No icon

ஏன் இறைவா? ஏன்?

உயிர்ப்புப் பெருவிழாவான ஏப்ரல் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையிலுள்ள நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், மட்டக்களப்பு சியோன் ஆலயம் உள்ளிட்ட எட்டு இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் மனிதத்தன்மையற்றது; கொடூரமானது. மானுடத்திற்கு  எதிரானது. புனித செபஸ்தியார் ஆலயத்தின் உயிர்த்த ஆண்டவரின் திருச்சுருபத்தில் படிந்துள்ள சதைக்கிழிசல்களும் இரத்த நாளங்களும்  உயிர்த்த ஆண்டவரின் உடலெல்லாம் காயங்கள் போன்ற தோற்றத்தைத்தான் ஏற்படுத்துகின்றன. ஐந்து காயங்களைக் கொண்டவர் உடலெல்லாம் இரத்த வாடை வீசுகிறது. ஒட்டுமொத்தமாக 45 குழந்தைகள் இங்கே கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஏதோ ஓர் அரசியல் சதி இருப்பது போன்றே தோன்றுகிறது. 2020 ஆம் ஆண்டு இலங்கை அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுதினம் நெருங்கும் வேளையில் நடைபெற்றுள்ள இத்தாக்குதல் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. இலங்கை அதிபர் மைத்ரி பாலாவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இங்கே ஏழாம் பொருத்தம்.  இந்திய உளவுத்துறை ராவே என்னைக் கொல்லப் பார்க்கிறது என்று பீதி கிளப்பியவர்தான் அதிபர் மைத்ரி பாலா. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமென்று இடையிலே அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சித்தார் மகிந்த ராஜபட்சே.  இலங்கையின் அண்டை நாடான மாலத்தீவிலும் அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுகிறது.
எனவே  இந்த அரசியல் சதுரங்கத்தில் தமிழ்க்கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கியுள்ளது போலவே தென்படுகிறது. ஒரே சமயத்தில் மத ரீதியாகவும் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் இவர்கள் பலிகடா ஆக்கப் பட்டுள்ளனர். 
இவ்வாண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி மாவனெல்லா அருகிலுள்ள புத்தளம் தென்னந்தோப்பில் 60 லிட்டர் நைட்ரிக் அமிலம், 200 டெட்டனேட்டர்கள், 200 கிலோ வெடிமருந்து, வெடிகுண்டு தயாரிக்கும் மூலப்பொருள், கம்பி வடம், லேப்டாப்புகள்,கேமராக்கள், உலர் உணவுப் பொருள்கள், கூடாரம் அமைப்பதற்கான உபகரணங்கள் கைப்பற்றியுள்ளனர். நான்குபேரைக் கைது செய்துள்ளனர். அப்போதே அரசு இயந்திரம் விழித்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பைத் தவிர்த்திருக்கலாம். அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காதது ஏன்? 
இந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையின் தேசிய தவ்ஹித் ஜமாத் உள்ளிட்ட  உள்நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் துணையின்றி இத்தாக்குதல் நடைபெற்றிருக்காது. இலங்கை முழுவதுமே இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் உள்ள நிலையில் இவர்களைக் களையெடுக்காதது ஏன்?
நீர்கொழும்பு, கொச்சிகடை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தமிழ்க்கிறிஸ்த வர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்களில் அதுவும் தமிழ்த்திருப்பலி நடைபெறும் சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் அத்தனை பாதுகாப்புத் தடைகளையும் மீறி ஏனைய ஐந்து இடங்களில் வெடிகுண்டுகள் எப்படி கொண்டு செல்லப்பட்டது?
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே இவர்கள் தான் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தி சிசிடிவி காட்சிகளை வெளியிட்டது யார்? யாருடைய உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டது? இணையதளமும் சமூக வலைதளங்களும் முடக்கப்பட்ட நிலையில் இலங்கை தவிர ஏனைய நாடுகளில் படுகொலை தொடர்பான அனைத்து படங்களும் வீடியோக்களும் வெளியே வந்தது எப்படி?
வயநாடு உட்பட கேரளாவில் 20 தொகுதிகளும் அகில இந்திய அளவில் 116 தொகுதிகளில் மூன்றாம் கட்ட பாராளுமன்ற வாக்குபதிவு நடைபெறும் ஏப்ரல் 23 ஆம் தேதி இப்படிப்பட்ட ஊடகச் செய்திகளை இந்தியாவிற்குப் பரப்பி, முஸ்லீம்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக முன்னிறுத்தியது ஏன்?
இந்திய உளவுத்துறை தகுந்த எச்சரிக்கை கொடுத்தும் இலங்கை அரசு அதனை அலட்சியம் செய்தது ஏன்?
இனப்படுகொலை செய்த சர்வாதிகாரி ராஜபட்சேயை, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒடுக்க மீண்டும் இலங்கை அதிபராக்கவேண்டும் என்று ஆதரவுக் குரல் இந்தவேளையில் கேட்பது ஏன்?
குண்டு வெடிப்பு நடைபெற்று ஏறக்குறைய 24 மணிநேரம் கழித்து சிரியா மற்றும் ஈராக்கில் செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது ஏன்?
குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக் கையை 359 என்று அறிவித்து, மக்களிடையே பதட்டத்தையும் பயத்தையும் விளைவித்துவிட்டு, நான்கு நாட்களுக்குப் பிறகு பலி எண்ணிக்கை 253 என்று குறைத்தது ஏன்? பலியான வெளிநாட்டினரின் எண்ணிக்கை 45 என்று அறிவித்துவிட்டு, பின்னர் 40 என்று குறைத்தது ஏன்?
விடுதலைப்புலிகளுடனான சண்டையின் போது கொல்லப்பட்டவர்களை  கூட்டமாக அடக்கம் செய்த புகைப்படங்களை தற்போது இணையத்தில்
உலவவிட்டு, மக்களை குழப்புவது ஏன்? சிங்கள பேரினவாத பயங்கரவாதக் குழுக்களையும் இஸ்லாமிய
அடிப்படைவாத அமைப்புகளையும் தடைசெய்யாமல் கொம்பு சீவி விடுவது ஏன்? 
ஏதோ  ஒரு பாதுகாப்புத்துறைச் செயலரை பதவி நீக்கம் செய்து பலிகடா ஆக்கிவிட்டு அதிபர் தப்பிப்பது ஏன்?... இப்படி இலங்கை அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் நிறையவே உள்ளன.
சிலுவையையும் குல்லாவையும் ருத்திராட்சத் தையும்  எதிரியாக்கிவிட்டால் மதவாதம் மறைந்து விடுமா? என்ன?
எம்மதத்தின் தீவிரவாதத்தையும் எவரும் நியாயப்படுத்த முடியாது. செத்தவர்களை அடக்கம் செய்வதற்கு முன்பு சமய-இன தீவிரவாதத்தையும் அடக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் கல்லறைகளே இந்த பூமியை நிறைக்கும்.

Comment