No icon

வட கிழக்கில் பா.ஜ.க. ஆட்சி: கிறிஸ்தவர்களின்  ஆதரவுக்குச் சாட்சியா?

அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, மிசோரம், மணிப்பூர், அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கிய வட கிழக்குப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் பா.ஜ.க.வின் கை ஓங்கி இருக்கிறது. இத்தகைய சூழலில் டிசம்பர் 25 அன்று தில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஒன்றிய முதன்மை அமைச்சர் திரு. மோடி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வில், “வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழ்கின்றனர்; பல வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகின்றது; கிறிஸ்தவர்கள் மத்தியில் பா.ஜ.க.வுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதற்கு இதுவே சாட்சி” என்று குறிப்பிட்டிருக்கிறார். வட கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் தேர்தல் முறையும், உண்மை நிலவரமும் ஊரறியும்; உலகறியும். இம்மக்களிடம் கிறிஸ்தவம் வேரூன்றிய அளவுக்கு, அரசியல் அறிவு கிளை பரப்பவில்லை என்பதை யாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றே உணர்கிறோம்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் வியூகத்தில் மோடி எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் ஆளுமை என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பா.ஜ.க. மேற்கொள்ளும் தந்திர உத்திகளில் இதுவும் ஒன்று. ‘அனைவருக்குமான வளர்ச்சி’, ‘அனைவருக்குமான தலைவர்’ என்ற சொல்லாடல் இனி தேர்தல் பரப்புரையில் அதிகமாக ஒலிக்கப்படும். ஆண்டு முழுவதும் ‘உலக மகா’ நடிகராக உலா வருபவர், தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் தன் முழு நடிப்பையும் வெளிப்படுத்துவார். இப்பொழுதுதான் உறக்கத்திலிருந்து விழித்தவர்போல, கிறிஸ்தவர்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய, இன்றும் ஆற்றி வருகின்ற பணிகளையும், பங்களிப்பையும் குறிப்பிட்டிருக்கிறார்.

“சமூகத்திற்கு வழிகாட்டுவதிலும், சேவையாற்றுவதிலும் கிறிஸ்தவச் சமூகத்தினரின் பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களின் பணிகளை அங்கீகரிக்க மறுத்ததை ஏனோ மறந்துவிட்டார். “சமூகத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்குச் சேவையாற்றுவதில் கிறிஸ்தவச் சமூகத்தினர் எப்போதும் முன்னிலையில் இருப்பார்கள்” என்று குறிப்பிட்டவருக்கு, வட இந்தியப் பகுதிகளிலும் குறிப்பாக, அண்மையில் மணிப்பூரில் கிறிஸ்தவர்களின் ஆலயங்கள், கல்வி நிறுவனங்கள் நொறுக்கப்பட்ட போதும், பாலியல் வன்கொடுமையால் மனிதாபிமானமற்ற துயரங்களை மக்கள் சந்தித்தபோதும் ஏனோ அமைதி காத்தார். “நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு கிறிஸ்தவத் தலைவர்களும், சிந்தனையாளர்களும் பங்குவகித்துள்ளனர்” என்று கூறத் தெரிந்தவருக்கு, இன்று திருத்தி எழுதப்படும் வரலாறு, இந்து அரசர்களின் ‘பொற்கால’ ஆட்சி, அவர்களின் வெற்றி, இந்துத்துவா தலைவர்கள் குறிப்பாக, சவார்க்கர், கோட்சே போன்றோர்களை முன்னிலைப்படுத்தும் வரலாற்றுப் புனைவுகள் போன்றவற்றை அறிந்தும், ஏனோ மௌனம் காக்கிறார்.

நாட்டின் கல்வி, சுகாதாரத் துறைகளில் கிறிஸ்தவச் சமூகத்தினரால் நடத்தப்படும் நிறுவனங்கள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாக அறிந்தவருக்கு, பா.ஜ.க. வினர் கிறிஸ்தவ, சிறுபான்மை நிறுவனங்களின் ஆசிரியர்களைத் தாக்குவது, நிர்வாகத்திற்கு இடையூறு கொடுப்பது, கல்வி வளர்ச்சிப் பணிகளைத் தடுப்பது, நிறுவனங்கள் மீது தேவையற்ற அவதூறு பரப்புவது குறிப்பாக, மிக்கேல்பட்டி பள்ளி நிகழ்வு போன்ற சூழல்களில் அரசியல் செய்யும்போது, ஏனோ ஒன்றும் அறியாத உத்தமராக உலா வந்தார்! கிறிஸ்தவர்கள் சந்தித்தக் கொடுமைகளின்போது நீண்ட மௌனம் காத்துவிட்டு, இப்போது காலம் கடந்த பின், ‘தனது காலம் அறிந்து’ உரக்கக் கூறுவது, விடியாத பொழுதிலேயே ஊரை எழுப்பக் கூவும் சேவலைப் போன்று ஏதோ உள்நோக்கம் கொண்டது என்பதை யாவரும் அறிவர்.

“பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு” (குறள் 482)              

என வள்ளுவர் குறிப்பிட்டது இத்தகையோருக்கே. காலம் தவறாமல் காரியம் ஆற்ற வேண்டும் எனக் குறிப்பிடும் ஐயன் வள்ளுவர், அவ்வாறு முயற்சி மேற்கொள்வது வெற்றியை நழுவவிடாமல் கட்டிப் பிணைக்கும் கயிறாக அமையும் என்கிறார். ஆனால், நமது ஒன்றியத் தலைமை அமைச்சர் காலம் கடந்து, இப்போது பசுத்தோல் போர்த்தி வரும் புலியாக உலா வருவதை எங்ஙனம் ஏற்பது!

அவரது உரையின் உச்சம்தான் எல்லாருடைய புருவத்தையும் உயர்த்தியது. அதாவது, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைத் தத்துவங்களான - அவருடைய இரக்கம், சேவை மனப்பான்மை, சமமான நீதியுடன் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் எண்ணம் ஆகிய மாண்புகள் இந்திய நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில்  ‘தனது’ அரசுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பதாகக் குறிப்பிட்டதுதான். கிறிஸ்துவின் இறையரசு, அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம்  என்ற உன்னத மதிப்பீடுகளால் அடித்தளமிடப்பட்டது. ‘சல்லடை போட்டுச்’ சலித்தாலும் இவற்றில் ஏதேனும் ஒன்றைக்கூட இந்த ஆட்சியில் காண முடியவில்லையே! பிறகு எப்படி, இவரால் மட்டும் இப்படிப் பேச முடிகிறது? என்ற கேள்வி நம்மில் எழுவதற்கு வியப்பொன்றுமில்லை.

வளர்ச்சியின் பலன்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்து வருவதாகக் குறிப்பிடும் இவர்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பதற்குக் காலம் தாழ்த்துகிறார்; ஒன்று, இரண்டு அல்ல... பட்டியலினத்தவருக்கும், பூர்வக் குடிகளுக்கும், மலைவாழ் மக்களுக்குமான உரிமைகளைப் பறிக்கிறார். பல முரண்களைக் கொண்ட இந்த அரசு, திறம்படச் செயல்படுவது போல கட்டமைக்கப்படுகிறது.

இறுதியாக, கடந்த 2021-ஆம் ஆண்டு நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்று என்று நினைவு கூறும் இவர், அவரை இந்திய நாட்டிற்கு அழைக்க வேண்டுமென இந்திய ஆயர் பேரவைப் பிரதிநிதிகள் மத்திய அரசை பலமுறை வலியுறுத்தியும் கேட்கச் செவியற்றவராக, வணங்கா கழுத்துடையவராக இவர் நடந்துகொண்டதை என்றும் மறக்க முடியாது.

எங்கிருந்து வந்தது இந்தத் திடீர் பாசமும், திடீர் அக்கறையும்? காலம் காலமாக வஞ்சிக்கப்படுபவர்கள் கணப்பொழுதில் புகழப்பட்டால் ஆயிரம் சந்தேகங்கள் எழத்தானே செய்யும்! ‘எனது மூன்றாவது ஆட்சிக் காலம்’ எனப் பெரும் இறுமாப்புடன் குறிப்பிடத் துவங்கியுள்ள இவரின் ஒற்றை வரிக்குள் ஆயிரம் அர்த்தங்களும், பெரும் அச்சங்களும், அளவிட முடியா ஆணவமும் குடிகொண்டிருக்கின்றன என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

வெற்றியாளர்களைப் பற்றி மதிப்பீடு செய்வது கூடாது; அவர்கள் விமர்சிக்கப்படவோ, கேள்விக்குட்படுத்தப்படவோ கூடாது என்று கூறுபவர்களுக்கு அன்றே சோவியத்தின் இரும்பு மனிதர் ஸ்டாலின், “வெற்றியாளர்கள் மதிப்பிடப்படவும், விமர்சிக்கப்படவும், கேள்விக்குள்ளாக்கப்படவும் வேண்டும். அப்போதுதான் அவர்கள் தலைக்கனம் இல்லாதவர்களாகவும், தன்னடக்கம் உள்ளவர்களாகவும் இருப்பர்’ என்று கூறினார்.

இப்படிப்பட்டவர்களைக் கணிக்கும்போது,

‘வணக்கம் என்பார் வணங்க மாட்டார்;

நலம் பார்த்தறியார் நலமென்றெழுதுவார்;

பொதுவான பொய்களில் பொலிகிறது வாழ்க்கை!’

என்ற  கவிஞர் பாலா-வின் கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. போலிகளை அடையாளம் காண்போம்; உண்மை உடனே வெளிப்படும்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment