No icon

மாற்றத்திற்கான அடித்தளம்!

இந்தியா, உன்னதமான பண்பாடுகளின் களஞ்சியம். அவ்வகையில், ‘உலக அரங்கில் இந்தியாவுக்கு ஈடு இணை ஏதுமில்லை’; உலக நாடுகள் வியக்கும்மிகப்பெரிய ஜனநாயக நாடுஎன்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் இந்த நாட்டில்தான் தீண்டாமை அன்றும், இன்றும் தலை விரித்தாடுகிறது. பண்பாட்டு ஒற்றுமையைச் சிதைக்கும் சாதிக்கொடுமைகள் அனுதினமும் அரங்கேறுவதும் இங்கே தான்; உயர்வு-தாழ்வு எனப் பேசி சமத்துவத்திற்குச் சாவுமணி அடிப்பதும் இங்கேதான்; ஏற்றத்தாழ்வுகளால் சமூகம் எரிமலையாகிக் கொண்டிருப்பதும் இங்கேதான்! இதற்கான முடிவு என்ன? விடிவு என்ன? என்பதே நெடுங்காலமாய் ஒவ்வொரு சாமானியனிடத்திலும் தொக்கி நிற்கும் விடையறியாக் கேள்விகள்!

சமயச் சாயம் பூசப்பட்ட வர்க்க வேற்றுமையும், அதனால் உருவான சாதி(தீ)யக் கட்டமைப்புமே சமூகத்தை இன்னும் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அரசும், அரசியலும் மறைமுகமாகவும், பல வேளைகளில் வெளிப்படையாகவும் இதற்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கின்றன. இங்கு சமூகப் பிளவுகளும், மக்களின் அறியாமையுமே ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மூலதனமாகிக் கொண்டிருக்கின்றன. சாதியொழிப்புக் களத்தில் நிற்க வேண்டிய அரசியல் தலைவர்கள், அதிகாரச் சுகங்களை அனுபவிக்க சாதிவெறியைத் தூண்டுபவர்களாகவும் செயல்படுவதுதான் சமூகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு! இன்றைய அரசியல் போக்குகள் அனைத்தும் மக்களை இணைப்பதற்குப் பதில், பிரித்தாள்வதில்தான் மிகுந்த கவனம் செலுத்துகின்றன.

ஆயினும், ‘இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் இணைந்தால் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்என்று கனவு கண்ட அண்ணல் அம்பேத்கர், ‘சாதித் திமிரும், அதன் கோரப் பிடியும் ஒடுங்கினால்தான் அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் வரக்கூடும்என்றார். பொது உணர்வைச் சாதி கொன்றுவிட்டது. மனிதத் தர்மத்தை அது அழித்து விட்டது. பொதுநலச் சிந்தனை எழாதபடி சாதி சதிசெய்து விட்டது. சமுதாயத்தில் கடைக்கோடியில் தள்ளப்பட்டவர்களைக் கண்கொண்டு பார்க்க, இந்த நாட்டில் நாதி இல்லை. இந்த(து)ச் சமுதாயம், சாதியற்ற சமுதாயமாக மாறினால்தான் சுயராஜ்யம் அவர்களுக்குப் புது வாழ்வும், புது வழியும் பெற்றுத்தரும் என்று முழங்கியது இன்றும் நம் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது.

வர்ணாசிரமம், மனுதர்மம் வடிவமைத்த இந்தக் கொடிய சாதிய முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியச் சமூகக் கட்டமைப்பை மத ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், சமூகக் கட்டுப்பாடாகவும் பிரித்தாள்வதே மிகுந்த வேதனைக்குரியது. இந்நிலையில், சமத்துவச் சமூகத்திற்கான விடியல் சாத்தியமா? சாதிகள் அற்ற சமூகநீதி கொண்ட சமூகம் சாத்தியமா? என்பதே பலருடைய கேள்வியாக இருக்கிறது.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோன்று, சாதிகள் அற்ற சமத்துவச் சமூகம் காண ஆட்சியாளர்கள் மத்தியில்சாதியேஅளவு கோலாகக் கணிக்கப்பட்டது. சாதிய அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில்இட ஒதுக்கீடுஎன்கிற சிந்தனை தளிர்விட்டது. இது குறித்து அன்றும் இன்றும் எதிர் விமர்சனங்கள் எழுந்ததும், அது தொடர்வதும் நாம் அறிந்ததே. ‘எந்த நாட்டிலும் கல்வித்துறையிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு என்பது இல்லை. இங்கு மட்டும் அது ஏன்?’ என்ற கேள்விக்கு, அது தேவையாக இருக்கிறது என்பதையும் கடந்து, அது அவசியமானதாக இருக்கிறது என்பதே உண்மை! ‘The rich get richer and the poor get poorerஎன்ற Percy Shelley-இன் பொருளாதார முரண்பாடு இங்கு நெடுங்காலமாகத் தொடர்வதற்கான காரணம் அறியப்பட வேண்டும். ‘மேல்தட்டு மக்கள்என்று வரையறுக்கப்பட்டவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என யாவும் எளிதாகக் கிடைப்பதும், ‘கீழ்த் தட்டு மக்கள்என நசுக்கப்பட்டவர்களுக்கு எதுவுமே கைகூடாததும் இந்திய தேசத்தின் அவல நிலை. இதற்கான அளவுகோல்தான் இடஒதுக்கீடு.

ஆகவேதான், ‘இட ஒதுக்கீட்டைத் தீர்மானிக்க நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்என அனைத்துக் கட்சிகளுமே வலியுறுத்துகின்றன. சாதிய அமைப்பு முறையை இங்கு ஒழிக்க வேண்டும் என்பதல்லவா நமது சிந்தனையாக இருக்க வேண்டும்! ஆனால், அதற்கு மாறாக, ‘சாதியக் கணக்கெடுப்பு சாதியப் பாகுபாட்டை வளர்க்காதா?’ என்ற கேள்வி எழுவது சரியானதே. ஆயினும், இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தும் காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் இராகுல் காந்தி, ‘ஜித்நி அபாதி உத்னா ஹாக்’ (Jitni Abaadi Utna Hag - JAUM) - அதாவது, ‘எந்த ஒரு குழுவிற்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவமும், இட ஒதுக்கீடும் வழங்கப்பட வேண்டும்எனக் குறிப்பிடுகிறார். ‘பிரதிநிதித்துவக் கருத்தியலைமுன்வைக்கும் இராகுல் குறிப்பிடும் புள்ளி விவரம் அதிர்ச்சியளிக்கிறது. அதாவது, இந்திய மக்கள் தொகையில் 70 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாகவும், அவர்களுக்கான உரிய பங்களிப்பு எந்தத் தளத்திலும் முறையாக வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டுகிறார். குறிப்பாக, 11,310 பொதுப் பணித்துறை உயர் அதிகாரிகளில், 8000 நபர்கள் OBC / SC / ST பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்; ஆனால், 3000 நபர்கள் மட்டுமே பணியில் இருப்பதும், அப்படியே இந்திய ஆட்சித்துறை உயர் அதிகாரிகள் 90 நபர்களில், மூவர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருப்பதும் இந்திய அரசியல் மற்றும் ஆட்சித்துறையின் சூழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இந்நிலை மாற வேண்டும் என்பதே அனைவருடைய ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது. ஆகவேதான், சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் நகர் தேர்தல் பரப்புரையின்போது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இரண்டு மணி நேரத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி தொடங்கும்என்று இராகுல் வாக்குறுதியளித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ற இட ஒதுக்கீட்டைப் பெற அது உதவும் என்பதே நமது நம்பிக்கை.

சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் புரிய, அதன் அவசியம் அறிய இந்திய வரலாற்றுப் பக்கங்களில் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 1931-ஆம் ஆண்டு முதன் முதலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு 52 சதவிகிதம் மற்ற பிற்படுத்தப்பட்டோர் இருப்பதை உறுதிப்படுத்தியது. அதில் 983 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்தப் பிரதிநிதித்துவமும், இட ஒதுக்கீடும் கிடைக்கப் பெறாதது அறியப்பட்டது. அதேவேளையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக 1955-ஆம் ஆண்டு காகா கலேல்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், 2,399 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இருப்பதாகவும், அவற்றில் 837 வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் தெளிவுபடுத்தியது. அதுபோலவே, மண்டல் ஆணைய அறிக்கை 3,743 பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. ஏறக்குறைய 90 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தக் குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மீண்டும் நடத்துவது மிகவும் அவசியமானதாகிறது.

2011-ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றிருந்தாலும், அது நடைமுறைப்படுத்தப்படாதது பல சந்தேகங்களை எழுப்புகிறது. 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2024-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இச்சூழலில், அது திறந்த மனத்துடனும், பரந்த எதிர்நோக்குடனும், உன்னத இலக்குடனும் நடைபெற வேண்டும் என்பதே நமது விருப்பம். இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க இது வழிவகுக்கும் என்பதே நமது நம்பிக்கை. பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய சமூகம் உயர்வுபெற, போதிய வளர்ச்சி காண, உரிமை கொண்ட இட ஒதுக்கீட்டைப் பெற இது உதவும் என்பதே நமது தேடல்.

இவையனைத்தும் ஆளும் ஒன்றிய பா... அரசுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், திட்டமிட்டே மறைக்க முயல்கிறது. ஒன்றிய முதன்மை அமைச்சர் அது பற்றிப் பேசுவதையே தவிர்த்து வருகிறார். ஆயினும், ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், அது மக்களிடையே சாதி வேறுபாட்டை அதிகரிக்கச் செய்துவிடும்என்று கூறி வந்த பா.., இன்று அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ‘சாதிவாரிக் கணக்கெடுப்பை நாங்கள் எதிர்க்கவில்லைஎன்று கூறும் அளவுக்கு எதிர்க் கட்சிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, எல்லாரும் எல்லாமும் பெற, இல்லாமை இல்லாமையாக, சமத்துவச் சமூகம் காண, இடஒதுக்கீடு முறை யாவருக்கும் முறையாக வழங்கப்பட, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைய, நாட்டின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை வரையறுக்க வெளிப்படையான, உண்மையான, அறிவியல்பூர்வமான சாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமானதாகிறது. அதுவே சமூக நீதிக்கான விடியலுக்கு வழிவகுக்கும்!

அன்புத் தோழமையில்

முதன்மை ஆசிரியர்

Comment