்?’

எனும் கவிஞர் ‘நீநிலா’வின் வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.

அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், மச்சவாடியில் அரசு மாதிரிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவனை முறையற்ற சிகை அலங்காரத்திற்காக ஆசிரியர் கண்டித்ததால், மனமுடைந்த அந்த மாணவர் செப்டம்பர் 23 அன்று தற்கொலை செய்துகொண்டார். அதனால், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கலாச்சாரச் சீரழிவைக் கண்டிக்க அந்த ஆசிரியரால் முடிய வில்லை. அவரது கரங்களுக்குப் பூட்டு போடப்பட்டுள்ளது. இனி வரும் மாணாக்கரின் தலைமுறை எப்படியிருக்கும்? தேர்ச்சி, வருகை, ஒழுக்கம் போன்ற கல்விக்கூடங்களின் கட்டுப்பாடுகளுக்கு எதிராகத் ‘தற்கொலை’ மிரட்டல் ஓர் ஆயுதமாக மாணவனிடமிருந்து எழக்கூடும். அதன் எதிர்வினையாக ‘எக்கேடும் கெட்டுப் போங்க!’ எனக் கை கழுவிச் செல்லும் பிலாத்துவாய் ஆசிரியரின் அவதாரம் இருக்கலாம்.

‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்’ (குறள் 131)

என்றார் ஐயன் வள்ளுவர். ஒழுக்கம் என்பது மேலான ஞானம். அது உயிரைவிட மேலானது என்றே குறிப்பிடுகிறார். பிறர் மனம் புண்படாமல் நடந்துகொள்வதும், சமுதாயத்தின் நலன்களை எப்போதும் மனதில் கொள்வதும், கட்டுப்பாடுகளை மீறாமல் நடந்து கொள்வதுமே ஒழுக்கம். ஒழுக்கமே உயர்வுக்கான அடித்தளம். தனிமனித ஒழுக்கச் சிதைவு, சமூகத்தின் ஒழுக்கச்சிதைவு; அதுவே பேராபத்து!

மாணவச் சமுதாயம் என்பது சமூகத்தின் ஓர் அங்கமே! “இவர்கள் சந்திக்கும் சீரழிவுகள் சமூகச் சீரழிவுகள்; அவை சமூக நோயின் அறிகுறிகள்” என்கிறார்கள் கல்வியாளர்கள். இவர்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள். இவர்களின் சிதைவு சமூகச் சிதைவையே அடையாளப்படுத்தும். ஆகவே, வளமான சமுதாயம் படைக்க, மாணவச் சமுதாயம் வளமானதாக, நலமானதாக இருக்க வேண்டும். இச்சூழலில் மும்முனை சுய ஆய்வு அவசியம் எனக் கருதுகிறேன்.

முதலில் மாணவர்களே, உங்கள் மாணவப் பருவத்தைத் தொலைத்துவிடாதீர்கள்! இது கற்றலின் களம்; கற்க வேண்டிய காலம். உங்களை வளப்படுத்துங்கள். தடம் மாறக் காரணம் என்ன? ‘ஏன்?’ என்ற கேள்வியைக் கேளுங்கள்; காரணம் தேடுங்கள்;  மாற்றத்தைக் காணுங்கள்.

இரண்டாவது, பெற்றோர் - ஆசிரியர் அணுகுமுறையில் சற்று மாற்றம் கொள்ளுங்கள். ‘உப்பு தின்னவன் தண்ணி குடிக்க வேண்டும்’ என்று செய்த தவறுக்கான தண்டனையை ஏற்றுக் கொண்ட தலைமுறை நீங்கள். ஆனால், தவறே செய்தபோதும், அதன் விளைவு அறிந்தே செய்தபோதும் ‘ஏன் என்னை அடிக்கிறீர்கள்?’ என்று ஆணவத்துடன் கேள்வி கேட்கும் தலைமுறையைக் கொண்டிருக்கின்றோம் இன்று. உங்கள் கண்டிப்பு கனிவுடன் கூடியதாக அமையட்டும்.

மூன்றாவது, அரசும் - சமூகமும் கல்வி அமைப்பு முறையிலும், ஒழுக்கமுறைகளிலும் மாணவச் சமூகத்தைத் தனித்து வளப்படுத்துவதில் கவனம் கொள்ள வேண்டும். நாம் அவர்கள்மீது அரசியல் ஆதாயமற்ற, சாதியச் சூழ்ச்சிகள் அகன்ற அக்கறை கொள்ள வேண்டும். ஆயினும், தடம் மாறும் மாணவச் சமூகத்தின் தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், எதிர்காலக் குழப்பங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட இவர்களை ஆற்றுப்படுத்த வேண்டியது நம் அனைவருடைய கடமையே!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment