No icon

ஆசிரியர் பக்கம்

ஏன் இந்தக் குழப்பமும், முரண்பாடும்?

உலக அரங்கில் இன்று மதமும், அரசியலும் சிலருக்கு அவர்தம் சுயநலன்களின் ஊற்றுக்கண்களாக இருக்கின்றன. ‘அதிகாரம்-ஆணவம்என்கிற இரு தண்டவாளங்களின் மேல் அவர்களுடைய வாழ்க்கை பயணித்துக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் விபத்துக்கு உள்ளாகும் பலவீனமான பாதை அது என்பது கூட அவர்களுக்குப் பல நேரங்களில் விளங்குவதில்லை. இன்றைய சூழலில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் புரிந்துகொள்ள வேண்டிய பேருண்மை இது!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின்ஹமாஸ்குழுவிற்கும் இடையே அக்டோபர் 7-ஆம் தேதி தொடங்கிய போர், ஏறக்குறைய ஒரு மாதம் கடந்து, இன்றும் நீடிக்கிறது. இன்னும் சுமூகமான தீர்வு அங்கே எட்டப்படவில்லை. அப்பாவி மக்கள் உணவு, தண்ணீர், மருத்துவ உதவி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இத்தகைய சூழலில், பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிபொதுமக்களைப் பாதுகாத்தல் மற்றும் சட்ட மனிதாபிமான கடமைகளைக் கடைப்பிடித்தல்என்று தலைப்பிடப்பட்ட வரைவுத் தீர்மானத்தை ஜோர்டான் அரசு .நா. பொதுச் சபையில் அண்மையில் கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது தான் ஆயினும், ஜோர்டான் கொண்டு வந்த அந்த மூன்று பக்கத் தீர்மானத்தில் இஸ்ரேல்மீது ஹமாஸ் நடத்திய தீவிரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பது குறித்து, தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அமெரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகள்இந்தத் தீர்மானம் திருத்தம் செய்யப்பட வேண்டும்என வலியுறுத்தியுள்ளது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியது. ஆயினும், இந்தத் தீர்மானம் போதிய ஆதரவு இல்லாததால், எவ்வித மாற்றமும் இன்றி வாக்கெடுப்புக்குக் கொண்டு வரப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆகவே, மாற்றம் ஏதுமின்றிக் கொண்டு வரப்பட்ட இந்த வாக்கெடுப்பு ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட 120 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது உலக அரசியல் சதுரங்க விளையாட்டில் உலகின் வெவ்வேறான நிலைப்பாட்டை வெளிக்காட்டியது. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா, பராகுவே உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருப்பதும்; இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, ஜப்பான், உக்ரைன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காததும் மேலும் பல வினாக்களை எழுப்புகின்றன.

மருத்துவ அறுவை சிகிச்சை, அரசின் சமூக-அரசியல் நிலைப்பாடு மற்றும் திட்ட வரைவுகள் போன்ற எல்லா முடிவுகளும் பொதுநலனை (Common Good), அதிகப் பலனைக் (Greater benefit) கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்என்பதே அடிப்படை சமூக அறமாக இருக்க வேண்டும். போர் நிறுத்தம் கோரும் .நா.வின் தீர்மானத்திற்குப் பின் இஸ்ரேல்-பாலஸ்தீன அப்பாவி மக்களின் அழுகுரலும், வேதனையும், சமூக அக்கறையும் இருப்பதை உணர வேண்டும். இப்போரில் இருதரப்பும் சந்தித்திருக்கும் பேரழிவுகள் ஏராளம். இதுவரை இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் 3475 குழந்தைகள், 2136 பெண்கள், 480 முதியவர்கள் உள்பட 8306 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 21,048 நபர்கள் காயமடைந்துள்ளனர். 1050 குழந்தைகள் உள்பட 1950 நபர்களைக் காணவில்லை. அதுபோல ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1400-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனத்தில் சர்வதேசச் சட்டங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, உணவு, குடிநீர், மருந்துகள், தகவல் தொடர்பு, மின்சாரம் என அனைத்து அடிப்படைத் தேவைகளும் தடைபட்ட சூழலில், அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தகைய சூழலில், ‘எங்கள் மக்கள் மீதான போரை நிறுத்துங்கள். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்எனப் பாலஸ்தீனப் பிரதமர் முகம்மது தெரிவித்திருப்பது மனிதாபிமானம் கொண்ட, ஈரமுள்ள இதயங்களைக் கலங்க வைக்கின்றது. ஆயினும், ‘போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை; அது ஹமாசிடம் சரணடைவதற்குச் சமமானது. ஹமாசிற்கு எதிரான போரில் வெற்றிபெறும் வரை இஸ்ரேல் போராடும்என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. வரலாறு காணாத தாக்குதலைத் தொடுத்துள்ள இஸ்ரேல், போர் நீள்வதற்கான அபாயத்தை மேலும் கூட்டுகிறது. இது உலக சமூகத்தையே அச்சுறுத்துகிறது. நீண்ட மோதல் என்பது உலகளாவிய சமூகத்திற்கு நலன் பயக்காது. இந்தப் போர் நீடித்தால் மிகவும் கடுமையான பாதிப்பை உலகளவில் ஏற்படுத்தும். நாடுகளின் கட்டமைப்பில், மக்களின் வாழ்வாதாரத்தில், பொருளாதார நிலைப்பாட்டில் விலைமதிப்பில்லாப் பாதிப்பை மட்டுமல்ல, மனிதாபிமான பேரழிவையும் ஏற்படுத்தக்கூடும்.

இச்சூழலில், ‘இஸ்ரேலுக்கு வெளிப்படையான ஆதரவுஎன்று முழங்கிய இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர், ‘ஹமாசின் தாக்குதல் தீவிரவாதத் தாக்குதல்; இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிரானது; அதேவேளையில் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க ஆதரவு அளிக்கிறதுஎன்ற இரட்டைக் கொள்கை கொண்ட நிலைப்பாடு எடுத்திருப்பது மனிதாபிமானம் கொண்ட பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. போரின் தன்மையையும், அதன் போக்கையும் அறிந்து, பேரழிவைக் கருத்தில் கொண்டு, போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்தில் இந்தியா வாக்களித்திருக்க வேண்டும். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திபோர் நிறுத்தம் கோரும் .நா.வின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா தவிர்த்தது அதிர்ச்சியளிக்கிறது. இது அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்கள் அனைத்தையும் இழந்து தவிக்கும் இத்தகைய சூழலில், இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது நமது நாட்டின் அடிப்படைக் கொள்கைக்கே முரணானதுஎன்று குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு அமெரிக்கச் சர்வாதிகாரத்தின் அடிபணிந்த கூட்டாளியாக இருக்க வடிவமைக்கப்படும் வெளியுறவுக் கொள்கைகளை வெளிப்படுத்துகிறதுஎனக் குற்றம் சாட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் எச்சூரியின் கூற்றை மறுக்கவும் முடியாது. தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுவதுபோல, ‘இந்தப் போரில் எத்தகைய அணுகுமுறையைக் கையாள்வது என்று தெரியாமல் மோடி அரசு முழு குழப்பத்தில் இருப்பதாகவேதெரிகிறது.

பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், இந்தியா ஒருபோதும் ஆதரிக்காதுஎன்று முழங்கிய ஒன்றிய பா... அரசு, ஹமாசை அழிக்க இஸ்ரேல் தொடுத்திருக்கும் பேரழிவு நிலைப்பாடும் ஒரு பயங்கரவாதம்தான் என்பதை மறைக்கிறது. இதில் அம்பலமானது ஒன்றிய பா... அரசின் வெளிவேடம்தான். இப்போர் நிறுத்தத் தீர்மானத்தில் இந்தியா பங்கேற்காதது நமக்குப் பெரும் அவமானமே.

இப்போர் மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றிணைத்த இஸ்லாத்துக்கு எதிரான மதப்போராக உருவாகும் ஆபத்தையும் எதிர்நோக்கி நிற்கிறது. எனவே, உலக நாடுகள், வல்லரசுகள் விழிப்படைய வேண்டும். உலகப் போரை எதிர்நோக்கி அல்ல; உலக அமைதியைப் பேணுவதில்! போரில் ஈடுபட்டுள்ள இருதரப்புகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கான சூழலை உடனடியாக உருவாக்க வேண்டும்.

திருத்தந்தை பிரான்சிஸ்இந்த உணர்வற்றப் போர் வன்முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய தருணம் இது. ஆழமான தீர்வு எட்டப்படாத வரையிலும் இதில் நிலையான முடிவுக்கான நம்பிக்கை பிறக்காது. உண்மையான அமைதிப் பேச்சுவார்த்தையே நிரந்தரத் தீர்வுக்கான தொடக்கமாக அமையும்என அழைப்பு விடுக்கிறார்.

போரற்ற அமைதியும், வன்முறையற்ற மனிதாபிமான செயல்பாடுகளும் உலகில் வேண்டும்என வலியுறுத்தி வந்ததுதான் நமது இந்தியப் பாரம்பரியம். ஆனால், அதற்கு எதிராக இப்போதைய இந்திய ஒன்றிய அரசு, போர் நிறுத்தம் வாயிலாகத்தான் அமைதி திரும்பும் என்பதை அறியாது, வாக்கெடுப்பைப் புறக்கணித்தது முரண்பாட்டின் உச்சம். பா... அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பம் என்று தெளிவு பெறும்? முரண்பாடு எப்போது களையப்பெறும்?

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment