No icon

​​​​​​​பொன்விழா ஆண்டை நோக்கி!

கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம் எனும் இலக்குடன் புரட்சி வேள்வியில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழ் - ‘நல்லவர்களின் நாடித்துடிப்பு நம் வாழ்வு தனது 50-வது அகவையை எட்டவிருக்கிறது. பொன்விழா ஆண்டை நோக்கி அடி எடுத்து வைக்கிறது.

நாம் வாழும் இந்தப் பூமிப் பந்து, சமூகம், அரசியல், ஆன்மிகம் என்ற படிநிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளதுஇத்தகைய சூழலில், தமிழ்நாடு திரு அவையின் இறை நம்பிக்கையாளர்களை ஊடக வழியில் ஒன்றுபடுத்தவும், சமூக-அரசியல்-ஆன்மிக விழிப்புணர்வு தந்து வழிகாட்டிடவும், ‘சிறுபான்மையினர் என அடையாளப்படுத்தப்பட்ட நமக்கு, நமது உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்க ஓங்கி ஒலிக்கும் குரலாகவும் செயல்படஊடகம் ஒன்று தேவை என்பதை உணர்ந்த ஆயர் பேரவை, 1975 -ஆம் ஆண்டு சனவரி திங்கள் 9-ஆம் நாள் தனது முதல் ஊடகக் குழந்தையாகநம் வாழ்வு எனும் வார இதழைப் பிரசவத்திருந்தது.

ஆளும் வளரணும்; அறிவும் வளரணும்; அதுவே வளர்ச்சி என்பதுபோல அழகு வடிவத்தில் அறிவுக் களஞ்சியமாய்த் தமிழ்ச் சமூகத்தில் உலாவரும் இக்குழந்தை தடம் பதித்தக் காலச்சுவடுகள் ஏராளம். 48 ஆண்டுகள் கடந்து, 49-ஆம் ஆண்டுக்குள் அடி எடுத்து வைக்கும்நம் வாழ்வு, எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு சனவரி திங்கள் தனது பொன்விழாவைக் கொண்டாடவிருக்கிறது. இக்குழந்தையின் பிறப்பு - வளர்ப்பு - வனப்பு என ஒவ்வொரு நிலையிலும் உடன் பயணித்த ஆயர் பெருமக்கள், முதன்மை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், நிர்வாக ஆலோசகர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், மறைமாவட்ட நிர்வாகத்தினர், எழுத்தாளர்கள், பல்வேறு படைப்பாளிகள், பேராதரவு தந்த துறவற சபைகளின் தலைவர்கள், இந்திய  மற்றும் தமிழ்நாடு அரசு ஊடகப் பணி இயக்குநர்கள், தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணையத் தலைவர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு இவ்விதழ் சென்றடைய பேராதரவு தந்த பள்ளி நிர்வாகத் தந்தையர்கள், அருள்சகோதர-சகோதரிகள், பங்கு அருள்பணியாளர்கள் பொருளாதார பங்களிப்பில் பேருதவியாக இருந்த வர்த்தக நிறுவனத்தார், இவ்விதழை அச்சிடும் பணியில் நீண்ட காலமாக இன்று வரை உடன் பயணிக்கும் லில்லி சூசை ஆப்செட் அச்சகத்தார், அலுவலகப் பணியிலும், இதழைப் பரவலாக்கும் பணியிலும் எந்நேரமும் உடன்(ல்) உழைப்பைத் தந்த அலுவலகப் பணியாளர்கள், மறைமாவட்டப் பொறுப்பாளர்கள், சிறப்பாக, இவ்விதழின் வளர்ச்சியில் பெரிதும் பங்கு வகிக்கும் என் இனியநம் வாழ்வு வாசகப் பெருமக்கள், சந்தாதாரர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும்நம் வாழ்வு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

அன்று, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அரசியல் அறிஞர் எட்மண்ட் பர்க், ஊடகத்தைசனநாயகத்தின் நான்காவது தூண் (Fourth Estate) என்று குறிப்பிட்டார். காரணம், ஊடகங்களுக்கு என்று சிறப்பான சமூகப் பொறுப்பு இருப்பதாக அவர் உணர்ந்தார். உரிமைகள் பறிபோகாமலும், மக்கள் மன்றங்கள் பாழ்பட்டு விடாமலும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. ஒவ்வோர் ஊடகமும், குறிப்பாக, நாளிதழ்கள், வார இதழ்கள், சிற்றிதழ்கள், தொலைக்காட்சி, இன்று பெரிதும் உலாவரும் சமூக வலைதள ஊடகங்கள் என அனைத்துமே தன்னிலே மிகப்பெரிய சமூகப் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன. இவ்வூடகங்கள் ஒவ்வொன்றுமே சமூக நலனைப் பாதுகாக்கும் காவலர்கள்; மக்களை நல்வழிப்படுத்தும் நற்பண்புகளைப் பயிற்றுவிக்கும் நெறியாளர்கள். ஆகவேதான், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய காந்தி, தன் கருத்துகளைப் பரப்ப, ‘இந்தியன் ஒபீனியன் என்ற இதழை வெளியிட்டார். “இதழைத் தொடங்கிய முதல் மாதத்திலேயே பத்திரிகையின் ஒரே நோக்கம் மக்கள் சேவை தான் என்பதை நான் உணர்ந்து கொண் டேன் என்றார்.

அத்தகைய விசாலப் பார்வையில், அரை நூற்றாண்டுக்கு முன்பே இதழியியல் துறையில் அடி எடுத்து வைத்து, கிறிஸ்தவம் கடந்து ஒட்டுமொத்தச் சமூகத்தின் வாழ்வியலை முன்னிறுத்தி, மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உண்மையை எடுத்துரைக்கவும், மக்கள் தங்கள் சமூகச் சவால்களைத் துணிவுடன் சந்திக்கவும், அடிப்படை உரிமைகளுக்காகப் போராட அவர்களை ஒன்றிணைக்கவும், சமத்துவ விடியலின் விடுதலை நாயகர் இயேசுவின் இறையரசு மதிப்பீடுகளை எங்கும் விதைக்கவும் பல முன்னெடுப்புடன் இப்பெரும் பணியை மேற்கொண்ட தமிழ்நாடு ஆயர் பேரவையின் தகைசால் சான்றோர்கள் யாவரும் நம் பாராட்டுதலுக்கும், நன்றிக்கும் உரியோரே! இப்பெரியோர்களின் எதிர்நோக்கும், அவர்கள் முன் வைத்த இலக்கும், ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கான வரைவுத் திட்டங்களும் வீரியம் குறையாமல் பயணித்து வந்திருப்பது பாராட்டுதற்குரியதே!

இப்பயணத்தில், ‘நம் வாழ்வு தன் பொன்விழா ஆண்டைப் பன்முனைத் தயாரிப்புடன் பொருள் பொதிந்த வகையில் சிறப்பிக்கும் வண்ணம், இந்த 2024-ஆம் ஆண்டு முழுவதையும் அதன் முன்தயாரிப்புக் காலமாக மேற்கொள்ளவிருக்கிறது. ஆகவே, பல்வேறு தளங்களில், வாசகர்கள்-எழுத்தாளர்கள்-இளையோர் என யாவருக்கும் ஆக்கமும், ஊக்கமும் தந்திடும் பல திட்டங்களை முன்னெடுக்கவிருக்கிறது. குறிப்பாக...

          ‘50-ஆம் ஆண்டு பொன் விழாவில் 50 ஆயிரம் சந்தாதாரர்கள் என்ற இலக்குடன் பயணிப்பது.

          வாசகர்களை ஊக்குவிக்க, மறைமாவட்டந்தோறும்வாசகர் வட்டம் நடத்துவது.

          மறைமாவட்ட இதழ்களின் முதன்மை ஆசிரியர்களை ஒன்றிணைத்து, கூட்டொருங்கியக்கத் திரு அவையாகச் செயல்பட புதிய செயல்திட்டங்களைத் தீட்டுவது.

          கத்தோலிக்க இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களைத் தமிழ்நாடு அளவில் ஒன்றிணைத்துச் செயல்படும் வழிமுறைகளை முன்னெடுப்பது.

          அனைத்து மறைமாவட்டங்களிலும்இளையோருக்கான எழுத்தாளர் பயிற்சிப் பாசறை மேற்கொள்வது.

          பள்ளிகளில், கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு  ‘இதழியல் ஊடகப் பயிற்சி அளிப்பது.

          பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்வாசிப்புத் திருவிழா / ‘புத்தகப் பெருவிழா நடத்துவது. அங்கு நமது கிறிஸ்தவ நூல்கள், படைப்புகள் கிடைக்க ஏற்பாடு செய்வது.

          அலுவலக வளாகம் விரிவுபடுத்தப்பட்டு, தமிழ்க் கிறித்தவ படைப்பாளர்கள்/பதிப்பகத்தார் நூல்கள் கிடைக்கும் வண்ணம் நம் வாழ்வு பொன்விழா-புத்தக நிலையம் உருவாக்குவது.

          எதிர்வரும் காலங்களில் இவ்விதழியல் பணி சிறப்பாகத் தொடர்ந்து நடைபெற, பொருளாதார நிலையில் தன்னிறைவு காணும் வண்ணம், ‘நம் வாழ்வு-புரவலர்களை உருவாக்குவது.

          துறை சார்ந்த பல்வேறு போட்டிகள் முறையே நடத்தப்பட்டு பரிசளிப்பும், படைப்பாளிகள், மற்றும் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்குப் பரிசளிப்பும் கொண்ட வரலாறு படைக்கும்பொன்விழாச் சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்வது.

இப்பணிகளைச் சிறப்பாக முன்னெடுக்க பேருதவியும், ஆலோசனையும், வழிகாட்டுதலும் நல்கும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவரும், நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கத் தலைவருமான மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகைக்கும், நம் வாழ்வு நிர்வாக ஆலோசகர்களுக்கும், ஆசிரியர்குழு உறுப்பினர்களுக்கும், துணை ஆசிரியர்களுக்கும் மற்றும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாருங்கள்... சிறந்த சிந்தனைகள் ஒவ்வொரு திசையில் இருந்தும் நம்மை வந்து சேரட்டும்!

உண்மையும், நீதியும், உரிமையும் கொண்ட சமூகம் நம்மால் இன்றே மலரட்டும்!

 

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment