No icon

எது வளர்ச்சி?

மக்கள் மன்றம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!

அரசைப் பற்றி ஆய்வு செய்யும் இயல்தான் அரசியல். ஓர் அரசு இதுவரை எவ்வாறு இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இனி எப்படி இருக்க வேண்டும்? என்று அறிவியல் புலத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அரசியல், இன்று பிழைப்புத் தேடுபவர்களின் புகலிடமாகி விட்டது; சந்தர்ப்பவாதிகளின் சரணாலயமாகி விட்டது.

நேரிய அரசியல் ஒழுங்கமைவுக்காகத் தேர்ந்து தெளிந்து வரையறுக்கப்பட்டு உருவான ஒரு கட்டமைப்பே அரசு. அந்த அரசின் முதன்மையான நோக்கமே, மக்களுக்கு நன்மை செய்வதும், அவர்களுடைய வாழ்க்கையை வளப்படுத்துவதுமாக இருக்க வேண்டும். அதற்காகவே அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்படுகிறது. அதிகாரம் செலுத்தும் மனிதர்களின் தகுதியையும், தரத்தையும் பொறுத்தே ஆட்சியின் மாட்சியும் நீட்சியும் வீழ்ச்சியும் அமையும்.

அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், நாட்டு நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்களும், மாசற்ற தொண்டு மனம் உடையவர்களும் மட்டுமே முன்பு அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தனர். ஆகவேதான், ‘தத்துவ ஞானிகளே தலைமையேற்று ஆள வேண்டும்!’ என்றார் கிரேக்க அறிஞர் பிளேட்டோ. அவரது பார்வையில் தத்துவம் என்பது உண்மையின் உருவம்! உண்மையைத் தேடும் யாவரும் பொய்மையின் நிழலில் இளைப்பாற விரும்ப மாட்டார்கள். உண்மையை உள்ளார்ந்து நேசித்து வாழ்பவர்களுக்கு, ஒருபோதும் போலி வேடம் அண்டி வராது. அவர்கள் உண்மையின் உருவங்கள்! அதனால்தான், அதிகார இருக்கையைத் தத்துவ ஞானிகள் அலங்கரிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். காரணம், அரசியலும், அதில் அதிகாரம் கொண்டவர்களுமே மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவர்கள். அவர்களுக்கு அறமே அளவுகோலாக இருக்க வேண்டும். அறத்தையும், அரசியலையும் நம் முன்னோர்கள் பிரித்துப் பார்த்ததில்லை. ஆகவேதான் ஐயன் வள்ளுவன், ‘அரசியல் அறம்பற்றி குறிப்பிடும்போது

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு’ (குறள் 384)

என்று குறிப்பிடுகிறார். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்என்கிறது சிலப்பதிகாரம். எந்த மனிதனும் ஆட்சித் தலைமையைத் தகுதியின்றி அலங்கரிக்க நம் மூதாதையர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. ஆனால், ‘இன்று?’ இந்தக் கேள்வி ஆயிரம் தர்க்கங்களை முன்வைக்கிறது. பணம், பதவி, ஆசை, சுக வாழ்வு எனும் பூரிப்பில் வாழ்பவர்கள் மக்களைச் சுரண்டுவதையும், சுரண்டப்பட்டவர்களையே தொடர்ந்து வஞ்சிப்பதையும் வாடிக்கையாக்கிக் கொண்டார்கள். அதன் நீட்சியே, வறுமையும் பசியும் பட்டினியும் ஒரு சாராரை வாட்டுவதும், மற்றொரு சாரார் வளம் கொழுத்து வாழ்வதும் எதார்த்தமானது.

வறுமையின் பிடியில் துவண்டவன் குரலாக...

அமுதசுரபியைத் தான்

நீ தந்து சென்றாய்

இப்போது... எங்கள் கையில் இருப்பதோ

பிச்சைப் பாத்திரம்!

அணைக்கட்டுகளில்

திறக்கப்படும் தண்ணீர்

பள்ளங்களை ஏமாற்றிவிட்டு

மேட்டை நோக்கியே பாய்கிறது!’

என்று குறிப்பிடும் மு. மேத்தாவின் கவிதை இங்கே குறிப்பிடத்தக்கது. அத்தகைய நிலையில் இன்று மக்களின் வாழ்வியல் சூழல் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. விடுதலை இந்தியா கண் விழித்து 75 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இன்று உலகிலேயே அதிகமான ஏழைகள் உள்ள நாடு நம் இந்தியா தான். 45 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் 31 குழந்தைகள் ஐந்து வயதிற்கு முன்பே வறுமையினால் மடிகிறார்கள் என்ற புள்ளி விவரம் மனத்திற்குள் பெரும் வலியை உண்டுபண்ணுகிறது. இந்த வறுமைதான் ஆட்சியாளர்களுக்கு இன்று மூலதனம் ஆகிவிட்டது.

மக்களை, முதலாளி வர்க்கம்-தொழிலாளி வர்க்கம் என இரு வேறு வர்க்கங்களாகப் பகுத்துப் பார்த்தார் அறிஞர் மார்க்ஸ். ஆனால், இவ்விரு வர்க்கங்களையும் சுரண்டிக் கொழுக்கும்அரசியல்வாதி வர்க்கம்எனும் வர்க்கம் உருவாகும் என்பதை அவர் கணிக்கவில்லை. அரசியல் கட்சிக்குள் இவர்கள் அடைக்கலம் தேடிக் கொண்டார்கள். சனநாயகத்தின் குரலாக, ஆணிவேராக இருக்க வேண்டிய அரசியல் கட்சிகள், இன்று மலிவான மனிதர்களின் சூதாட்டக் களமாகிவிட்டன. ‘மக்களால் மக்களுக்காகஎன்று ஏற்படுத்தப்பட்ட இந்திய சனநாயக அரசு முறை, இன்று அப்பாவி மக்களை அரசியல் தந்திரவாதிகள் சுரண்டுவதற்கு வசதியான வாகனமாகிவிட்டது. மக்கள் அடிப்படை வாழ்வா தாரத்திற்கு இவர்களையே நம்பி இருக்க வேண்டிய வறுமை நிலைக்கு ஆளானதால், இலவசங்களால் இனிப்புத் தடவி, இனிக்க இனிக்கப் பேசுகிறார்கள்.

தெற்கு முதல் வடக்கு வரை இன்று இலவசமே ஆட்சி அரியணைக்குப் பாதை வார்க்கிறது. ஏழை ஒருவனுக்கு இலவசமின்றி, ஏங்கும் அரசியல்வாதிக்கு அரியணை இல்லை. பாவம் இவர்கள்...

துதிக்கையைப் பிச்சைப் பாத்திரமாய் மாற்றிவிட்ட

யானைப் பாகர்கள்!

சீட்டெடுப்பது தங்களின் கெட்டகாலம் என்பதைக்

கிளிகள் அறியாமல் பார்த்துக் கொள்கிற சோதிடர்கள்

என்கிற நெல்லை ஜெயந்தாவின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையில் ஒவ்வொரு கட்சியும், அதன் தலைவர்களும் அள்ளி வீசிய வாக்குறுதிகளைப் பார்க்கும்போது, கட்சிகள் வளம் படைத்திருக்கின்றன என்று எண்ணுவதா? அல்லது மக்கள் இன்னும் அதல பாதாள வறுமையில் வாடுகிறார்கள் என்று கணிப்பதா? பிறகு எப்படி இந்தியா ஒளிர்கிறது? இன்னும் சில ஆண்டுகளில் இந்த நாடு வல்லரசாகி விடும் என்று இவர்களால் கூச்சமின்றிக் கூற முடிகிறது?

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால், மகளிருக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை, பேருந்துகளில் இலவசப் பயணம், ரூ.500 விலையில் சமையல் எரிவாயு, 200 யூனிட் இலவச மின்சாரம், மாணவர்களுக்கு ரூ. 5 இலட்சம் வரையில் கல்வி உதவித் தொகை எனத் தெரிவிக்கும்போது, கே. சந்திரசேகரராவின் பாரத இராஷ்டிர சமிதியோ... அதற்கும் ஒரு படி மேலே சென்று ரூ. 3000 உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளிக்கிறது, பா... அதற்கும் மேலே. இந்த ஐந்து மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இந்திய அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல், மற்ற மாநிலச் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தல்கள் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

இத்தகைய இலவசங்களால் அவற்றைப் பெறும் நிலையில் உள்ள மக்களின் வறுமையை முற்றிலுமாகப் போக்கிவிட முடியுமா? ஆளும் ஒன்றிய பா... அரசு இலவசத் திட்டங்களை எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தும் திட்டம் வளர்ச்சிக்கான திட்டமா? வேலை வாய்ப்பு, உயர்கல்வி, மருத்துவக் கட்டமைப்பு எனச் சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்தாது, இலவச வாக்குறுதிகளை அளிப்பதா உண்மையான வளர்ச்சி?

எது வளர்ச்சி? நாளைய விடியலுக்கான அதிகாரம் நம் கையில் உள்ளது. கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படுமுன், விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. இலவசங்கள் வாரி வழங்கும் கட்சிகளை நிராகரிப்போம்! பன்முனை வளர்ச்சியை முன்னெடுக்கும் கட்சிகளை ஆதரிப்போம்!

விடியல் பிறக்கட்டும்; நமது வாழ்வும் சிறக்கட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment