No icon

குரலற்றவரின் குரலாவோம்!

புரட்சி வேறு; பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் என்பது வேறு. உலக அரசியல் களம் இரண்டையுமே சந்தித்திருக்கின்றது; இன்றும் சந்தித்து வருகின்றது. தாம் வாழும் சமூகத்தைப் பொருளாதார வகையிலும், அரசியல் ரீதியிலும் மாற்ற வேண்டும் என்ற தீராத தாகத்தில், விடுதலை வேட்கையில் உருவாவது உண்மையான புரட்சி. இதுவே ஒரு புரட்சிக்கான அடிப்படைத் தாரக மந்திரம். “புரட்சி உலகத்தின் விதி; அது மனிதகுல முன்னேற்றத்தின் அடிப்படை” என்று நீதிமன்றத்தில் முழங்கிய பகத்சிங்கின் கூற்று இங்கே நினைவுகூரத்தக்கது.

ஆயினும், காலச்சக்கரம் புரட்சிக்கான வரையறையைத் தவறாக இன்று கட்டமைத்து விட்டது. இரத்தம் தோய்ந்த போராட்டமும், போர்க்களமும் தவிர்க்க முடியாததாகி விட்டன. தனிமனிதப் படுகொலைகள், அப்பாவி மக்களின் உயிர்ப்பலிகள், வெடிகுண்டு, துப்பாக்கி, இரத்தக்களறி, தற்கொலைப் படைகள், மேலும் வான்வெளித் தாக்குதல்கள் போன்றவைகளால் ஒருபோதும் புரட்சியை நியாயப்படுத்த முடியாது. சமுதாய மாற்றம் என்பது புரட்சியின் உன்னத நோக்கமாக இருந்தாலும், வன்முறை, தீவிரவாதம் அதற்குரிய வழியன்று; வன்முறையில் கட்டமைக்கப்படும் எந்த மாற்றமும் கால வெள்ளத்தில் காணாமல் போய்விடும். அவ்வாறே, இஸ்ரேலும், பாலஸ்தீனமும் எதிர்நோக்கும் தீர்வு வன்முறையால் கட்டமைக்கப்படும் என்றும், அது சாத்தியமே எனவும் இரு நாடுகளுமே நம்புகின்றன.

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை நீண்ட காலமாகத் தொடரும் உலக அரசியல் பிரச்சினை. இதை இரண்டு தனி நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது. மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்களின் சொந்த நிலப்பரப்பாகக் கருதப்படும் பாலஸ்தீனம் பிரிட்டனின் காலனியாக இருந்ததிலிருந்தே இந்தப் பிரச்சினை தொடங்குகிறது. பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியே இதன் காரணம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இது நீறுபூத்த அணையா நெருப்பாகவே இருக்கின்றது. இது ஓர் எரிமலை; அழுத்தம் அதிகரிக்கும்போதெல்லாம் வெடித்துச் சிதறும். அத்தனைக்கும் காரணம் யூத-கிறிஸ்தவ-இஸ்லாம் மதங்களுடன் தொடர்புடைய புனித நகரான ஜெருசலேமை முன் வைத்தே இது தொடர்கிறது. இது மதச்சண்டை என்பதைக் கடந்து, நில ஆக்கிரமிப்பு சார்ந்த பிரச்சினை என்பதையும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இது பாலஸ்தீன நிலப்பரப்பைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்துக் கொண்ட இஸ்ரேலிய அரசின் அபகரிப்புத்தன்மை ஏற்படுத்தும் எதிர் வினையே! மேற்குப் பகுதியில் தொடர்ந்து குடியிருப்புகளை ஏற்படுத்தி தம் மக்களைக் குடியேற்றும் இஸ்ரேல், அப்பகுதியில் தனது இராணுவத்தைக் குவித்து, பாலஸ்தீனியர்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கான பதிலடியே இது. அப்பாவி பாலஸ்தீனியர்கள் பலர் இஸ்ரேலின் படைகளால் கைது செய்யப்பட்டிருப்பதும், பலர் படுகொலை செய்யப்பட்டதும் வலிகள் நிறைந்த வரலாற்றுப் பதிவுகள்!

இஸ்ரேலின் இத்தகைய தொடர் நட வடிக்கைகளால் ‘வெகுண்டெழுந்த’ ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது தொடுத்த எதிர்பாராத கடும் தாக்குதல், அதன் எதிர்வினையாக ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசாமீது இஸ்ரேல் தொடுத்த பதில் தாக்குதல் இருபுறமும் பல ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது வேதனை அளிக்கிறது. ஹமாஸ் அமைப்பின் இக்கொடிய தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கதே.

‘தாவீது’ என்ற பெயர் மட்டுமே கோலியாத்துகளைச் சாய்த்துவிட போதுமானதன்று; அதற்கு நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனும் வேண்டும்.  ஹமாஸிடம் அது உள்ளனவா? சற்றும் தயங்காமல் நாம் சொல்லலாம், இல்லவே இல்லை! யுத்தத் தர்மம் அல்லது யுத்தத் தந்திரம் சிறிதுமற்ற, வெறும் சாகச நடவடிக்கையே ஹமாஸின் தற்போதைய தாக்குதல்கள் என்பதை, போரின் பின்விளைவுகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

எந்தப் போரிலும் எந்தவொரு வன்முறையும் நியாயப்படுத்தக்கூடியது அன்று; பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயுற்ற முதியோர் எனச் சாதாரண குடிமக்கள் மீது தொடுக்கப்படும் எதிர்பாராத தாக்குதல் மிகவும் கொடியது; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆயினும், அவர்களை இச்செயலுக்குத் தூண்டி, நெடுங்காலமாய்ச் சீண்டிய இஸ்ரேலின் செயல்பாடுகளையும் எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது. ஆக்கிரமிப்பு, அடிமைப்படுத்தும் மனப்பான்மை, தொடர் அச்சுறுத்தல், அடிப்படைத் தேவைகளை முடக்குதல், மின்சாரம், குடிநீர், தொலைத்தொடர்பைத் துண்டித்தல் போன்ற இஸ்ரேலின் அநாகரிகச் செயல்பாடுகளும் மிகவும் கண்டிக்கத்தக்கதே. இதுவும் குடிமக்களின் அமைதியைச் சீர்குலைக்கும் அவர்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கும் கொடுஞ்செயல்களே!

அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பெரும் நாடுகள் இஸ்ரேலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நிலையில், அந்நாட்டு மக்களில் சில அமைப்பினர் ஹமாஸின் தாக்குதலை ஆதரிப்பதும், அதைக் கொண்டாடுவதும் அங்கு நிலவும் முரண்பட்ட கருத்தியலை முன்வைக்கின்றன.

ஹமாஸைப் ‘போராளிக் குழுக்கள்’ என உலகமே குறிப்பிடும் சூழலில், இஸ்ரேல் அதை ‘ISIS’ தீவிரவாதக் குழுவுடன் ஒப்பிட்டுப் பேசுவதும், அவ்வாறே இந்தியாவும் அதனைத் ‘தீவிரவாதக் குழு’ என முத்திரைக் குத்தி, அவர்களின் செயல்பாடுகளைப் ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என அறிவித்து, ‘இஸ்ரேலுக்கு ஆதரவு நிலைப்பாடு’ என இந்திய ஒன்றியத் தலைமை அமைச்சர் முழங்கியிருப்பதும் இப்பிரச்சினையில் இந்தியாவின் கடந்த கால நிலைப்பாட்டின் அறியாமையையும், இன்றைய ஒன்றிய அரசின் தவறான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாகக் கணிக்கப்படுகிறது. இந்தியா - இஸ்ரேலுக்கான ஆதரவு உலக அரசியலில் உள்நோக்கம் கொண்ட பல சந்தேகங்களையும் எழுப்பத் தவறவில்லை.

தெற்கில் ஹமாஸின் தாக்குதலை எதிர்கொண்டிருக்கும் அதே வேளையில்,  வடக்கில்   ஹிஸ்புல்லாவின் அதிரடித் தாக்குதலையும் எதிர்கொள்கிறது இஸ்ரேல். இப்படிப்பட்ட ‘சுற்றி வளைப்பு’ இஸ்ரேலுக்கு ஒன்றும் புதிதல்ல. தனி நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட 1948-லிருந்தே  இஸ்ரேல் எதிர்கொள்ளும் சக்கரவியூகங்கள்தான்  இவை. இம்முறை வியூகத்தை எப்படி உடைத்து இஸ்ரேல் மீளப்போகிறது என்பதை வரப்போகும் நாள்கள் தெளிவுபடுத்தும்.

மேலும், சமீபத்திய இந்த இருமுனைத் தாக்குதல்களுக்கும் பின்னணியில் ஈரான் இருப்பதை அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பல்வேறு போர்களால் ஏற்கெனவே உருக்குலைந்து கிடக்கும் ஈரான், எவ்வளவு தூரம் ஹமாஸையும், ஹிஸ்புல்லாவையும் தூக்கிச் சுமக்கும் என்பது கேள்விக்குறியே. எப்போதும் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் இந்தத் திடீர் பாலஸ்தீனப் பாசம் ஈரானுக்கு? வேறொன்றுமில்லை, சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு தேசங்களோடு இஸ்ரேல் சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் நெருக்கம், தன்னைத் தனிமைப்படுத்திவிடும் என்ற பயம் ஈரானை உறுத்திக் கொண்டேயிருந்தது. எனவேதான், அந்த உறவைச் சிதைக்கும் வகையில்  வீசப்பட்டதுதான் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் இராக்கெட் தாக்குதல்களும், கையறு நிலையில் பிடிபட்ட பிணையக் கைதிகளும்.

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைப் பற்றி ஆய்வு செய்யவும், குறிப்பாக பாலஸ்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் ஆலோசனை நடத்தியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமிய நாடுகள் சூழ்ந்திருக் கும் சூழலில் இஸ்ரேலின் இச்செயல்பாடுகள் அதற்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் அரசியல் விமர்சகர்கள், ஹமாஸின் இந்தத் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களின் நீண்ட நாள் இலக்கை அடைவதில் பெரிதும் பின்னடைவைத் தரும் என்றும் கருதுகின்றனர். ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட இந்தத் திடீர் தாக்குதல் இப்பிரச்சினைக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. மாறாக, எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது. மேலும், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இத்தகைய சூழலில், இவ்விரு நாட்டுப் பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வு எட்டப்பட வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதே நமது ஆவல். நெடுங்காலமாகத் தொடரும் இப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கைகள் ஒருபோதும் தீர்வாகாது என்பதைத் தலைவர்கள் உணர வேண்டும். “பயங்கரவாதமும், போரும் ஒருபோதும் தீர்வுக்கு வழிவகுக்காது. இது அப்பாவி மக்களின் மரணம் மற்றும் துன்பத் துயரங்களுக்கு மட்டுமே வழிவகுக்கும். ஆகவே, இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்; இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என நம் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

புரட்சி, பயங்கரவாதமாக உருப்பெறும்போது மனிதாபிமானமும், கருணையும் காணாமல் போவது கவலையளிக்கிறது. பாலஸ்தீனியர்களின் இலக்கு உன்னதமானதாக இருந்தாலும், அதை அடையும் வழி ஆபத்தாக அமைகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். தனிமனிதனின் சுயம் சீண்டப் படும்போது பொறுமை எல்லை மீறும்; வன்முறை வளரும் என்பதை இஸ்ரேல் புரிந்துகொள்ள வேண்டும். ஆயினும், உரியவனுக்கு நீதி கிடைக்க வறியவன் பக்கம் வந்தாக வேண்டும் என்பதை உலக நாடுகள் உணர்ந்தாக வேண்டும். “மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகளைத் திருடுபவனைச் சட்டம் கண்டிக்கிறது. ஆனால், ஆடுகளிட மிருந்து மேய்ச்சல் நிலத்தைத் திருடும் குற்றவாளிகளை விட்டு விடுகிறது” என்ற ஹென்றி மெய்னின் கவிதைதான் இங்கே என் நினைவுக்கு வருகிறது. ஆகவே, நாமாவது, குரலற்றவரின் குரலாவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

 

 

Comment