
ஆனந்தமே எங்கள் பேரானந்தமே!
என் இனிய ‘நம் வாழ்வு’ வாசகப் பெருமக்களே!
‘எழுச்சிமிகு எழுத்துகளால் ஏற்றமிகு உலகு செய்வோம்’ என்ற இலட்சியக் கனவோடு ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்று, பேனா முனையைக் கூரிய வாள்முனையாக்கி, எழுத்துவழி ஏற்றம் கண்டு, அதன் முகமாய், முகவரியாய்ப் பரிணமித்து, தமிழகத் திரு அவையில் தலைசிறந்த இதழியலாளராக ‘மதுரை ஆனந்த்’ என்ற பெயருடன் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறியப்பட்ட எமது மேனாள் முதன்மை ஆசிரியர், எமது அச்சு ஊடகப் பணித்தளத்தின் முன்னவர், இன்று மேதகு ஆயர் லூர்து ஆனந்தமாக மறவ நாட்டு மாணிக்கம், செந்நீர் காவியம் கண்ட செம்மண் புனிதர், தூய அருளானந்தரின் புண்ணிய பூமியாம் சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டிருப்பது கண்டு ‘நம் வாழ்வு’ பேருவுவகை அடைகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவகங்கைச் சீமையின், தலைமகனின் திருநிலைப்பாட்டு நிகழ்வின் நினைவாக ‘நம் வாழ்வு’ சிறப்பிதழ் வெளிக்கொணரும் இவ்வேளையில், அதன் ஆசிரியர் பக்கத்தை இரட்டிப்பான மகிழ்வோடு தீட்டுகிறேன்!
சென்னை-பூந்தமல்லி தூய நெஞ்சக் குருத்துவக் கல்லூரியில், எமது குருமட வாழ்வின் முதல் நாள் துவங்கி, இந்நாள் வரைக்கும் இனியும் தொடரும் உன்னத உறவின் பூரிப்பில் என் அகம் மகிழ்கிறது.
குரு - சீடன்; ஆசான் - மாணவன்; தந்தை - மகன்; தலைவர் - செயலர்; அண்ணன் - தம்பி; முதன்மை ஆசிரியர் - துணை ஆசிரியர்; நிர்வாக ஆலோசகர் - முதன்மை ஆசிரியர் என உலகில் அரிதான இந்தப் பன்முக உறவில் தொடர்ந்த எமது உறவுப் படிநிலை இன்று... ‘எமது ஆயர் - உடன் பணியாளன்’ என்று உச்சம் தொட்டிருக்கிறது.
எனது மாணவப் பருவம் முதல் எனை அறிந்து, எனது திறமைகளை இனம் கண்டு, பயிற்சிக் காலத்திலும், அதன் பிறகும் எனக்குரிய தனித்துவமான பணிகளைச் சுட்டிக்காட்டி, குறிப்பாக, நம் வாழ்வுப் பணியில் எனக்கு முகவரி தந்து, முழுமையாய் உடனிருந்து, உயரத் துணையிருந்து, என் வளர்ச்சியில் என்றும் பெரும் பங்கு வகிக்கும் மேதகு ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள், இப்பணித்தளத்தில் எமது முன்னவர் என்ற உறவிலும் - எமது மறைத்தளத்தில் இந்நாள் ஆயர் என்ற மகிழ்விலும் என் உள்ளம் நெகிழத்தானே செய்யும்!
அன்பான குரு, மிகச்சிறந்த பண்பாளர், சீரிய சிந்தனையாளர், ஆற்றல்மிகு செயல்வீரர், சீர்கொண்ட பேச்சாளர், நயம் கண்ட எழுத்தாளர், வளம் நிறைந்த இறையியலாளர், அருள் கொண்ட மரியியலாளர், பொருள் கொண்ட கொடையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டு ‘அருள் கலைஞராக’ அறியப்பட்ட புதிய ஆயர் மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் திறமைகளின் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாது. தனது பன்முகத்தன்மை கொண்ட சிறப்பான குருத்துவப் பணி வாழ்வால் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டவர். சிறந்த சொல்லாற்றலுக்கும், கூர்மையான சிந்தனைக்கும், திறமையான நிர்வாகத்திற்கும் சொந்தக்காரர்!
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்’ (குறள் 517)
என்ற ஐயன் வள்ளுவரின் வாக்கைப் பல தளங்களில் மெய்யாக்கியவர்!
ஆழமான இறை நம்பிக்கையாளர்களைக் கொண்டு, 1987-ஆம் ஆண்டு முதல் 36 ஆண்டு கால நிர்வாக வரலாற்றைக் கொண்ட செம்மண் பூமியாம் சிவகங்கை மறைமாவட்டம், புதிய ஆயரின் தலைமையில் இன்னும் பல நிலைகளில் பெரும் வளர்ச்சி காணும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பேராயர்களின் செயலர் - பங்குப் பணியாளர் - இதழியலாளர் - இறையியலாளர் - மரியியல் பேராசிரியர் - குருமட அதிபர் - மேய்ப்புப்பணி நிலைய இயக்குநர் - மறைவட்ட அதிபர் - துறவியருக்கான ஆயரின் பொது பதில் குரு எனப் பல்வேறு அனுபவங்களால் இப்பணிக்குச் சிறப்பான தகுதி பெற்றவர் நம் புதிய ஆயர்! தகுதிமிக்கப் பெருமகனைத் தலைமகனாகக் கொண்டதில் சிவகங்கைச் சீமையும் பெருமை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
நல் ஆயனும், நம் தலைமைக் குருவுமான கிறிஸ்துவின் பேரருளால் புதிய ஆயர் அவர்கள் உடல், உள்ள, ஆன்மிக நலன்கள் அனைத்தும் பெற்று நீடு வாழவும், மக்கள் யாவரும் அருளும், பொருளும் பெற்று, எல்லாரும் எல்லாமும் கொண்டு, இல்லாமை இல்லாமை கண்டு அனைவரும் ஆன்மிக, சமூக, பொருளாதார ஏற்றம் காணவும்... ஆனந்தம் கொண்டோர் பேரானந்தம் காணவும் ‘நம் வாழ்வு’ வாழ்த்தி மகிழ்கிறது.
‘மக்கள் பணியே இறைத் தொண்டு’ எனச் செயலாற்ற உள்ள புதிய ஆயர் ‘மக்கள் ஆயராக’ வாழ்ந்திட, உயர்ந்திட ‘நம் வாழ்வு’ குழுமத்தின் - தலைவர், நிர்வாக ஆலோசகர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், வாசகர்கள், சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், அலுவலகப் பணியாளர்கள், மறைமாவட்டப் பொறுப்பாளர்கள், முகவர்கள் மற்றும் துணை ஆசிரியர்கள் உங்கள் அனைவரின் சார்பாக, புதிய ஆயரை வாழ்த்துகிறேன். அவர்தம் பணி சிறக்க இறையருள் வேண்டுகிறேன்.
அன்புத் தோழமையில்,
அருள்பணி. செ. இராஜசேகரன்
Comment